அசிதங்களின் நிறுத்தவியலா நர்த்தனம்

------------------------------------------------------
பளிங்குப் பாத்திரங்களின்
மௌன உடைப்பில் அல்ல...
குப்பைத் தொட்டியின்
விளிம்பில் வழியும்
அழுகிய பழத்தின் ஈரம் தரும்
பச்சை நிறப் பூஞ்சணத்தில்
துவங்குகிறது....
என்னின் இந்தப் புதிய அழகியல்....
நீங்கள் செப்பனிட்ட ஒழுங்கின்
முகமூடிகள்...
என் கவிதையின் தார்ச்சாலையில்
கரைந்து வழிகின்றன....
பூட்டப்பட்ட அருங்காட்சியகத்தின்
பரிசுத்தமான சிலைகளை விட...
கைவிடப்பட்ட கட்டிடத்தின் சுவர்களில்
மழைக்காலம் வரைந்த
ஈரக்கசிவின் கோணல் கோடுகளே
நம் எல்லோரிடம்
உரத்து குரலெடுத்து
எதிர் அழகியல் மொழியில்
இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன..
வடிவங்களின் சிறையிலிருந்து
வார்த்தைகளை விடுவித்துப் பாருங்கள்..
இலக்கணத்தின் கழுத்தை நெரித்து
பிய்ந்துபோன காலணியின்
திறந்த வாயிலிருந்து வழியும்
புழுதியின் மொழியில்
புதிய பிரபஞ்சத்தை
எழுதத் தொடங்குங்கள்..
எதிர் அழகியலின்
செளந்தர்யப் பேரழகு
சிகரம் தாண்டியும் மேலெழும்பி
மஞ்சள் சிவப்புடன்
ஒளிர்வதைக் காணலாம்...
சீரான இசை வண்டுகளின் ரீங்காரத்தில்
உதித்ததல்ல என் ஆன்ம ராகம்..
நடுநிசிப் பெருநகரத்தின்
தொழிற்சாலைக் கூச்சல்களும்...
நெரிசலான சாக்கடையின்
அடிவயிற்று முனகல்களும்...
அதன் விளிம்புகளில்
சேறு அப்பி உப்பிய உடலெடுத்து
ஓடும் பெருச்சாலிகளின்
நேர்த்தியான
வாழ்வியல் ஓட்ட அழகிலும்...
இன்னுமான எல்லா அசிதங்களிலும்...
என் ஆன்மாவின் ராகங்கள்
ஸ்வரங்களைக் கோர்க்கத் தொடங்கும்..
தமிழுக்கு
நோபல் வேண்டுமெனில்
நீங்கள் வழிபடும் எழுத்தாளர்களின்
தலையில் பின்னால் ஒளிரும்
ஒளிவட்டங்களை
முதலில் அழி ரப்பர் கொண்டு
அழிக்கத் தொடங்குங்கள்..
பிறகு
இருளின் ஆழத்தில்
அழுகல் நாற்றமும் சிதைந்த பிம்பங்களும்
தங்கள் நிர்வாணங்களோடு
நூற்றாண்டுகளாய் நிறுத்தாமல்
நர்த்தனமிடுவதைப் பாடத் தொடங்குங்கள்..
அங்கேதான்
நோபல் பெற்றுத் தரப்போகும்
தமிழ் மொழியின் அடர்ந்த கலை
அதன் இறுதி விடுதலையைக் கொண்டாட
நிறுத்தவியலா நாட்டியத்தைத்
தொடங்கும்..
அதற்கான நட்டுவாங்கம்
உலக நாடுகளெங்கும்
தன் தட்டுக் கழியின் தாளவோசையை
தொடர்ந்து ஒலிக்கச் செய்யட்டும்..
ராகவபிரியன் தேஜஸ்வி

Comments

Popular posts from this blog