ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம் 6/17


கால்கள் நடக்கத் தொடங்கிய காலமது..


தண்டவாள ஓர முட்செடிகளை வெட்டிவர

அழைத்துச் செல்வான் அண்ணன்..

 நவீன கழிப்பறையற்ற அந்தகால 

ஓடும் புகைவண்டிப் பெட்டியிலிருந்து

பறந்து விழும் பயணி நரகல் துளியொன்று..


அதைத் தடுக்கும் மேல் சட்டைக்கு 

வழியற்ற ரயில் கரையில்

இவனின் காலேறி இறங்குமொரு 

கட்டு விரியன் பாம்பு..

காட்டுக் கருவேல முள்குத்தி

ரேகையழிந்த உள்ளங்கை வழி

கொப்பளிக்கும் குருதி குடித்த விறகுகள் 

ரத்தபந்தப் பாசப்புகையை 

பசித்த வீடெங்கும் நிரப்பும்...

அத்தனைப் புகையையும் இழுத்துக் கொண்டு

திணறித் தவிக்கும் இவனின் ஈரலறைகள்..


ஆனால் சமையலறையில்

மெல்ல மெல்லத் தவழ்ந்து

வடித்த அத்துனை சோற்றையும் 

உறிஞ்சும் அதிகார அண்ணனின் 

அகடு அட்டைகள்..


முந்தியொரு காலத்தில்

மூத்தவன் சொல் சக்கரத்தால் 

கைவண்டிகளை கனக் கச்சிதமாகச் செய்வான்..

அதை இளைவன்  இழுத்தாக வேண்டும்..

வண்டி வாழ்வுச்சாலை  ஏற்ற இறக்கம் 

கண்டு குடை சாய்ந்த குரூரப் பொழுதில் 

மூத்தவனின் உறக்கம் கலைந்தால்

முதுகு ஒடிந்து நெம்பியிழுக்கும்

நுகத்தடி மாட்டின் முதுகில் 

கையாலாகா அப்பனின் 

கனத்த சாட்டையடி  விழும்..


இன்னொரு காலத்தில்...

இளையவன்..

சுள்ளி சுள்ளியாய் பொருக்கிக் கட்டிய 

வேலைப்பாடுகளற்ற காக்கையின் வீட்டை

ஆணவக்கூகை பிடுங்கிக் கொள்வதென்பது

அறச்சீற்ற நட்சத்திரங்கள் 

அடாத சினத்தில் அவ்வப்போது  கங்கொளிர குதிக்கும்

வாழ்வு வானத்தின் பூகம்பப் பேரச்சம்..


போகட்டும்..


ஒரு நூறாண்டு பழமை வாய்ந்த

குடும்ப ஆலமரத்தின் வேர்

வளமை நீரற்று காய்ந்து.. 

வறுமைக் கரையான் தின்றதால்

வலுவிழந்து தவித்தது.. மற்றொரு காலம்..


அப்போது அதில் கிளைத்த

இரண்டாம் விழுது மட்டும்

தாய் மரம் தாங்கி நின்றதை

அலட்சியம் செய்தன மீதி விழுதுகள்..


மூன்று கருடக் கூடுகள் 

உதிர்ந்த காலத்தின் பின்னும்

இன்னமும் தரை தொடப்போவதாய்

வேண்டுதல் தொட்டிகளுடன்

வேடம் காட்டி வேகவேகமாய் 

ஆடிக்கொண்டே இருக்கின்றன..


இதோ தரை தொட்ட 

இரண்டாம் விழுதின் 

வேர் சுற்றி கூடுகட்டக்

கிளம்பி விட்டன வேர்க்கரையான்கள்..


எல்லா விழுதுகளாலும்

தாய்மரம் தாங்கவியலாதென

யாராவது

ஆடிக் கொண்டே இருக்கும்

மீதி விழுதுகளிடம் மெல்லச் சொல்லுங்கள்..


ராகவபிரியன் தேஜஸ்வி..



Comments

Popular posts from this blog