கீதைச் சொல்லும் கதை சொல்லியும்..4
சொல் அது சென்றடையும் காதுகளுக்குள் நுழைவது வீசப்பட்ட விசையைப் பொறுத்தது.. கீதையின் சொல்லும் கதைகளுக்கான சொல்லும் கூட வலிமையாக வீசப்பட வேண்டும்..கீதையின் சொல் வாழ்வின் போர்களமொன்றில் வீசப்பட்டதால் சதா மரணமின்றி மிதந்து கொண்டே இருக்கிறது.. கர்ண பரம்பரைக் கதைகளின் சொற்கள் வாழ்வியல் தத்துவங்களைத் தாங்கி நிற்பதால் தான் கால மாற்றத் தாக்குதல்களைத் தாங்கி உலகின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிது..
கீதையின் சொற்கள் மாற்றமுடியாதவை. ஒவ்வொரு சொல்லையும் உடைத்து இடம் பொருள் ஏவல் எனும் இடங்களில் பொருத்தினாலும் கச்சிதமாகப் பொருந்தும் நெகிழித் தன்மை தீரா வியப்பைத் தரும்.. ஆனால் கதை சொல்லும் சொற்கள் மரபு புதுமை நவீன பின் நவீன உப்புக் காகிதங்களால் தேய்க்கப்பட்டு உருமாற்றம் கொண்டிருக்கின்றன.. அத்தகைய பின் நவீனத்துவ சொற்கள் கோர்த்து வாசகர்களை நோக்கி வீசப்படும் கதைக் கம்மல்கள் முக நூல் சாலையோர நெகிழி அட்டைக்குள் அடைக்கப்பட்டு கூவிக் கூவி காதுகளைத் தேடுவது காலத்தின் அவலம்..
பின் நவீனத்துவ சொற்கள் மொழியின் எல்லைகளை உடைக்க வேண்டும்.. அதிகாரத்தின் மையங்களைக் கேள்விக்குள்ளாக்கா வேண்டும்.. புதிய அர்த்தங்களைக் கட்டமைக்கும் இலக்கியச் சிந்தனைகளை உடுத்தியிருக்க வேண்டும். ஆயினும் அதன் மொழி சாமானிய மக்களின் வாழ்வனுபவங்களிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லுதல் கூடாது... அப்படி விலகும் காலங்களில் அவை சாமானியர்களின் காதுகளை அலங்கரிக்காமல் அட்டைகளின் அடுக்குகளிலேயே அவை சிறை வைக்கப்பட்டுவிடும்.. அபாயம் நிகழ்ந்துவிடும்..
இதைத் தான் லத்தீன் அமெரிக்க நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் இப்படிச் சொல்கிறார்..இலக்கியம் யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டால் அந்தச் சொற்கள் பட்டரைக் கழிவுகளாக தங்கிக் கிடந்துவிடும்.. பின் நவீனத்துவ இலக்கியத்திற்கான பட்டைத் தீட்டப்பட்ட சொற்கள் வாசகர்களின் காதுகளை அலங்கரிக்க அவை யதார்த்தத்தின்... சாமான்யர்களின் அன்றாடத்தின்.. போராட்ட வாழ்வியலை நுணுக்கமாக தன்னுள் செதுக்கியிருக்க வேண்டும்..
இதனைப் பகவத் கீதை இப்படிப் பேசுகிறது...
கர்மண்யேவாதி காரஸ்தே மா பலேஷூ கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி:
பின் நவீனத்துவ கதைகளின் சொற்கள் பறக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும்..அதாவது பறப்பது சிறகு கொண்டவைகளின் கர்மா.. அல்லது செயல்.. சொற்களும் பிறப்பிக்கும் போது கதைசொல்லியால் பிறப்பிக்கப்படும் போது காற்றில் மிதந்து மிதந்து வாசக காதுகளை அடையும் சக்தியுடன் பிறக்க வேண்டும்.. கதை சொல்லிக்க்கு சொற்களை பிறக்க வைப்பதோடு தனது கடமை முடிந்துவிடுகிறது.. பலனைப் பற்றி கவலைப் படாமல் அடுத்த படைப்பை நோக்கி நகர்ந்தாக வேண்டும் என்பதைத்தான் கீதையின் கர்ம யோக ஸ்லோகம் சொல்கிறது..
அது மட்டுமல்ல கீதையின் ஒரு கூர்மையான சொல்லும் அங்கே கிடக்கிறது.. காலில் தைக்காமல் அதைக் கடந்து செல்லுதல் கடினம்.. அது கர்மணி எனும் சொல்தான்.. இது கனம் நிறைந்த சொல்.. கூர்மையானது.. பிறப்பிக்கப்பட்ட சொற்கள் வாசக காதுகளை அடையவியலவில்லையே எனும் ஆதங்கத்தால் ஒரு கதை சொல்லி தன் படைப்பிற்கான கர்மாவை ஆற்றாமல் இருப்பதற்கும் அனுமதியில்லை என்று சொல்கிறது..
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே எனும் கூற்று ஒன்று தமிழ் காதுகள் அத்துனையிலும் தொங்கட்டானாய் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.. அப்படியான உயர்வான தமிழ் சொற்கள் பின் நவீனத்துவ புனைவுச் சொல்லாடல்களில் மரணமின்றி இலக்கிய வண்ணங்களை வாரி இறைத்தபடி இனி பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளின் காதுகளையும் அலங்கரித்தாக வேண்டும்..
ராகவபிரியன் தேஜஸ்வி

Comments
Post a Comment