வறுமையில் செம்மை.. சிறுகதை..
-------------------------------
[ இந்தக் கதை தொன்னூறுகளில் உதயம் பத்திரிகைக்காக எழுதியது.. அதன் நகல் கிடைக்கவில்லை.. நினைவிலிருந்து இப்போது மீண்டும் எழுதியிருக்கிறேன்.. விஜயதசமிக்காகவும்... உலகளாவிய வாசகர்களுக்காகவும்..]
பாலுவின் பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். பாலுவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. அவனிடம் டிக்கெட் இல்லை. ஆனால் இரண்டு பேண்ட் பாக்கெட்களிலும் தங்கத் தாலி வில்லைகள் இருக்கின்றன. ஒரு பாக்கெட்டில் எப்படியும் இருபது இருக்கும்.. ஒரு வில்லை நாலு கிராம். அப்படியென்றால் என்பது கிராம் எவ்வளவு இருக்குமென கணக்குப் போட்டான்.. இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.. மனக் கணக்கை நிறுத்தினான்.. இதய வேகம் சீரானது.
மதியம் வயலில் இருந்து சாப்பிட குடிசைக்கு வரும் போது தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தாக வேண்டும்..அப்போது சாலையோரம் இந்தத் தங்கத் தாலி வில்லைகள் கிடைத்தன.. இரண்டு நெகிழிப் பைகளில் ரோஸ்கலர் பேப்பர் சுற்றிக் கிடந்தன..
குடிசைக்கு வந்துவிட்டான்..தங்கத் தாலி வில்லைகளை கையில் வாங்கிய நிலவழகிக்கு முகமெல்லாம் சிரிப்பு..
அய்யா.. அய்யனாருக்கு பொங்கல் வச்சுடுவோம்யா.. எவ்ளோ தங்கம்.. நம்ம கூரை பனை மட்டைய உருவிட்டு தென்னங்கீத்து வேஞ்சுடலாம்யா..
பொட்டலத்திலிருந்து ஒரு வில்லையை எடுத்து சாமிபடத்தின் கீழ் வைத்தாள்.. அருகில் ஓடிய வாய்க்காலில் ஓட்டமாய் ஓடி குளித்து வந்தாள்.. மஞ்சநூல் கயிறொன்றில் தாலியைக் கோர்க்கத் தொடங்கினாள்..அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாலுவிற்கு நெஞ்சுக்குள் நெருடல் இருந்து கொண்டே இருந்தது..
இந்தா புள்ள.. அத்தக் கொண்டா.. எல்லா தங்கத்தையும் போலீஸ்ல குடுத்துருவோம்.. இத்த தொலைச்சவன் எப்புடியும் போலீஸ் கைல சொல்லிருப்பான்.. போலீஸ் வந்தா திருட்டுப் பட்டம் கட்டிப் போடும்..
புறப்பட்டு விட்டான்.. அந்த கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் இல்லை..ஆனால் ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. மதியம் இரண்டு மணி வண்டியில் ஏறிவிட்டான்.. கையில் காசில்லை.. ஆனால் தங்கம் நிறைய இருக்கிறது..
ஒங்க டிக்கெட் குடுங்க.. பரிசோதகர் கேட்டார்..
இவனுக்கு பயத்தில் பேச்சு வரவில்லை.. அவனிடம் டிக்கெட் இல்லை என்பதை அவனின் முழி காட்டிக் கொடுத்துவிட்டது.. பரிசோதகருடன் வந்த ரயில்வே போலீஸ் .. ஏய் இப்புடி வா.. என பாலுவை கதவோரம் அழைத்து வந்தார்.. சோதனை செய்ய எத்தனிக்கும் முன்..
ஐயா..ஐயா.. எங்கிட்ட நெறைய தங்கத் தாலிங்க இருக்குங்க.. அதையெல்லாம் போலீஸாண்ட ஒப்படைக்க போயிட்டிருக்கேன்யா.. ரோட்டாண்ட கண்டெடுத்தேங்க...சொல்லிக்கொண்டே இரண்டு பொட்டலங்களையும் அவரிடம் கொடுத்தான்..
ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பாலுவிடம் எழுதி வாங்கிக் கொண்டு அங்கிருந்த லாக் அப் ரூமில் அடைத்து விட்டார்கள். ரயில்வே போலீஸ் அருகிருந்த எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தந்தனர்..
அதற்குள் பாலுவிடம் எத்தனை பொட்டலங்கள் கிடந்தன.. நீ எவ்வளவு மறைத்து வைத்தாய் என்ற கேள்விகள் உதிர்க்கப்படும் முன் லத்தியால் காலிலும் கையிலும் பலத்த அடிகள் விழுந்தன.
ஏறக்குறைய மயங்கிய நிலைக்குப் பாலு சென்றிருந்தான்.. அப்போது நன்னிலம் இன்ஸ்பெக்டருடன் நடுவயது நபர் ஒருவர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்..
அவரிடம் இரண்டு பொட்டலங்களையும் எடுத்துக் கொடுத்தார்கள்..
இரண்டையும் சரிபார்த்து பெருமூச்சு விட்டவர்..
சார் என்னோட தப்புங்க.. இவரு நேர்மையா உங்க கிட்ட எல்லா தாலி வில்லையையும் குடுத்துருக்காரு.. அவர மொதல்ல ரிலீஸ் பண்ணுங்க..
பாலு வெளியில் வந்ததும் ஓடிப் போய் கைகளை பிடித்துக் கொண்டார் அந்த நபர்..
தம்பி.. என்னோட தப்புக்கு நீங்க அடிவாங்கிட்டீங்க.. ஒங்க நேர்மைய புரிஞ்சுக்காம உங்கள அடிச்சிருக்காங்க.. என்ன மன்னிச்சுடுங்க.. என்றார்
அதனால பரவாயில்ல சார்.. எனக்கு பொய் சொல்றத்துக்கு வராதுங்க..அத்தத் தவுர போலீஸ்ன்னா ஒரு பயம்ங்க.. வண்டியில டிக்கெட் வேற எடுக்கலீங்களா..அதான் ஒளறிட்டேங்காட்டி..
சரிப்பா.. இந்தா வாங்கிக்க... எனச் சொல்லி ஐம்பது ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்தார்..
அதெல்லாம் வேண்டாங்க.. டிக்கெட் எடுக்காம வந்ததுக்கு பைன் ஐம்பது ரூபா நாளைக்கு தர்றதா எழுதி குடுத்துருக்கேங்க.. அத்த மட்டும் குடுங்க..
நானே கட்டிடறேன்பா.. சரி சரி ..நீ எந்த ஊரு..
விற்குடிங்க..
இப்ப டிரெயின் இல்லையே.. எப்புடி போவ.. எனச் சொல்லியபடி இன்னொரு ஐம்பது ரூபாயைத் தர பர்ஸைத் திறந்தார்..
பாலு போலீஸ் லத்தியடியால் காலை இழுத்து இழுத்து நடக்க அந்த நபருக்கு மனதை என்னவோ செய்தது..
வாப்பா... நம்ம பைக்ல போயிறலாம்..
பாலுவும் ஏறிக் கொண்டான். விற்குடி கிராமத்துக் குடிசைக்கு வந்தார்கள்..
ஏ புள்ள.. தங்க தாலி ஓனரு வந்துருக்காரு.. குடிக்க தண்ணி கொண்டு வா...
அந்த நபர் வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தார்...
அந்தியின் சிவப்பு கிராமத்து வயல்வெளிக் குடிசையை தங்க நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தது..
கையில் அலுமினிய குவளையில் தண்ணீர் கொண்டு வந்த நிலவழகியைப் பார்த்தார் .. அவரின் கண்கள் அவளின் கழுத்தைப் பார்த்தது.. அழுக்கேறிய மஞ்சள் கயிறில் விரலி மஞ்சள் வில்லை ஒரு துளி தொங்கிக் கொண்டிருந்தது..
பைக் பெட்டியைத் திறந்து ஒரு தங்கத் தாலி வில்லையை எடுத்தார்..
யம்மா.. போ போய் ஒரு தட்டு கொண்டா...
உடனே உள்ளே ஓடி நெளிந்த தட்டு ஒன்றைக் கொண்டு வந்தாள் நிலவழகி..
அந்தத் தாலி வில்லையை தட்டில் வைத்தவர்..
பாலுத்தம்பி..ஒன் பொன்சாதியோட சாமி படத்துக்கு விழுந்து கும்புட்டுட்டு வாங்கிக்க ...
அய்யா வேணாம்யா.. இத்து அரை பவுனு இருக்கும்யா.. ஆயிரம் ரூவாயெல்லாம் எங்களுக்கு ரொம்ப சாஸ்தியா.. ஒங்களுக்கு எதுனா இஷ்டம்னா ரெண்டு கட்டு கீத்து வாங்க பணம் குடுங்கய்யா... ஐம்பது ரூவா வரும்..
அந்த நபர் சிறிது யோசித்தார்..
எனக்காக அடி வாங்கி இருக்கிற.. போய் மஞ்சக் கவுறல கோத்து இந்த தாலிய ஒன் பொண்டாட்டி கழுத்துல கட்டு..
ஏறக்குறைய கட்டளை தொனியில் ஒலித்த குரலில்..பாலு பணிந்து விட்டான்..
தாலி வில்லையில் குங்கும் வைத்து நிலவழகியின் கழுத்தில் கட்டினான்..
அந்த நபரின் காலில் விழுந்து கும்பிட்டார்கள் இருவரும்..
இப்போது அந்த நெளிந்த தட்டில் நூறு ரூபாய் தாள் ஒன்றை வைத்தவர்.. நேர்மைக்கு விலையே கிடையாதுப்பா... வாங்கிக்க.... என்றார்..
அந்த வார்த்தைகளில் யாரோ மண்வெட்டியால் மனதை வெட்டி வரப்பில் கொட்டுவதைப் போல் உணர்ந்தாள் நிலவழகி..
சற்றும் யோசிக்காமல் விரலி மஞ்சள் துளி கோர்த்த தாலியை கட்டிக்கொண்டு தங்கத் தாலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தாள்.. பாலுவைக் கட்டிக் கொண்டு கதறத் தொடங்கினாள்.. இருவரும் குடிசைக்குள் சென்று தட்டிக் கதவை சாத்திக் கொண்டார்கள்.. இருள் கவியத் தொடங்கியது..
அந்த நபர் பைக்கை கிளப்பிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.. நெளிந்த அலுமியத் தட்டில் இருந்த தாலி வில்லையின் மேல் எங்கிருந்தோ ஒற்றை மாலைச் சூரியனின் மெலிந்த மஞ்சள் கீற்றொளி பட்டு பிரதிபலித்தது.. அவ்வொளி இப்போது குடிசைக்குள் வெளிச்சமிட கதவிடுக்கு வழியே நுழைந்து கொண்டிருந்தது..
ராகவபிரியன்

Comments
Post a Comment