ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்..பாகம் 6

3.
என் குடிசையின் காலச் சுவருக்கான
வண்ணங்களை சந்தைகளெங்கும்
தேடியலைகிறேன்..
என் சுவருக்கான செங்கற்கள்
சூளைகளில் பிறந்து வாழ்ந்து மடியும்
அடிமைக் குடும்பத்தின்
கைகளால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடாதெனும்
நிபந்தனையை
காலக்கொத்தன் ஏற்கவில்லை..
என் குடிசைக்கான வரைபடம் தந்த
பொறியாளன் தன் தந்தம் உடைத்து
செதுக்கிய கோடுகளால் ஆன
வரைபடமிதுவென்றான்..
அதற்கான விலை தரும் வலிமையைச் சேமிக்கும்
வாழ் நாட்கள் சல்லடை கிழிந்துவிட்டிருந்ததை
அவன் ஏற்கவில்லை..
அஸ்திவாரத்திற்கான பள்ளம் தோண்டுகையில்
என் கடந்த நிகழ் மற்றும் எதிர்கால
வாழ்வினைத் தோண்டக்கூடாதென்று சொன்னேன்..
குடிசை கட்டுமானத்திற்கான நிபந்தனைகளை
எவரும் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை...
எங்கிருந்தோ கனரக வாகனம் ஓன்று
சட் டென என் வாழ்வின் தரையில்
அதிர்வலைகளை எழுப்புகிறது..
அப்போது
தலையில் முண்டாசு கட்டியபடி
தோண்டாத தரையில் கட்டிடங்களை
எழுப்புவது கடினமெனச் சொல்கிறான்
ஒப்பந்தம் எடுத்தவன்.
இருந்தாலும்
என் வியர்வையைக் குழைத்த சீமைக்காரை
வெற்றிட தொகுதிக் கற்களுக்குள்
என் தீராத உழைப்பை நிரப்பி
எப்படியோ ஒரு பக்கச் சுவரெழுப்பிவிட்டேன்..
இனி கூரை வேய இயலாதெனினும்
சுற்றுச் சுவர்கள் கட்டியெழுப்பும்
தருண அமைவு கிட்டவில்லையெனினும்
மழைக்கால ஊழிப்புயலில்
சுவர் கரைவதற்கு முன்
இருக்கும் இந்த வேனிற் காலத்திலாவது
வர்ணம் பூசியாக வேண்டும் தானே..
ஆதலால்
உலகமயமான சந்தைகளெங்கும்
என் காலச்சுவருக்கான
வண்ணம் தேடி
இதோ அலைந்து கொண்டே இருக்கிறேன்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog