ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6
1.
வாழ்வுக்கடல் நடுவின் மரமொன்றில் இவனின் சொந்தக் கூடமைதல் வேண்டும்..
அகழ்தல் இலகுவான வாழ்வின் தரைப்பகுதி தருக்களில்
வேர் அரிக்கும் கரையான்கள் ஏறக்கூடும்.
குரூர மந்திகள் கூட்டைப் பியக்கத் தாவ
சில காகங்கள் தலை சாய்த்து...
இடவலமாய் அழுத்தித் தேய்த்து...
சுய அலகை சுத்தம் செய்ய அமரக்கூடும்..
இவனின் மெலிந்த கிளை தொங்கும் குடுவைக்கூட்டை விஷ நாகங்கள் தவழ்ந்தேறி..
தன் பிளவு நாவால் தீண்டக்கூடும்.
ஆதலால்..
சதா அலைவீசும் கடல் நடுவின் தனிமைத் தருவில் புயல் தாங்கி செயல் கூடும் கூடமைந்தால்...
வாழ்வின் தருவெங்கும் பழம் உதிக்கும்.
இளைப்பாற இடமின்றி கூடமைக்கத் தடுமாறும்
பிராமணனும் குருவியும்...
பறந்தலையும் வானம்
ஒன்றன்றி வேறல்ல.. ஆமாம்..ஒன்றன்றி வேறல்ல..
இன்று..
கூடமைக்கும் நெற்தோகை தற்சந்தை விலையதிகம்.
மயிற்பீலி பிளந்து அளந்து வடிவமைக்கும் இவனின் அலகுகளில் வலியதிகம்..
தேடித் தேடிச் சேர்த்த பனையோலை தென்னங்கீற்று நுகர்வலைச்சல்
இவனின் சிறகுதிர்ந்த இறகுகளை அயர்த்திப் பார்க்கும்..
எனினும்
இரு அறையே போதும் தான்.
இணையிருக்கும் வாழ்வின் இருள் போக்க மின்மினிகள் பிடித்தாக வேண்டும் தானே..
குருவியெனினும் கூடெனினும் இரவு பகல் வந்து வந்து போகும் தானே..
ஆதாலால் உலகத்தீரே..
வாழ்வின் கடல் நடுவே
கூடமைக்கத் தோதான
தனித்த தருவிருந்தால்
தகவலொன்றை
கட்செவி அஞ்சலில்
தயவுசெய்து கடுகித் தாருங்கள்..
ராகவபிரியன்..
No comments:
Post a Comment