Tuesday, June 16, 2026

 







நின்றதெந்தை ஊரகத்து இருந்ததெந்தை பாடகத்து..

அன்று நான் பிறந்திலேன்... பிறந்தபின் மறந்திலேன்..
[ திருமழிசைபிரான்]
ஆச்சர்யம் என்பதன் பொருள் ஆச்சர்யமானது. அதே போன்றதுதான் ஆத்மாவைப் பற்றிய அறிவும். ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யங்களைப் பற்றிய அலகுகள் வெவ்வேறானவை. சிலர் ஆகச்சிறந்த படைப்பைக்கூட அலட்சியமாக நினைப்பார்கள். சிலருக்கு வாரமலர் கவிதைகள் கூட ஆச்சர்யமளிக்கும். அப்படித்தான் ஆத்மாவைப் பற்றி எவராவது பேசினால் அது ஆச்சர்யமளிக்குமென உபநிஷத் பேசுகிறது..
ஸ்ரவணாயாபி பஹூபிர்யோ ந லப்ய: ஸ்ருண்வந்த்தோபி பஹவோ யம் ந விதயு..
ஆச்சர்யோ வக்தா ருஸலோஸ்ய லப்தாஸ்சர்யோ
ஜ்ஞாதா குஸலா நுஸிஶ்ட:
ஆத்மாவைப் பற்றிய தத்துவங்கள் எவருக்கும் புரிபடாத ஒன்று. ஆத்மாவைப் பற்றி பேசுபவன் ஆச்சர்யத்திற்கு உரியவன் என கடோபனிஷத் சொல்கிறது. ஆத்மாவைப் பற்றி குருமூலம் கற்றறிருந்திருந்தாலும் அவன் வியப்புக்குரிவன் தான் என அறியத்தருகிறது மேற்கண்ட ஸ்லோகம்.
அதைத்தான் பகவான் கிருஷ்ணர் கீதையில் இப்படிச் சொல்கிறார்...
ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதே நம் ஆச்ஸ்ர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆச்சர்யவச்சை நம ந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வாப்யே நம் வேத ந சைவ கஸ்சித்:
மனிதன் ஆத்மா என்பதை ஆச்சர்யமாகவே பார்க்கிறான். உலகியல் பக்கங்களில் உள்ள திடப்பொருட்களை தன் கண்ணால் பார்பவனுக்கு உலகியலில் கண்கொண்டு பார்க்கவியலாத ஆத்மா வியப்பைத் தருவதில் வியப்பொன்றுமில்லை. ஆத்மாவிற்கு மூன்று நிலைகள் உள்ளன. பார்ப்பது பார்க்கப்படுவது பார்க்கிறவன் என ஆச்சர்யங்களைத் தன்னகத்தே கொண்டது ஆத்மா..
இத்தகைய ஆத்மா சொல்பேச்சைக் கேட்பதில்லை என்பதை எப்படி இங்கே விளக்குவதென புரியவில்லை. அரங்கன் சயனித்திருக்கும் இடமே இவ்வெளியவனின் ஆத்மா உயிர்த்திருக்கும் இடம். இருப்பினும் கடந்த பதினாங்கு மாதங்களாக அரங்கன் மேல் அடாத சினம் கொண்டிருக்கிறது இவ்வாத்மா.
காஞ்சியில் எதிர்பாராமல் குடியேறச் செய்த அரங்கனை சதா தூஷித்துக்கொண்டே இருக்கிறது. போற்றிய போதெல்லாம் சோதனைகளைத் தந்த அரங்கன் தூஷினை போதுகளில் தன்னை வெளிப்படுத்துவது ஆச்சர்யம் தருவதுதானே..
கடந்த ஆண்டில் பெயர்த்திகளின் பள்ளியருகில் குடியேறச் செய்தான் அரங்கன். பிறகொரு நாள் பள்ளி செல்லும் வழியில் மரண நிகழ்வொன்றிற்காக பாதையை அடைத்துவிடுகிறான். குறுக்குவழியில் குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் செல்கையில் பிரம்மாண்டமான தன் கோவிலைக் காட்டித் தருகிறான்..
அன்று இவ்வெளிய ஆத்மா அரங்கன் மேல் அசூயை கொண்டிருந்ததால் பிரம்மாண்ட கோவிலருகில் இவ்வெளியவனை குடியமர்த்தி தான் உடனிருப்பதைத் தெரிவித்ததை உணர்ந்திருந்தாலும் உட்புக அனுமதியளிக்கவில்லை.
இன்று எவ்வித முன் திட்டமுமற்ற ஆத்ம நிலை அந்த பிரம்மாண்ட கோவிலுக்கு இழுத்துச் சென்றுவிட்டதைத்தான் அரங்கன் செயல் என உரத்துச் சொல்ல வேண்டியதாகிறது. அரங்கனின் செயல்கள் அனைத்தும் ஆச்சர்யங்களின் பிறப்பிடங்கள் தானே..
காஞ்சியின் நெரிசல் மிகு பகுதியில் கச்சி ஏகம்பனின் அருகிலேயே ஆகப் பிரம்மாண்டமாய் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பாண்டவ தூதப் பெருமாள்.. மேலும் சில தகவல் களுக்காக வலைத்தளத்தைத் திறந்தால் கீழ்கண்ட வர்ணனை ஆகப்பொருத்தமாக இருப்பதால் அப்படியே ஒத்தி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
[கருவறைக்குள், பாண்டவ தூத்தர் பெருமாள் ஒரு காலை மடித்து, மற்றொரு காலை மென்மையாகத் தரையில் சாய்த்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இது அரிதானது. கிட்டத்தட்ட எதிர்பாராதது. பெரும்பாலான கோயில்களில் இறைவன் கம்பீரமாக நின்றபடியோ அல்லது சயனித்தபடியோ காட்சியளிப்பார். இங்கேயோ, அவர் அமர்ந்திருக்கிறார். அமைதியாக. சிந்தனையில் ஆழ்ந்தவராக.
இந்த வடிவம், சமாதானத்தை நிலைநாட்டும் கிருஷ்ணரின் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஆயுதங்களைக் காட்டிலும் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தெய்வீக உருவம். பக்தர்கள் பெரும்பாலும் அந்த வேறுபாட்டை உணர்கிறார்கள். இந்த நிலை, ஒலியின்றிப் பேசுகிறது.]
ஆகப்பெரிய ஆச்சர்யம் தரு அரங்கனை தரிசித்து மெளனமாக அவர் முன் [பிரபந்தங்களை இப்போதெல்லாம் உரத்துச் சொல்லவேண்டாமென்பது அரங்கனின் கட்டளை] மனதிற்குள் ஆத்மாவிற்கு மட்டும் கேட்பதான ஒலியில் உச்சரிக்க எவரோ ஒருவர்..அருள்வாளப் பெருமான் கைங்கர்யம் செய்த இடம் எனச் சொல்வது காதில்விழுகிறது..
சுற்றுமுற்றும் பார்க்கிறேன். வியப்பு மேலிட்ட திகைப்பு மேலோங்கி எழத்தொடங்குகிறது.. சந்நிதியில் ஒருவரும் இல்லை. அருள்வாளப் பெருமான் என்பது யார் என இதோ வலைத்தளமெங்கும் தேடிக்கொண்டிருக்கிறேன். அரங்கன் ஆச்சர்யமானவன் மட்டுமல்ல.. சில ஆத்மாக்களிடம் மட்டும் பேசுபவன் என்பது புரிந்தது. இதைத்தான் கடோபனிஷத் பேசியிருக்கவேண்டும்..
இத்தலத்தின் வரலாற்றை கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். ஒரு சில பரமிகளையும் சுயமிகளையும் இங்கே பதிவிடச் சொன்னதும் அரங்கன் தான் என்பதில் இவ்வெளிய ஆத்மாவிற்கு வியப்பைத்தரவில்லை..
திருவரங்கன் திருவடிகளே சரணம்.
ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகர் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6 1. வாழ்வுக்கடல் நடுவின் மரமொன்றில் இவனின் சொந்தக் கூடமைதல் வேண்டும்.. அகழ்தல் இலகுவான வாழ்வின் தரை...