இறையை உணர்தல் அல்லது அரங்கனை அறிதல் என்பது அமைதியின் தேடல் அல்ல. அமைதியின் தேடல் கூட இறைமையின் வடிவமெனச் சொல்லாம். ஆனால் இறையை உணர்தல் என்பது ஆன்மீக அனுபவ அறிவு நிலையின் உச்சம். அமைதியின் தேடலும் இறையினை தேடுதலும் வெவ்வேறானவையென உரத்தே சொல்லவியலும்.
இறையியல் தத்துவங்கள் எந்த மதத்தினுடையதாக இருப்பினும் அதை சுயமுன்னேற்றத்திற்கு பயன்படுத்துதல் அனுமதிக்கப்படாத ஒன்று. அப்படியான பயனை நோக்கிய நகர்வு இறையை உணரும் தேடலின் திசையைத் தொலைத்தல் போன்றது.. வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட ஆன்மீகச் சடங்குகளின் வழி அருவமான அரங்கனின் உருவத்தைக் காண்பதென்பதும் இயலாத ஒன்று. ஆயினும் தொடர் ஆழ்மன இயங்காற்றல் ஓரளவு அரங்கனின் உருவக் கோட்டுருவை அகக் கண்ணில் கொண்டு நிறுத்தவியலும். அவ்வாறான இயங்கு நிலையில் கிடைக்கும் மனச்சலனமற்ற நிலை அமைதி நிலையாகாது. புறவய சிந்தனைகள் ஆழ்மன இயங்கு நிலையை கலைத்துப் போடும் ஆற்றல் கொண்டவை. மேற்சொன்னவற்றின் நுண்மக் கூறுகளை அறிந்து கொண்டால் அரங்கனை அறியவியலும்.
அதுபோன்ற புறவய சிந்தனைகளின் தொடர் தாக்குதல் ஆழ்மன இயங்கு நிலையை சற்றே அசைக்கத் தொடங்கியதின்று. மெல்ல புறப்பட்டு காஞ்சியின் இயக்குமுகத் தெய்வம் அன்னை காமாட்சி உறையும் கோவிலுக்குள் செல்கிறேன். சதா பின் தொடரும் இருத்தலிய நிலைத்தன்மைச் சவாலின் துரத்துதல் இருண்மையை நோக்கிச் செலுத்தத் தொடங்குகிறது... அச்செலுத்துவிசையினை மீறி செயல்படவேண்டுமெனில் கோவில் புகுந்தே ஆகவேண்டும். ஆக இப்புனித அகவய கட்டளையின் இறையியல் கோட்பாடு கோவில் புகுதல் மூர்த்த தரிசனம் பின் பிரகாரச் சுற்றல் என்பதை வகுத்தளித்திருக்கிறது. ஆகவே கடந்த பதினாங்கு மாதங்களின் பின் காமாட்சி ஆலையம் புகுவேண்டியதானது. இது அமைதியற்ற நிலையின் வெளிப்பாடல்ல. ஆனால் அமைதியாய் உறங்கும் திருக்கள்வன் அரங்கன் அன்னையின் கோவில் திருக்குளத்தருகில் கோவில் கொண்டிருக்கிறான். அமைதியின் நிஜம் அரங்கனின் துயிலிய தத்துவம் சொல்லும் நிஜமன்றி வேறென்ன?
ஆழ்மன இயங்கு நிலையும் தன்னுணர்வு நிலையும் வெவ்வேறானது. தன்னுணர்வு நிலை இவன் இங்கே திருக்கள்வ அரங்கன் இருக்கிறான் என்பதைச் சொல்கிறது. மெல்ல கைபேசியைத் திறந்து சுயமியும் ஒரு சில பரமிகளும் எடுத்துக்கொண்டு ஆலையத்தைச் சுற்றிவர ஆழ்மன இயங்கு நிலை நில்லாமல் உள்ளொளி பாய்ச்சியபடி தொடர்ந்துகொண்டே இருக்கிறது..என்ன அதிசயம்.. உச்சியின் இரண்டாவது அடுக்கில் உறங்கும் திருக்கள்வனின் கோட்டுருவம் அருவ வடிவில் கண்முன்னே காட்சியாகிறது.. அரங்கன் பாத கமலங்களை கைகளால் தொட்டுப்பார்க்க முடிகிறது. அருவ அரங்கன் பேசத் தொடங்கும் வாயசைவை உணர்தல் சாத்தியப்படுகிறது. ஆனால் சொற்களும் அதன் ஆதார ஆன்மீக மொழியறிவும் பிரபஞ்ச ஆற்றலின் ஆதாரம் என்பதை உணர்த்தியபடியே மெல்ல கலைகிறது.
ஆழ்மன இயங்கு நிலை இப்போதில் தன் இயங்குத் தன்மையை மெல்ல தளர்த்த வாசலில் விட்டுவந்த பாத அணிகளைப் பற்றிய தன்னுணர்வு தலைகாட்டத் தொடங்குகிறது..உடன் வெளியேகி அரங்கனைத் தேடிய அதே புறவயச் செலுத்துதல்கள் பிய்ந்த தேய்ந்த பாத அணிகளைத் தேடச் சொல்ல.. விட்டு வந்த அதே இடத்தில் பாத அணிகள் கிடக்கின்றன. எதையும் விட்ட இடத்தில் தேடினால் காணக்கிடைக்கும். இறைமட்டுமல்ல அமைதியும் கூட..
திருவரங்கன் திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment