தொன்ம தேய்மான காலாச்சார தேனீரகங்கள்...1
நேற்றைய பயணம் காஞ்சியிலிருந்து மேற்கு மாம்பலம் வரை மகிழுந்து இட்டுச் சென்றதால் நிகழ்ந்தது. இதோ இப்போது நினைவுப் பாதையில் மீண்டும் மகிழுந்துவை இயக்குகிறேன். நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்திருக்காது எனும் அதீத மூட நம்பிக்கையுடன் இதே பாதையில் எண்பதுகளில் மிதிவண்டியில் பயணித்த பொழுதுகளையும் ஆங்காங்கே தூவியிருக்கிறேன். சட் டென எழும் திகைப்பில் தூவிய நினைவின் நிலத்துக் காட்சிகளை உடனே கூட்டி பெருக்கி தூர எறிந்துவிடுங்கள். ஏனெனில் பிறிதொரு நாளில் இதே வழியில் நீங்கள் பயணிக்கையில் உங்கள் காலில் அவை துருஆணியென பதிந்து விட நேரலாம். நீங்கள் இருசக்கர வாகனத்திலோ இல்லை காற்றடைத்த மீள்மன உருண்டை உந்தித் தள்ளும் வாகனத்திலோ பயணித்தால் உங்கள் மனமும் காற்றும் வெளியேகி பாதியில் நின்றுவிடவும் கூடலாம்.
எண்பதுகளில் வண்டலூரில் அருந்திய தேனீர் அதன் காலத்தை தொடர்ந்து ஆற்றினாலும் ஆறாத சுவையின் நீட்சியை இன்றைய தட்பவெட்ப உக்கிரத்துடன் நினைவில் கொணர்ந்தது. உக்கிரம் சூழலின் சாத்தியமென சார்த்தர் சொன்னது நினைவில் வந்து. அன்று வண்டலூர் வரை மிதிவண்டி மிதித்து பொங்கிப்பெருகிய வியர்வை ஒட்டிய உதடுகளில் பதிந்த முதல் மிடறின் சூடு இன்னமும் துடைக்கப்படாமல் இருப்பதை உங்கள் முன் வைக்கையில் உதடுகள் அதன் ஒட்டும் தன்மையை மெல்ல இழக்கும் கொடூர வெப்பம் தாக்கத் தொடங்குகிறது. மெல்ல மகிழுந்துவை ஓரகடம் பகுதியின் தேனீருக்கான மானுட நெரிசல் மிகுந்த கடையொன்றில் நிறுத்தச் சொன்னது துரத்திக்கொண்டிருக்கும் வியர்வையற்ற நினைவு பின்வண்டிகளின் வழிவிடச்சொல்லும் அதீத ஒலியெழுப்பான்களின் கூப்பாட்டு மிகைக்கங்குகள்..எனில் அதுதான் உண்மை.
தேனீர் கடையோ உணவகமோ ஏன் இன்றைய துணிக்கடையோ எதுவெனினும் கூட்டமிகு அலகுகளினூடே தானே அதன் தரம் அவதானமாகிறது. அன்றைய மிதிவண்டிப் பயணம் ஒற்றைத் தேனீர்கடையின் ஒற்றை மானுடம் அருந்தும் தீவுச் சூழல் தரம் பற்றிய அளவீடுகளின் மன உள்ளீடுகளை அசைத்துப் பார்த்தே இல்லை. இதைத்தான் பாரதி
தீராத காலமெலாம் தானும் [நின்று]
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி[ய தேனீர்]
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்து...
[நின்று.. ய தேனீர்.. திணிப்புகள்..]
என காளியைப் பற்றிய உன்னத மேன்மையைச் சொன்ன வரிகள் நினைவின் பாதையின் வழிகாட்டிப் பலகையின் தேய்ந்த எழுத்துக்களென நேற்றைய பயணத்தின் வேகத்தைத் தேய்க்கத் தொடங்கியது.. ஒருவழியாய் தாம்பரம் எனும் பெயர்ப் பலகையைக் கண்டு மகிழுந்துவை முடிச்சூர் சாலைக்குள் திருப்பும் போக்குவரத்துச் சூட்சும கயமை புரியாமல் திருப்ப நேர்ந்ததன் பின்புல பயண உத்தியை உங்களுக்குச் சொல்வதன் உள்ளார்ந்த அர்த்த உஷ்ணத்தை இப்போதில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.. அவ்வழி நெடுகிலும் துண்டு துண்டான சாலைகளில் வாகனங்கள் ஓஸ்திரேலிய கங்காரு குதித்தலை சீரான அணிவகுப்பின் தாள கதியில் நிகழ்த்திக் கொண்டிருந்தன.. சட் டென பயணம் திருப்பட்டது ஒரு தேய்ந்த பாதைசுட்டு அறிவிப்பானால் என்பதும் வாழ்வின் திருப்பங்கள் தேயாத முன்னறிவிப்பற்ற விதிப்பலகையால் என்பதும் ஒப்பு நோக்குதலால் உதறிவிடவோ இல்லை ஒன்றுமில்லையென கடந்துவிடுதலோ செய்யவியலாது.
மீண்டும் தாம்பரம் வர மேம்பால சுழற்பாதையில் தேனீர்க் கோப்பையின் சுழல்கள் தீராத சூட்டழலை உதடுகளில் உருக்கொள்ள வைக்க வண்டலூர் நோக்கி வண்டியைத் திருப்பும் விதியின் காற்றடைத்த மீள்ம உருளைகளை நிறுத்தவியலவில்லை..
அங்கே அன்றிருந்த தொன்ம ஒற்றைத் தேனீர்த் தீவு இடம்பெயர்ந்து கூட்டமிகு அலகுகளை போர்த்தியிருந்தது. கடும் வெயிலிலும் வண்ண விளக்குகள் அலகுகளின் அடர்வையும் அலகுகளையும் ஏன் விலை நிர்ணய பொருளாதார புரியாமையையும் தன்னகத்தே கொண்டிருக்க கீழிறங்கினேன்.. கீழிறங்குதல் என்பது மானுட அவமானச் சின்னமென வேர்ட்ஸ் வொர்த் கூறியிருந்தது தடையையும் மீறி ஒட்டியிருந்த உதடுகளின் வழி பீறியடித்தது..
ஒரு கோப்பைத் தேனீருக்கான விலை உரூபாய் இருபத்தைந்து என்றும் நாட்டுச் சர்க்கரையெனில் முப்பதென்றும் கல்லா மேலாண்மையாளர் சொல்லில் சற்றே உக்கிரம் காட்டி உச்சரிக்கிறார்..முகிழ்த்த தீடீர் திகைப்பின் தாக்கத்தால் உதடுகளில் ஒட்டியிருந்த பண்டைய எண்பதுகளின் தேனீர் மெல்ல தன் செதில்களை உதிர்க்கத் தொடங்கியது..
இனியான பயணத்தின் சுவையையும் தேனீர்ச் செதில்களின் ஒட்டுதல்களையும் அதன் தரவளவீடுகளையும் இனி அடுத்த பதிவில் நம் நிலத்தின் தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள் எனும் தலைப்பில் தர உத்தேசித்திருக்கிறேன்..
ராகவபிரியன்
Comments
Post a Comment