வாழ்வின் அந்திமங்களில் அன்றாடங்களின் தொய்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.. தொய்வற்ற அன்றாடங்களில் இவனின் மிதிவண்டி ஐந்தாறு கி.மி. தூரம் கடத்திச் சென்று தேனீர் அருந்த வைத்ததை இவனின் கால்களே இப்போது நம்புவதில்லை.. வாடிக்கையாய் உதிக்கும் காலைக் கிரணங்கள் உள் நுழையவியலா காஞ்சி வசிப்பிடத்தின் காலைப் பாயின் சுருள் ஏழு மணிவரை இவனை விடுவிப்பதில்லை.. சுய தேனீர் தயாரிப்பின் நுண்ணிய சுவை கூட்டும் கலையும் இவனிடமிருந்து எட்டியே நிற்கிறது.. குருதிச் சர்க்கரை அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் இவனின் நிகழ் அன்றாடங்களின் திடத்தன்மையை சோதித்தபடி இருக்கையில் தொய்வுகளை அகற்றவியலவில்லை..
காலையின் அவசரங்கள் பெயர்த்திகளுக்காக வயோதிகத்தையும் விரட்டுவது கலாச்சார மாறுதல்களென கடந்து விடுவதும் சாத்தியமற்றது.. காவிரி நீரின் சுவை கலந்த தேனீருக்காக விடிந்ததிலிருந்து ஒன்பது மணிவரை காத்திருக்கிறது சுவை துறவற்ற நாவு. துறவு மேற்கொள்ளச் சொல்லி மினரல் வாட்டர் சுவைகலந்த தேனீர் இஞ்சியெனும் முஷ்டி மடக்கி நாவின் முகத்தில் ஓங்கி ஒர் குத்து விடுகிறது.. திகைத்த நாக்கு காவிரிக்கும் காஞ்சிக்குமிடையிலான தூரத்தை தேனீர் சுவைகளின் இடைவெளிகளில் தேக்கி வைத்துக்கொண்டு தவிக்கிறது.. இருப்பினும் அத்தேனீர்கடை சத்குரு சிவசாமிச் சித்தரின் தேனீர்கடை. சித்தம் துறவிற்கு தயாராக சற்று காலம் பிடிக்கும்.. கால நாவின் சுவைக் கவை தொய்வுகளைத் தருவதே இல்லை.. தேனீர்த் துறவு நிலையை நோக்கி இவனை இருசக்கர வாகனத்தில் கொணர்ந்து நிறுத்துகிறது நாவும் சதா பசியெடுத்துக் குலைத்துக் கொண்டிருக்கும் பைரவகடும்.. அப்படித்தான் தாமதமாகத் துவங்கியது இன்றைய அன்றாடத்தின் துவக்கம்..
மினரல் வாட்டர் சுவை கூட்டிய இஞ்சித் தேனீர் கொஞ்சம் கொஞ்சமாய் நாவிற்கும் வயிற்றிற்குமான இடைவெளியை நிரப்பத் தொடங்குகிறது.. அப்போதின் அன்றாடத் துவக்கம் கூரை விட்டத்திலிருந்து தொங்கும் தூளியென தொங்கித் தழைவதை தடுக்கவியலவில்லை.. பாலுக்கு அழும் குழந்தையென காவிரி நீர்ச் சுவைகலந்த தேனிருக்காக அத்தூளியில் கால்கை உதைத்தழுகிறது இவ்வயோதிக சித்தர் குழவி.. தேனீர் துறவறத்தின் இன்றைய அன்றாடத்தை சத்குரு சிவசாமி சித்தரின் படம் காட்டியபடி அரங்கன் மினரல் வாட்டர் சுவை கூட்டிய காஞ்சித் தேனீருடன் துவக்கி வைக்கிறான். அரங்கன் விரல்களால் தொடக்கத்தின் ரிப்பனை வெட்டும் கத்தரியின் பெயர் தான் கர்மா என்பது.
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே..
Comments
Post a Comment