ஓய்வறைப் பேய்கள்.. சிறுகதை..

அது ஒரு கிராமத்தின் தொடர்வண்டி நிலையம்... கிராமம் என்றால் ஆகச்சிறிய கிராமம்..அதாவது மூன்று நான்கு வீடுகளே உள்ள கிராமம்.. அவசரத்திற்கு தேனீரோ சிற்றுண்டியோ தலைவலி மாத்திரையோ இல்லை வேறு எதுவானாலும் வாங்க இருபது கி.மீ தொலைவில் உள்ள நகரத்திற்குத் தான் செல்ல வேண்டும்.. பகல் பணி முடித்த அதிகாரி இரவு நிலையத்திலேயே தங்கியாக வேண்டும்..
பிரேம் சந்த் பகல் பணி முடித்துவிட்டார். இரவுப் பணிக்கு வந்த அதிகாரி தெய்வாம்சம் நிறைந்தவரென பெயரெடுத்தவர்.. கெட்டப் பழக்கம் சிறிதும் இல்லாதவரென்றும் அறியப்பட்டவர்..
ஆனால் பிரேம் சந்திற்கு பணி முடித்து ஓய்வெடுக்கும் முன் ஒரு குவார்ட்டர் சரக்கும் இரண்டு புரோட்டாக்களும் உள்ளே சென்றால் தான் உறக்கம் வரும்..
அன்று இரவு தொடர் வண்டிகள் ஒன்றும் இல்லை என்பதை தெய்வீக அதிகாரி தெரிந்து கொண்டார்..
பிரேம் சந்த்.. இந்தாங்க.. வெயிடிங்க் ரூம் சாவி.. ப்ளாட்பாரத்துல படுக்காதீங்க.. டேக் ரெஸ்ட்.. குட் நைட்..
சொல்லிவிட்டு வழமை போல் சுவரில் மாட்டியிருந்த சரஸ்வதி காந்தி மற்றும் அம்பேத்கார் படங்களை கழற்றி தன் டேபிளில் வைத்தார்.. ஏற்கனவே வாங்கி வந்த பூக்களைத் தூவி சந்தன சாம்பிரானி வத்தியைக்கொளுத்தினார்..
தெய்வீக அதிகாரி தன்னுடை மேலதிகாரியும் கூட என்பதை உணர்ந்த பிரேம் சந்த் தனது உறக்கத்திற்கான இத்யாதிகளுடன் ஓய்வறைக்குள் சென்றார்..
குவார்ட்டரை அப்படியே ஒரு கோப்பையில் ஊற்றினார்.. தண்ணீர் கலந்தார். விஸ்கிக்கு வாட்டர்.. ரம்முக்குக் கோலா.. ஜின்னுக்கு ஜாங்கிரி...எனப் பாடிக்கொண்டே பாதி சரக்கை ஒரே மூச்சில் உள்ளிழுத்துக் கொண்டார்.. ஒரு புரோட்டாவை சால்னா கலந்து வாயில் திணித்துக் கொண்டார்..
சரக்கடிக்கும் அவசரத்தில் பாத் ரூம் போக மறந்து விட்டிருந்ததால் விருட்டென பாத்ரூமிற்குள் புகுந்தார்..
இதையெல்லாம் ஒளிந்திருந்து ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அந்த தெய்வீக அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார்..
மெல்ல பூனை போல் உள் நுழைந்த தெய்வீக அதிகாரி.. அந்தப் பாதி சரக்கை அப்படியே ஒரே மடக்கில் தொண்டைக்குள் செலுத்தி விட்டார்.. புராட்டாவை உள்ளங்கையில் வைத்து அப்படியே அமுக்கினார்.. வாயில் அடைத்துக் கொண்டார்,, நிலையத்திற்கு வந்து விட்டார்..
பிரேம் சந்த் பாத்ரூமிலிருந்து இப்போது வெளியே வந்தார்.. சரக்கையும் காணோம்.. புரோட்டாவையும் காணோம்..அந்த நிலையத்தில் அவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்போது இல்லை..
பிரேம்சந்திற்கு தாகம் பாதி மீந்திருக்கும் அவதை.. சரக்கு திருடப்பட்டால் வரும் கோபம் கட்டுப் படுத்துதல்களுக்கு அப்பாற்பட்டது.. ஓங்கி அந்த ஓய்வறையின் சுவரைக் குத்தினார்.. கை வலித்தது.. சரக்கு வாங்கி வர இருபது கி.மீ சென்றாக வேண்டும்.. இரவு பத்து மணிக்கு மேல் கடையும் இருக்காது..
அந்தப் பாதி சரக்கை யார் சாப்பிட்டிருப்பார்கள்.. ஓய்வறையில் முன்பு எவரோ ஒரு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக அறிந்த கதை இப்போது நினைவிற்கு வந்தது.. கொஞ்சமாய் ஏறிய போதை இறங்கிப் போயே விட்டது.. போதையிழந்த பிரேம்சந்த் பேயைத் தேடத் தொடங்கினார்..சுற்று முற்றும் பார்த்தார்.. காலி கோப்பையும் புரோட்டா இல்லாத இலையும்தான் இருந்தது.. பேயைக் கண்டு பிடிப்பது சுலபமா என்ன..அதுவும் பாதிசரக்கடித்தப் பேயைக் கண்டுபிடித்துவிட்டால் விருதுகள் வந்து குவிந்து விடுமே..
வேகமாக நிலையத்திற்கு வந்தார்..
அங்கே தெய்வீக அதிகாரி.. டேபிளில் இருந்த சரஸ்வதி காந்தி அம்பேத்கார் படங்களுக்கு பூஜை செய்து கொண்டிருந்தார்..ஜவ்வாது விபூதியில் அவர் வழக்கமாக போட்டிருக்கும் நெற்றிப் பட்டை அந்த இரவு நிலையத்தில் தெய்வீக மணம் பரப்பிக் கொண்டிருந்தது..
பிரேம்சந்திற்கு தெய்வீக அதிகாரி மேல் சந்தேகம் வந்தது..இருந்தாலும் காலியான சரக்கு சென்ற இடத்தைக் கண்டு பிடித்தே ஆக வேண்டுமென உள் மனம் சொன்னது..
இவர் வெறும் அதிகாரி மட்டுமல்ல.. பிரேம் சந்தின் மேலதிகாரியும் கூட..அதுவும் தெய்வீக மேலதிகாரி..
பிரேம் சந்தின் கண்களைப் பார்த்துக் கேட்டார் மேலதிகாரி..
என்ன பிரேம்சந்த் இன்னும் தூங்கலையா.. பிளாட் பாரத்துல உலாத்திக்கிட்டிருக்கீங்க..
சார் அந்த வெயிடிங்க் ரூம்ல ரிடையர்ட் எஸ் எம் பேய் இருக்குன்னு சொல்வாங்களே அது உண்மைதான் சார்..
அப்புடியா..
ஆமாம் சார்...
நீங்க பார்த்தீங்களா...
இல்ல சார்..ஆனா பயமா இருக்கு சார்.. அதனால நான் இன்னிக்கு உங்க ரூம்லயே தூங்கறேன் சார்.. அதான் வண்டி ஒன்னும் இல்லைன்னு சொன்னீங்களே..
அட போங்க சார்.. நீங்க இந்த ஸ்டேஷனுக்குப் புதுசு.. அதனால தான் பயப்படுறீங்க.. அந்த டெட் எஸ் எம் பேய்க்கு கொஞ்சம் சரக்கும் ஒரு புரோட்டாவும் குடுத்தா அப்பறம் ஸ்டேஷன் பக்கமே வராது.. டூட்டி எடுக்கறதுக்கு முன்னாடி ட்ரெயினிங்க்ல யாரும் இதப்பத்தி உங்களுக்குச் சொல்லலயா... சரி சரி.. இங்கயே தூங்குங்க.. பயப்படாதீங்க.. நெக்ஸ்ட் டைம் அந்த ரூம்ல சரக்கு சாப்டறதா இருந்தா குவார்ட்டர் வாங்கிட்டு வராதீங்க.. ஒரு புல் வாங்கிட்டு வந்துடுங்க..
இப்போது பிரேம் சந்த் ஏன் மேலதிகாரி பணியில் சாமிபடங்களுக்கு பூ போட்டு சந்தண வத்தி ஏற்றி பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது லேசாக புரிந்தது போல் இருந்தது..
[பொறுப்புத் துறப்பு... இந்தக்கதை முழுவதும் கற்பனை என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.. எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை என்பதையும் இதன் மூலம் பதிவு செய்கிறேன்..]]
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments

Popular posts from this blog