ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம் 6
2
எங்கள் வாடகை கீற்று வேயந்த
பிராமண குடிசைக்குள்
சூரியன் வருவான் சந்திரனும் வருவான்
ஆனால் கோடிகளில் சம்பாதிக்கத் தெரியாத தம்பியும்
சில கரப்பான்களும் வரக்கூடாதாம்..
அண்ணா சொல்வான்..
விளக்குமாற்றால் அடித்தால் கரப்பான் சாகும்
பெர்சனோ நான் கிராட்டா ஒரு நாளும் சாகாது..
வேண்டாத தம்பி கொடுத்த
கிழிந்த ரூபாய் கிடக்கும் உண்டியல்...
சாயம் போன கிழிந்த உள்ளாடைகள்...
எப்போதோ பிடிக்கப்பட்ட
அவன் அப்பாவுடன் இருக்கும் நிழற்படம்...
அண்ணா பிள்ளைக்காக
அவன் தன் முதல் சம்பாத்யத்தில் வாங்கிய
மூன்று சக்கர மிதிவண்டி...
இன்னும் இன்னும் அழிக்கவியலா நினைவுகள் என
எல்லாமும் அண்ணனின் புதுவீட்டில் இருக்கலாம்...
ஆனால்
பொருளீட்டும் திறனற்று ஊர் சுற்றும் தம்பியும்
மீசை வீசி அடுப்படி சுற்றும் சில கரப்பான்களும்
இருக்கக் கூடாதாம்..
அண்ணா சொல்வான்...
ஹிட் அடித்தால் கரப்பான் சாகும்
பெர்சனோ நான் கிராட்டா ஒரு நாளும் சாகாது..
அண்ணனுக்கு சாம்பாரும்
வெட்டி தம்பிக்கு ஊச வற்றல் குழம்பும்
ஊற்றிய எங்கள் குடிசைக்குள்
அவ்வப்போது தென்றல் வந்து போனது
சில காக்ரோச்களும் வந்து போனது...
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரிந்து போனது பார்..
அப்போது தான்
பெர்சனோ நான் கிராட்டா
விஸ்வரூபம் எடுத்தது..
அண்ணணின் பழைய புத்தகங்கள்
அண்ணன் சுவாசித்து மீந்த ஆக்சிஜன்
அண்ணன் கழற்றி வீசிய பழைய துணிகள்
அண்ணன் சாப்பிட்ட பின் மீந்த சோறு
எல்லாமும் இவனுக்கு போதுமானதென
அண்ணன் சொல்வான்..
ஆனால் அண்ணனின் காலணி மட்டும்
இவனுக்குப் போதாமல் போன போது
தெறித்தோடிய கரப்பான் மேல்
அப்பன் மருந்தடித்தான்..
மருந்தடித்தால் கரப்பான் சாகும்...
நாணயத்தால் அம்மாவின் நாணயம் கூட சாகும்...
ஆனால் மிதிபட்டால் வெகுண்டெழும்
பெர்சனோ நான் கிராட்டா ஒரு நாளும்
சாகவே சாகாது..
ராகவபிரியன்
Comments
Post a Comment