ஓளவை நாவல் மரமடியில்
உதிர்பழ தேர்வில்
குனிந்து நிமிர்கிறாள்..
அவளின் உடல் தாங்கும் கைத்தடி
எந்நேரமும் உடையக்கூடலாம்..
உச்சியின் முருகன் பத்து நாவற்கனிகளையே
கையில் வைத்திருக்கிறான்..
மூத்த தெய்வீக ஆதிமுதல் தமிழ்ப்பெண் கவி
பத்திலொன்று எனக்குண்டா என வினவுகிறாள்..
உச்சி முருகன்
உடையா நாவலும்
உயர் அரசாங்க உத்தியோகமும்
அரிதிலும் அரிது ஓளவையே..
பட்டியலின போட்டியாளருக்கு நான்கு
பிற்படுத்தப்பட்டவர்க்கு ஐந்து
அனைவருக்குமான மீதம் ஒன்று
என்னிடமிருப்பதோ பத்து
உனக்கேது பழம்..?
அதிர்ந்த ஓளவை உடல் கனத்தை
கைத்தடிக்கு நகர்த்துகிறாள்..
உடைந்தது கைத்தடி மட்டுமல்ல..

Comments
Post a Comment