கொலு சாக்லேட்.....சிறுகதை

--------------------------------------
நம்மாத்துல ஏம்மா கொலு வைக்கறதில்ல..
மூத்த தங்கை கேட்டாள்..
அம்மாவின் மடியில் எனது நான்காவது தங்கை. பிறந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது..
நம்மாத்துல வழக்கம் இல்லடா.. எதுக்குக் கேக்கற..
இல்லம்மா.. விசாலமாத்துல அந்த மாமி நேக்கு சுண்டல் தரமாட்டேன்னுட்டா..
ஏன்..
தீர்ந்து போச்சுன்னு சொல்லிட்டா..ஆனா பேசின்ல நெறைய சுண்டல் இருந்துதும்மா...
என் இன்னொரு தங்கையின் கையிலிருந்து கொண்டைக் கடலைச் சுண்டல் பருப்பில் இரண்டு எடுத்துக் கொடுத்தேன். தங்கை அழத் தொடங்கிவிட்டாள்..
நாங்கள் ஆறு குழந்தைகளும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு பார்க்கப் போவோம்.. ஆனால் நான் உள்ளே செல்ல மாட்டேன். மற்ற குழந்தைகளுக்கு கரண்டியில் அள்ளப்படும் சுண்டல் எங்கள் முறை வருகையில் ஸ்பூனாக மாறிவிடும்..அறியாத வயதிலேயே அவமானம் தன் உருவத்தைக் காட்டிக் கொடுத்தது அப்போதே எனக்கு..
இப்போது அம்மாவிடம்..
ஏம்மா பாட்டி நெறைய பொம்மை வச்சிருக்காளே.. அதெல்லாம் எடுத்துண்டு வந்து கொலு வைக்கலாமா..
கேட்டுவிட்டேன்.. என் பாட்டி வீட்டில் ஐந்தடி உயர நான்கடி நீள ஆறு அடி அகல பழைய பர்மா தேக்குப் பெட்டியில் பொம்மைகள் பூட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்..
வழக்கம் இல்லேன்னா போடா பேசாம..
பிறகு நாங்கள் அடுத்தடுத்த வருடங்களில் நவராத்திரி கொலுவிற்கு சுண்டல் வாங்கச் செல்வதில்லை..
தங்கை திருமணம் முடிந்து புக்ககம் போன வருடம்..
அண்ணா எங்காத்துல இந்த வருஷம் கொலு இருக்கு.. வரயா...என்றாள்.. அவ்வளவு சந்தோஷம் குரலில் தெறித்தது..
கையில் நிறைய பொம்மைகளுடன் அவள் வீட்டிற்குச் சென்றேன்.. நிறைய குழந்தைகள் வந்திருந்தார்கள்.. ஒவ்வொருவர் கையிலும் கரண்டி கரண்டியாய் அவள் சுண்டலைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. வாசலில் இருந்து கூடம் வரை சுண்டல் கிடந்தது.. பார்த்துப் பார்த்து மிதிக்காமல் சென்றேன். என் கையை விரித்து இரண்டு கரண்டி சுண்டல் வைத்தாள்.. மனதிற்குள் சுண்டல் மலையொன்றிற்குள் ஏறுவது போல் இருந்தது..
உடன் வந்திருந்த மகள்
அப்பா நம்மாத்துலயும் கொலு வைக்கலாமா
உடனே முந்திக்கொண்ட மனவி ..
அதெல்லாம் வழக்கம் இல்லடி.. போ .. அக்ரஹாரத்துல எல்லாக்
கொழந்தைகளோடவும் போய் எல்லாராத்துலயும் கொலு பார்த்துட்டு வா..அப்புடியே சுண்டலும் வாங்கிண்டு வந்துடு...
குழந்தையின் முகம் வாடிவிட்டது..
நான் வாசலிலேயே அமர்ந்திருந்தேன்.. குழந்தை ஓடி வந்து தான் பார்த்த கொலுவைப் பற்றி மூச்சு வாங்க வாங்க விவரித்தாள்..
யாராத்துலயும் சுண்டல் தரலயா..
நான் வாங்கலப்பா...
சுளீரென மனதில் சாட்டையடி ஒன்று விழுந்தது..
என் வீட்டிலும் கொலு வைப்பதென முடிவு செய்தேன்.. நிறைய விசாரித்தேன்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலு வைக்கலாம் என்ற அறிவுரைகள் கிடைத்தன..பழைய பொம்மை இருந்தால் அதை வைத்து கொலு வைக்கலாம் என பெரியவர் ஒருவரின் அறிவுரையை நடைமுறைப் படுத்த முடிவு செய்தேன்.. ஆனால் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை..
அடுத்த ஆண்டு அட்டகாசமாக ஐந்து நிலைப் படிகள் அமைத்து.. கொலு வைத்தாகி விட்டது..
எல்லாக் குழந்தைகளுக்கும் சுண்டல் கொடுத்தே ஆக வேண்டுமெனும் என் கட்டளை மனைவிக்குப் பிடிக்கவில்லை..
சுண்டல் தீர்ந்துவிடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. சுண்டல் தீர்ந்த பிறகு வரும் குழந்தைகளுக்கு மனைவிக்குத் தெரியாமல் சாக்லேட்கள் கொடுப்பேன்.. ஒரு குழந்தையின் கை கூட வெறும் கையாக திரும்பக்கூடாதென்பதில் கவனமாய் இருந்தேன்..
இந்த வருடம் என் தங்கை தன் குழந்தைகளுடன் கொலு பார்க்க வரப் போவது எனக்குத் தெரியாது..
இரவு ஒன்பது மணிவரை வாசலில்தான் இருந்தேன்..
கடைசீ பஸ்ஸில் தங்கை வந்திருக்கிறாள்..
கொலு ரொம்ப நன்னா இருக்கு அண்ணா.. இன்னிக்கி என்ன சுண்டல் பண்ணினே...
நிலக்கடலை... மனவி சொன்னாள்..
நேக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா... கொழந்தைகளுக்கும் ரொம்ப புடிக்கும்.. சொல்லிக்கொண்டே கை நீட்டினாள்.. குழந்தைகளும் கை நீட்டின..
ஒவ்வொரு கையிலும் ஒரு சாக்லேட்டை வைத்தேன்..
ராகவபிரியன்.

Comments

Popular posts from this blog