கீதைச் சொல்லும் கதை சொல்லியும்..5

மனம் கனத்துப் போகிறது மாலை நேரங்களில்.. சாலைச் சுமைதாங்கிக் கல்லின் மேல் யாரோ மலையை ஏற்றி வைத்த கனம். கைகால் முகம் கழுவி விபூதி பூசி காஞ்சி சாலைகளில் நடந்தாக வேண்டும்.. முதலில் கச்சி ஏகம்பன் கோவில் சாலையின் முச்சந்தி வரும்..அங்கிருக்கும் கைவிடப்பட்ட பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு கை நீளும்.. கன்னத்தில் பளாரென அறையும்.. ஏதோ ஒரு குழந்தையை யாரோ ஒரு ஆசிரியர் அறைந்திருக்க வேண்டும்.. அந்தக் குழந்தையின் சாபம் பள்ளி இடிந்து கிடக்கிறது.. அந்த குழந்தை வாங்கிய அடியின் கனம் மோதியதால் மனதின் கனம் சற்று குறையும்.. பள்ளியின் உச்சி மாடத்தில் ஒரு மான் ஒரு மாது ஒரு மானுடன் வில்லுடன் இருக்கும் பொம்மை பூச்சுதிர்ந்து மீளுயிருக்காக மன்றாடிக்கொண்டிருக்கும்.. அடுத்ததாக ரேணுகா தேவி கோவில் திரும்பும் நாற்சந்தி.. உயரமான வீடொன்று அங்கிருக்கும்..அவ்வீட்டு வாசலில் சரக்கொன்றை மரம். அதன் மேல் ஓரங்குல புழுதி படர்ந்திருக்கும்.. சதா பாதம் சுமக்கும் ஸ்லிப்பரின் முனையின் புழுதியடர்வு..குனிந்து அணிந்திருக்கும் ஸ்லிப்பரை நோக்க மனதின் பாரம் மெல்ல உருகத் தொடங்கும்..
அடுத்தாக காமாட்சி அம்மனின் மேலராஜவீதி திருப்பம்.. வடக்கு நோக்கி உயர்ந்திருக்கும் கச்சபேஸ்வரர் கோபுரம்..அடர் போக்குவரத்து நெரிசல்.. பள்ளிக் குழந்தைகள் பக்தர்கள் ஆட்டோ ஸ்டாண்டு இத்தனையும் சூழ்ந்திருந்து நடையை நிறுத்திவிடும்.. அவ்விடம் கடந்து பேரூர்ந்து நிலையம் தாண்டினால் கணக்கிருக்கும் வங்கியின் ஏடிஎம்.. எப்போது அட்டையைச் செருகினாலும் பணம் வராது.. மனதின் கனம் இப்போது கொஞ்சம் கூடும்.. வேறு வழி குழந்தை காய்ந்த ஆற்று மணலில் சின்ன சங்கு சிப்பி தேடி எடுப்பது போல் சில்லரைகளை துழாவி எடுக்க வேண்டும்.. ஐஓபி கிளைக்கு எதிர் இருக்கும் திருப்பதி தேனீரகம்.. அங்கே சூப்பர் டீ கிடைக்கும்.. ஒரு சொட்டு உட் சென்றவுடன் மனபாரம் அப்படியே உருகிக் கொட்டிவிடும்.. ஒரு சில தேனீர் சொட்டுக்களும் தான். உடனே ஒரு ஈ எங்கிருந்தோ வந்து உருகிய பாரத்துளியிலா இல்லை தேனீர்த்துளியிலா என அறிவதற்குள் அமர்ந்து மீண்டும் பறந்துவிடும்.. மனபாரத்துளியாகத்தான் இருக்க வேண்டும்.. தேனீர் சுவை.. ஆனால் பாரத்துளி கசப்பு..
அந்த சாலையில் நேரே சென்றால் கச்சி வரதனின் கோவில் வரும்.. உடனே கோவம் வரும்..கோபம் என்பது ஆறுவது.. கச்சி வரதனெனும் அரங்கன் மனதில் மெல்ல தன் பாதத்தை வைப்பான்.. சுமை தாங்கி சரியத் தொடங்கும்.. தாங்குவதற்கான ஒன்று இருந்தால் சுமை இறங்கிக் கொண்டுவிடும்.. அரங்கனின் பாதம் மனதில் சுமைதாங்கியாக மாற சினம் ஆறி பாரம் உருகிக் காய்ந்து உருவமற்றுவிடும்.. உடனே அரங்கனின் வார்த்தைகள் மனதில் மெல்ல எழும்..
போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
சூஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வாமாம் ஸாந்திம்ருச்சதி!!
கச்சி அரங்கன் சொல்வான்.. என் பக்தன் என்னை எல்லா யாகங்களையும் தவங்களையும் நான் ஏற்றுக் கொள்வதாக நினைக்கிறான். உலக உயிரனங்கள் அனைத்திற்கும் நான் நல்ல நண்பன் எனவும் எண்ணுகிறான். அதையும் விட பேரருளாளன் மஹேஸ்வரன் என்றெல்லாம் முடிவு செய்து கொள்கிறான்.. அவன் மனதின் எண்ணங்கள் அவனின் உரிமை.. ஆனால் அதனால் அவன் மனம் அமைதியடைந்தால் அது எனது அதாவது அரங்கன் செயல்..
மீண்டும் அமைதியுடன் திருப்புகையில் நடையில் துள்ளல் வரும். அரங்கனின் சொல் தரும் மனவலிமை ஒரு யானையுடன் நடக்கும் தைரியத்தைத் தரும்.. திரும்புகையில் கச்சபேஸ்வரர் கோயில் முன்னான போக்குவரத்து நெரிசல் நீர்த்திருக்கும். ரேணுகா தேவி கோவில் நாற்சந்தியின் சரக்கொன்றை பூத்திருக்கும்.. இடிந்த பள்ளியின் மேல்மாடத்து வில்லாளன் அங்கிருக்கும் மானை மாதுவிடம் பிடித்துக் கொடுத்திருப்பான்...
இனி நாளை மாலை மீண்டும் நடந்தாக வேண்டும்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog