ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்.. பாகம்..6
4.
எங்கள் குடிசை விற்கப்பட்டுவிட்டது..
தந்தையின் ஓய்வூதிய பலன்களின்
காசோலையை பத்து துண்டுகளாய்
கிழித்திருக்க வேண்டும்..
விரல்களில் ஓரவஞ்சனை கத்தரியை வைத்து
அண்ணன் மூன்றாக வெட்டினான்...
முதலிரண்டு தங்கைகளின்
திருமணச் செலவு போக..
காசோலையின் கீழ்பகுதியில்
அப்பாவின் கையெழுத்து மட்டுமே
எஞ்சியிருந்தது..
மீந்த சிறுதொகையில் பிய்ந்த கூரையுடனான
குடிசையை அரசாங்க பதிவர் கூட
பதிவு செய்ய மறுத்துவிட்டார்.
அந்த சொந்தக் குடிசைக்குள்
எலிகள் தாராளமாய் வந்து போகும்..
காக்கைகள் சாதம் கொத்த
சமையலறையிலேயே சுற்றத் தொடங்கும்.
வெயிற்கால விறகற்ற நாட்களில்
கூரையைப் பிய்த்து எரிபொருளாக்கி
பொங்கித் தின்றதும் உண்டுதான்..
அந்தக் குடிசைதான் விற்கப்பட்டுவிட்டது..
பிறப்போரன்ன உடன்பிறந்தோரின்
பாசம் வேய்ந்த அக்குடிசையைப் பார்க்கத்தான்
கால்கள் இன்று கடத்தி வந்திருக்கின்றன..
அங்குதான் இந்த
இரும்பை வடித்தன்ன கருங்கைக் கானவன்
தன் புல் வேய் குரம்பையை
பொருத்தியிருப்பதால்
நினைவின் கால மகிழுந்து
அனுமதியின்றியே கடத்தி வந்து
நிறுத்தியிருக்கிறது..
உள் நுழைய...
சில்லென தலையில் விழுந்த
அந்த முதல் மழைத்துளி
விழுந்த இடத்தில் காயாமல்
தளும்பத் தொடங்குகிறது..
அன்றைய பெளர்ணமியில்
பானையில் மிதந்த நிலா
இன்று பாசிபூத்து
நாறி மீந்த பானைக்குள்
மிதந்து கொண்டிருக்கிறது..
அப்பா கையெழுத்துடனான
கிழிந்த காசோலையின் மீந்த பாகம்
பசையற்ற காலில்
பசக்கென ஒட்டிக்கொள்கிறது..
அந்தக் குடிசையைத்தான்
யாரிடமும் சொல்லாமல்
அண்ணன் விற்றுவிட்டான்..
ஏன் சொல்லவில்லை
எனும் கேள்வியை
ஒரு மாமாங்க இடைவெளிக்குப் பின்
உடன்பிறப்புகள் உச்சரித்தார்கள்..
அவசியமில்லை....
என்ற அவனின்...
ஒற்றைச் சொல் கருந்தேள்
எங்கிருந்தோ வந்து
சுள் ளென
எல்லோர் இதயத்திலும்
கொட்டிவிட்டுப் போனது...
ராகவபிரியன்
Comments
Post a Comment