கீதைச் சொல்லும் கதை சொல்லியும்...4

காலம் காலாற நடந்து கொண்டிருக்கையில் மானுடனை சுழற்காற்றுக்குள் சிக்க வைக்கலாம்..கணுக்கால் அளவு நீரோடும் தெள்ளிய வாழ்வின் நதியில் இறங்குகையில் பெருவெடிப்பினால் பிரளய வெள்ளம் உருட்டி உருட்டி அவனை புரட்டியும் போடலாம்.. ஒரு முடிவின் விளிம்பிளிருந்து உள் குதித்தல் தெய்வச் செயல். வெளியேற்றப்படுதல் விதியின் எச்சச் செயல்.. அக்காலத்துளியின் கடுமை மீறி மீண்டு வருதல் அல்லது சுழல் மீறியும் பிரளயத்தின் வேகம் தாண்டியும் உயிர்த்திருத்தல் வாழ்வதிசயம். அதிசயங்கள் எப்படி சாத்தியமாகின்றன.
சாதாரண வாடிக்கை நிகழ்வு விபரீதமாகி அதில் சிக்கித் தவிக்கையில் ஒரு கரம் நீளம்.. ஒரு பாதம் இன்னொரு அடியெடுத்து நம்மை நோக்கி வரும்.. ஒரு குடை விரியும்.. ஒரு வாகன ஓட்டி அருகில் வந்து ஏறிக்கொள்ளச் சொல்வார்..
நேற்று சட் டென கனமழை காஞ்சியில். பெயர்த்திகள் நடன ஒத்திகைக்காக நடனக்கூடத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.. மனமெங்கும் தெளிவற்ற பயம்.. இருசக்கர வாகனங்களின் சுழற்சக்தி காஞ்சி வீதிகளில் பெருமழையில் பொய்த்துப் போகின்றன.. நொடியில் இடுப்பு வரை கூட அதிவேகத்தில் சாக்கடை கலந்த மழை நீர் வெள்ளம் எகிறிவிடுகிறது..
கையில் இருந்ததோ பிய்ந்த குடை.. நெகிழிப் பையில் பால் பொட்டலங்கள்.. குழந்தைகளுக்கான நொறுக்குத் தீனிகள்.. மழை பொழிந்து கொண்டே இருக்கிறது.. வீதியின் வெள்ளம் முழங்காலைத் தாண்டி ஓடுகிறது.. எதிர் வரும் உந்தூர்திகளை நிறுத்தமுயன்றும் முடியவில்லை.. மழையின் அடர்வு கூடிக்கொண்டே இருக்கிறது.. வீதி வெள்ளத்தில் ஐக்கியமாகிய சாக்கடையின் அளவுகளும் கூட.
விருட்டென ஒரு மூன்று சக்கர உந்தூர்த்தி நிற்கிறது.. பிய்ந்த குடையில் ஒவ்வொரு பெயர்த்தியாய் வானரம் தன் குழந்தையை தூக்கி வருவது போல் தூக்கி ஊர்தியில் உட்கார வைக்கிறேன். நானும் குழந்தைகளும் முழுதும் நனைந்து விட்டோம்.. வீடு வர வாசலில் மழை நீர் நைல் நதி அடர்வுடன் ஓடுகிறது.. மீண்டும் குழந்தைகளை வானர வகைமையில் வாசலில் இறக்கிவிடுகிறேன்.. கொஞ்சம் மழைத்துளிகள் விழாத ஓரிடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு உந்தூர்த்திக்கான கட்டணத்திற்கு கைபேசியை இயக்குகிறேன்.. மின்னலை கோபுரம் அலைக்கற்றைகளை உமிழவில்லை.. கையில் காகிதக் காசுகள் இல்லை..
இருந்த இருபது உரூபாய்த் தாளை தருகிறேன்.. கட்டணம் எவ்வளவு என வினவ.. இது போதும் சார்.. என புறப்பட்டுவிட்டார்..அந்த ஒரு நொடியில் மழைத்துளிகளின் நடுவில் அரங்கனின் சயனத் திருக்கோலத்தை தரிசித்தேன்.. பார்த்தால் குழந்தைகளைக் காணோம்.. மழையில் இறங்கி இங்குமங்கும் தேடியவனிடம் மீண்டும் வந்து நிற்கிறது உந்தூர்தி.. சார் ஒரு கணவன் மனைவி உங்கள் பேரப்பிள்ளைகளை குடை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள்.. எனச் சொல்கிறார் வாகன ஓட்டி வடிவில் இருக்கும் அரங்கன்..
வேகமாக ஓடி வீட்டிற்கு வருகிறேன்.. குழந்தைகள் மழையை மீறி வீடு வந்ததை தன் அன்னையிடம் மழலையில் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அரங்கன் உந்தூர்த்தியில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி வந்தது மட்டுமல்ல... தற்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனும் மருமகளுமாக வடிவெடுத்த அரங்கனும் அரங்க நாயகியும் வீடுவரை குழந்தைகளை நனையாமல் பத்திரமாக சேர்த்தது அறிந்தவுடன்... அரங்கனின் இந்த கீதைச் சொல் மழை தகரக் கூரையில் விழும் சப்தத்தையும் மீறி ஒலிக்கத் தொடங்கியது...
யே யதாமாம் ப்ரபத்யத்தே தாம்ஸ்ததைவ பஹாம்யஹம்
மம வர்த்தமா நுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச:
[அரங்கன் அர்ஜுனனிடம் சொல்கிறான்.. என் பக்தன் என்னை நினைத்தால் போதும் நான் அவர்களுக்காக எந்த வடிவிலும் வந்து அவர்களின் முன் நிற்பேன்.. ஏன் எனக் கேட்கிறாயா... என் பக்தர்கள் என்னை தங்கள் சக்திக்கு மீறிய சமயங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள்.. மானுட சக்தி மீறிய எதுவும் என் பக்தனை அவர்களைச் சார்ந்தவர்களை துன்பப்படுத்துவதை நான் விரும்புவதில்லை..அதனால் உடனே அவர்களுக்கு உதவ எவ்வடிவையும் எடுத்து உடனே அவர்களுடன் நிற்பேன்..]
ரெங்கா.. என்ன தவம் செய்தேன்... எனக்காக எல்லா வகையில் எல்லா வடிவங்களிலும் ஓடோடி வரும் உனக்கு இந்த எளியவனால் என்ன செய்துவிட முடியும்.. உன் தரிசனத்திற்காக சில மணித்துளிகள் வரிசையில் நிற்கும் பொறுமை கூட அற்றவ பாவியிவன்.. உன் பாதங்களில் சரணடைவதைத் தவிர வேறொன்றும் செய்யவியலாதவன் உன்னைச் சிரமப்படுத்தியிருந்தால் மன்னித்தருள வேண்டும்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments

Popular posts from this blog