சில நடைபயிற்சிகள் சிக்கல்களில் கொண்டு சேர்த்துவிடுகின்றன. எல்லைகளையும் மணித்துளிகளையும் நிர்ணயித்துக்கொண்டு நடைபயில்வது தேக நலனின் எல்லையை நீட்டிக்கத் தான். எனினும் பேச்சின் எல்லைகளை நிர்ணயிக்கத் தவறிவிடுவது நடையின் முடிவில் வீடிற்கு பதில் சிக்கலில் கொண்டு சேர்த்து விடும்.
விடிந்தும் விடியாத பொழுதில் காஞ்சி வீதிகளில் நடக்கத் தொடங்குகிறான் இவன். வழமைபோல் நெற்றியில் பட்டையும் சிகப்பு வர்ண உடையும் முடியற்ற தலையின் பின்புறம் இளைத்து வெளுத்த குடுமியும் உடன் வர தலை குனிந்து நடந்து கொண்டிருக்கிறான்..
அவ்வப்போது நீண்ட தாடியைத் தடவிக்கொள்கையில் தனகென கொள்கையெதுவும் இல்லையென்பதையும் குறிப்புணர்த்தியபடி நகர்ந்து கொண்டிருக்கிறான்.
திருப்பதி தேனீர் கடையில் எல்லோருமே நின்றுகொண்டுதான் தேனீர் அருந்தவியலும். கடைவாசலில் இரண்டு எவர்சில்வர் வட்ட மேஜையும் அதில் சில மீந்த தேனீர் காப்பி காய்ந்துகொண்டிருக்கும் வட்டாக்களும் இருக்கும்.
அரை நாட்டுச் சர்க்கரை தேனீர் வாங்கிக்கொண்டு எவர்சில்வர் வட்ட மேஜையில் வைத்து ஆற்றத் தொடங்குகிறான் இவன்..
அருகில் ட்ராக் பேண்ட்டும் டீ சர்ட்டும் கழுத்தில் தொங்கும் சிலுவையும் ப்ரெஞ்ச் தாடியும் கொண்ட ஒருவர் காப்பியை ஆற்றத் தொடங்குகிறார்.
இவனின் தேனீர் டபராவில் விழும் போது அவரின் காப்பி டம்ளரில் விழுவது போல் ஆற்றுகிறார்..
இவன் ஆற்றுவதை நிறுத்த அவரும் நிறுத்துகிறார்.
இவன் ஒரு மிடறு விழுங்குகையில் அவரும் விழுங்குகிறார்.
இனி ஆற்றுப்படுத்துதல் தொடங்குகிறது..
அவர் தான் தொடங்குகிறார்..
சார் ஐயருங்களா..
ஆமாம்.. நீங்க..
நான் கிறிஸ்டியன்ங்க.. கேதலிக்..
ஓ..
சார் கோவிச்சுக்காதீங்க.. டீ சாப்டுங்க.. இந்த டீ காப்பியெல்லாத்தையும் கொண்டு வந்ததே நாங்க தாங்க..
அப்புடிங்களா.. எந்த வருஷம்னு சொல்ல முடியுங்களா.. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் தேனீரும் சூடாக சுவையாக இருந்திருக்கும்.. இப்போது வார்த்தைகள் சூடாகி ஆவியை வெளியிட தேனீர் ஆவியடங்கி ஆறத்தொடங்கிவிட்டது..
52 CE ங்க.. கைபேசியைத் திறந்து கூகுளைக்கேட்டிருப்பார் போல.. சொல்வதற்கு முன் நெற்றியில் தொடங்கி மார்பு வரையிலும் பின்பு இடது தோள் தொடங்கி வலது தோள் வரையிலும் சிலுவை இட்டுவிட்டுத்தான் சொன்னார்...
சி இ ன்னா கிறிஸ்டியன் இவாஞ்சிலிக்கலாங்க..
சார் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது.. வயசானா மாதிரியும் தெரியுது. ஐயர் குசும்பு மட்டும் போகலீங்களே.. சி இ ன்னா கரெண்ட இராங்க.. இங்க எங்கங்க கிறிஸ்டியன் இவாஞ்சிலிக்கல் எல்லாம் வருது..
சாரிங்க.. நான் சாதாரணமாத்தாங்க கேட்டேன்.. எனக்கு பிசி ஏடி தாங்க தெரியும்..சி இ ன்னா கரெண்ட் எரா ங்கறது இப்பத்தாங்க தெரியும்..
சார் இனிமே எங்க ராஜ்ஜியம் சார்.. 52 சி இ ல்ல வந்த செயிண்ட் தாமஸ் பாதிரியார் பதினாறாம் நூற்றாண்டுல வந்த செயிண்ட் சேவியர் பாதிரியார் எல்லோரையும் பத்தி தமிழ் நாடு பூரா தெரிஞ்சுக்கத்தான் போறீங்க.. டீ ஆறிட போறது.. சாப்டுங்க.. இவ்ளோ வருஷம் வாழ்ந்தது பெரிசில்லீங்க. என்ன தெரிஞ்சுக்கிட்டோம்ங்கறதுதாங்க முக்கியம்..
ஒவ்வொரு சொல் வெளிவருவதற்கு முன் ஒரு சிலுவையை காற்றில் எழுதிவிட்டுத்தான் வெளிவர அனுமதித்தார்..
சார் கொஞ்சம் இருங்க.. அவங்கள எல்லாம் எதுக்குங்க தெரிஞ்சுக்கனும்.. தமிழ் நாடு தெரிஞ்சுக்க வேண்டியது ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் பத்தித்தானே தவிர பாதிரியார்களை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லீங்களே..
அவ்வளவுதான்.சட் டென காப்பி குவளைகளை அப்படியே கவிழ்த்து வாயில் ஊற்றிக்கொண்டு வட்ட மேஜையில் ஓங்கி சப்தமிட வைத்தார்..வைத்து விட்டு..
யோவ் கெழவா.. நீ பேஸ்புக்ல எழுதற கண்றாவியெல்லாம் படிச்சுட்டுத்தாண்டா இருக்கேன்.. அதனால தான் காலங்கார்த்தால ஒங்கிட்ட இப்புடி கேட்டேன்.. இப்ப வேர்க்குதுல்ல.. வேர்வையில ஒன்னோட விபூதி பட்டை காணாம போயிடுச்சு..இனிமெ ஒன் நெத்தியில மட்டுமில்ல பள்ளிக்கூடத்து புள்ளைங்க நெத்தியில கூட விபூதி இருக்காது.. போய்யா...போ... என்ன மொறைக்கற... சொல்லிவிட்டு சற்று அமைதியானவர் போல் அவ்விடம் விட்டு நகன்றார்.
பரலோகத்திலிருக்குமென் பரமபிதாவே என் பாவங்களை மன்னியும் எனச் சொல்லிக்கொண்டே மீண்டும் இன்னொரு காப்பி வாங்க வரிசையில் நின்று கொண்டார்..
இவனின் டபராவில் மீந்த தேனீரைச் சுவைக்க எங்கிருந்தோ பறந்து வந்த ஈ டபராவின் விளிம்பில் அமர்ந்தது. இவன் நகர்ந்து அருகிருக்கும் வினாயகர் கோவில் வாசலில் உள்ள கிண்ணத்திலிருந்து விபூதியை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டான். மீண்டும் தேனீர் கடைக்கு வந்தவன்.. அங்கிருந்த ஒரு மினரல் வாட்டர் குழாயில் சொட்டிக்கொண்டிருக்கும் இரு சொட்டு மினரல் வாட்டர் குழைத்து மீண்டும் நெற்றியில் பட்டை இட்டுக்கொண்டு..அந்த கிறிஸ்துவரின் கண்முன்னேதான்... மெல்ல நடைப்பயிற்சியைத் தொடர்ந்தான்.
அவனும் தமிழ் நாடும் வீடு பேறு அடைய இன்னும் நெடுந்தொலைவு நடக்க வேண்டுமென உணர்ந்தான்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment