ஸ்ரீ ஸ்துதி ...3
மானுட வாழ்வியல் கூறுகளில் அளவிடவியலாதது புகலிடமென்பது. மனிதன் தன்னை எவ்விடத்திலாவது புகுத்திக்கொள்ள வேண்டும். இடம் என்பது அன்றாட இயக்கத்திற்கான புகுதல் தரும் வெளியோ இல்லை அவசிய ஓய்விற்கான அல்லது உறக்கத்திற்கான உள்ளோ அல்லது இல்லோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னின் புகலிடம் தனக்குச் சொந்தமானதாக இருத்தல் வேண்டுமெனும் எண்ண உந்துதலில் உள்ளும் வெளியும் தனதன்றி உழன்றும் ஓடியும் வாழ்விழத்தலுக்கான புகலிடம் அமைத்துக்கொள்வது தான் சாமாணிய மானுட யதார்த்தம். ஏழைகளின் வாழ்வியலில் சொந்தம் என்னும் சொல்லின் ஆழம் தனிமனித சிந்தையின் அளவீடுகளுக்குள் அடங்கக்கூடியதெனின் பணத்தாள்களின் சந்தம் இல்லையெனின் சொந்தம் எதுவும் இல்லையென்பதே பொருள். வாழ்வியல் அறம் சார்ந்த சிந்தை சொந்த இல்லத்தைச் சொந்தம் கொண்டாடுவதில்லை அல்லது சொந்தம் கொண்டாடவியலா சூழல் இல்லை என்பது மானுட எண்ண இயக்கவியல் விதிகளில் உள்ளதா என்பது அதிதீவிர ஆய்விற்குட்பட்டது.
அறவாழ்வின் இல்லப் புகலிடத்தில் துறவாசிரம வாழ்விடப் புகலிடம் அமைத்தல் என்பது ஆன்மீகத்தின் பயிற்சியினால் சாத்தியமாகக்கூடலாம். ஆனாலும் துறவறம் புகுதலுக்கான புகலிடங்கள் புராண காலங்களில் காடு வாழ் பர்ணசாலையெனும் புள்ளியில் தொடங்கி பின்பு காசி புகும் ஆபத்தான பயண இரந்துண்ணும் வாழ்வென விரிந்து நிகழ்வில் இல்லத்தாரால் அல்லது இல்லறமீறிய சொந்தங்களால் கைவிடப்பட்டு வீதிகளிலோ இல்லை முதியோர் இல்லங்களிலோ ஆதரவின்றி புழுதி சூழ் புகலிடம் அமைத்துக்கொள்ளுதல் என்பதாக புரிந்து கொள்ளுதல் யதார்த்தத்தின் முரண் அல்ல.
பிறந்ததே சொந்தமற்ற குடிசையில் தான். பின்பு வாழ்வியில் துரத்தல் அதிகாரங்களில் இடம் பெற்றது வாடகைப் புகலிடங்கள் மட்டுமே. பிறகான வாழ்வின் அந்திம அறுபதுகளின் தொடக்கத்தில் அரங்கன் சொந்தப் புகலிடமொன்றை அமைத்துத் தந்தது ஆன்மீக அருட் கொடையின் இருத்தலிய நிஜம். இருப்பினும் அரங்கன் மீண்டும் ஆன்மீக வாழ்வியலில் இருத்தலிய புயலை உருவாக்கி அமைதி குலைந்த கலைந்து கிடக்கும் வாழ்விடப் புகலிடமாக காஞ்சி மண்ணில் பாதம் புக வைத்ததன் காரணம் அறிய ஆன்மீகக் கூறுகளை கலைத்துப் போட்டு மீண்டும் அடுக்கியாக வேண்டிய அவலமன்றி வேறென்ன. அடுக்குதல் சாத்தியமாக நடுக்கம் நின்றாக வேண்டும்.
எவ்வித நடுக்கமும் இன்றி ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகர் உரத்து பிரபந்தங்களை பகல் பத்து இராப்பத்து விழாக்காலங்களில் கச்சி வரதன் முன் வாசிப்பு குரல் வான இடியென முழங்குகிறார். பழமை வாதிகள் திவ்யத் தமிழின் உயிர்ப்பு வார்த்தை மின்னல்களால் தாக்குண்டு ஆச்சார்யனை திருவரங்கம் செல்லும் துரத்தல் பயணம் உடுத்திக்க் கொள்ள வைத்துவிடுகிறார்கள். இது ஒரு ஆன்மீக கட்டாய இல்லறத்துறவுத் திணித்தல் புகுதலெனக் கொள்ளுதல் அன்றைய வாழ்வியலில் அதிகார உட்புகதலின் வன்மைத் தாக்கமாகவும் இருந்திருக்கக்கூடலாம்.
ஆன்மீக அதிகார துறவற துரத்தல் புகுத்தல் வரலாற்றின் இன்றளவும் உயிர்த்திருக்கும் நினைவு நிகழ்வாக கச்சி வரதன் முன் ஒற்றைத் திருச்சின்னமே இன்றும் கூட இசைக்கப்படுவது ஆன்மீக வாழ்வியல் நிஜம். அப்படியான மரணமற்ற ஆன்மீக வரலாற்றின் ஜீவித ஆன்ம உயிர்த்திருக்கும் அம்சம் ஒன்றை ஆச்சாரியனே அமுதத் தமிழில் இப்படிச் சொல்கிறார்...
மறைத்தலை யிலிசையெழுத்தில் வணங்கும் வாக்கின்
மந்திரத்தினா லெழுத்தாந்திரு நாமத்தில்
நிறைத்திலகு வேற்றுமையில் இரண்டாம் ஒன்றில்
நெடுமால் தன் கீதையெல்லாம் நிறைந்த சொல்லில்
உரைத்தவர் கண்டு உரைத்த பொருளாம் எல்லாம்
உயர் விரத அருளாளப் பெருமாள் தேசின்
திறத்திலியை திருச்சின்னமாலை பத்தும்
செவிக்கினிதாம் சிற்றின்பம் இசையாதாரே
[ நிகம்மாந்த மஹாதேசிகர்]
அரங்கனையும் அரங்க நாயகியையும் புகழ்ந்து பிரபந்தங்கள் உரத்து வாசிக்கும் பக்தர்களுக்குப் புகலிடம் அரங்க நாயகியின் சந்நிதியோ இல்லை பெருந்தேவியின் சந்நிதியோ தான் என நிகம்மாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதியில் முழக்கமிடுகிறார்.
ஸ்தோதவ்யத்வம் திசதி பவதீ தேஹிபி: ஸ்தூயமாநா
தாமேவ த்வாமநிதா கதி: ஸ்தோது மாசம்ஸமாந:
ஸித்தாரம்ப: ஸகல புவந ச்லோகநீயோ பவேயம்
ஸேவாபேக்ஷா தவ சரணயோ: ஸ்ரேயஸேகஸ்ய ந ஸ்யாத்!!
[ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகர்]
[அரங்க நாயகியே.. பெருந்தேவியே... அரங்கன் முன் பக்தர்கள் உரத்து பிரபந்தங்களை முழங்க நீயும் சாமாணிய உலகாயதர்களும் மகிழ்கிறார்கள்.. அப்படியான முழக்கமிடும் பக்தன் புகழும் பெருமையும் அளவின்றி பெறுகிறான். அவற்றை அள்ளி அள்ளித் தருவதும் நீ தான். ஆகையினால் ஆன்மீக அதிகாரம் வெகுண்டெழுந்து துரத்தப்பட அவன் தன் வாழ்விடம் இழக்க நேரின் புகலிடம் நின் சந்நிதியன்றி வேறெதுவும் தலைதெறிக்க புகலிடம் தேடு ஓடும் இவ்வடியவனின் பார்வையில் சிக்கவில்லை. என்ன செய்வது? இப்போது உன் முன்னே வாழ்வின் அந்திமமும் உரத்து முழங்கிய களைப்பும் பிரபந்த முழக்கமிடும் வானக் குரலிடியின் அசைக்கவியலா சக்தியிழந்து நிற்கிறேன். இருப்பினும் உன் முன்னே பிரபந்தம் முழக்கமிடும் தெய்வீகக் கட்டளையை திருவரங்கத்தில் இல்லையெனில் கச்சியிலோ இல்லை வேறு ஏதாவதொரு திவ்ய தேசத்திலோ கண்டிப்பாக செய்தாக வேண்டுமெனும் இவ்வடியவனின் விருப்பமே இடி முழுங்க போதிய சக்தியைத் தருமென நம்புகிறேன்.]
திருவரங்கன் திருவடிகளே சரணம்
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment