பூமிதேவி பின் நவீன கவிதைகள்...3

மனித மனம் விசித்திரமானது அன்னையே.. ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இப்படித்தான் தொடங்குகிறார் இந்தப் பாடலை.. தனக்கு இன்பம் தரும் தீமையானவற்றைக் கூடச் செய்யச் சொல்கிறது மனம்.. ஆனால் பகுத்தறிவும் உன்மீதான பக்தியும் உள்ள மனம் அது தீமை என்று எடுத்துச் சொல்கிறது..ஆனாலும் சிற்றின்பம் தரும் சுகத்திற்காக செய்யும் தீமையை எதோ நன்மை செய்வதாகத்தான் என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன்.. சில நன்மைகளையும் உன் அருளால் இந்த அடியவனால் செய்ய முடிகிறது.. ஆனால் அதிலேதோ தவறு இருப்பதான குற்றவுணர்வும் உடனேயே உருக்கொள்கிறது.. பெருமழையில் அரசமரத்தடியில் துளசியுடன் விஷக் காளாண்களும் முளைவிடுவது போல் அறியாமை என்னை ஆட்டிப் படைக்கிறது.. தீமையை நன்மையென நம்பச் சொல்லும் மனதின் ரேஷனலைசேஷன் அதாவது தற்காப்பு மனநிலை சதா இம்சித்திக்கொண்டே இருக்கிறது.. இதைத்தான் ஆச்சாரியர் தனது பூஸ்துதியின் மூன்றாவது பாடலில் சொல்கிறார். அந்தப் பாடலை என்னளவில் பின் நவீன பாணியில் தமிழில் தருகிறேன்.. இது மொழி மாற்றமோ மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ இல்லை...


நித்யம் ஹிதாஹித விபர்யய பத்த பாவே

த்வாத் வீக்ஷணைக விநிவர்த்ய பஹூ வ்யாபாயே

முக்தாக்ஷ்ரை ரகிலதாரிணி மோதமாநா

மாத: ஸ்தநந்தய தியம் மயி வர்த்தயேதா:

[ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகர்]


இன்பமழை அமிலமென பெய்தாலும்

நனையவே ஆசைப் படுகிறேன்..

மனவெளியில் வெற்றுடல் மிதக்கட்டும்..

தீமையின் தவளைகளைப் பிடிக்கும்

மழைப் பாம்புகளென அமில ஆற்றில்

நீந்தியபோதும்..

எதிர் நீச்சலதுவென இறுமாந்து போகிறேன்..


நன்மையின் ஆலங்கட்டி மழை 

உச்சந்தலையை உடைக்குமென எண்ணுகிறேன்..

தீமையின் அமில மழை

உடல் சுத்தம் தருமெனவும் சொல்லுகிறேன்..


அம்மா இவன் அறிவிலி..


இவனின் சல்லடையாய் அமிலம் துளைத்த உடல்

பாபங்களே மிச்சமெனக் காட்டட்டும்..


பூமித்தாயே..

இந்த முட்டாள் குழந்தை உன் அருளுக்காக

ஏதேதோ மழலையில் பிதற்றுகிறது..


மழலையின் மொழிகளில் தாய் மகிழ்வாள்


நீயோ பூமித்தாய்.. பொறுமைக் கடல்..


இந்த பிதற்றல் மொழிகளை

உன் குழந்தையின் கொலுசு சப்தமென

ஏற்றருள்வாய்...


ராகவபிரியன் தேஜஸ்வி...

Comments

Popular posts from this blog