சிறுத்தையொன்று அடர்மரத்தின்
உச்சியில் உயிரற்று உறங்குகிறது..
அதனின் இன்னொரு பிறப்பில்தான்
என நிச்சயமறிந்த
மான் கூட்டங்கள்
மருவி மருவி தலை நிமிர்த்தி
கொம்பு சுழற்றி மகிழ்வின்
உரையாடலில் திளைக்கின்றன..
சிறுத்தை தாகம் தனித்த
நேற்றையின் ஆற்றங்கரையில்
அதன் நீண்ட உடல்
வெளியேற்றிய மின்னும் புள்ளிக்கருப்புகள்
மரணமற்ற ஜீவித மின்னலை
இன்னமும் வீசிக்கொண்டிருக்கின்றன.
அம்மின்னல் பிரதிபலிப்பின்
கூரிய மையக் கிரணத்தாக்குதலில் கூட
அதன் மரணம் இழுத்துச் சாத்திய
பார்வைக் கதவங்கள் இனி
திறக்கப்போவதேயில்லை...
அடர்மரத்தைச் சுற்றிய
அதன் பாய்ச்சல் கோட்டைக்குள்
புகுந்த முயல்கள்
மரணித்த அதிகார வேட்டையின்
ஈமச் சடங்குகளை
கல்யாணச் சாவென குதித்துக் குதித்து
கொண்டாடிச் செய்கின்றன..
மறைந்து பதுங்கி தாக்கும்
அதிகாரம் மரணித்ததால்
அலங்காரம் நீக்கிய
மிகை தவிர்த்த பசுக்கூட்டம்
உயிருக்காக ஓடும் வேகத்தை
கொஞ்சம் குறைத்துக் கொள்ளவியலுமென
மரபு சார் ஓட்டக் கலையின்
கால் இடைத் தொலைவைக்
குறுக்கிக்கொண்டு மேயத் தொடங்கின...
ஒரு அதிகாரத்தின் மரணம்
வான உச்சத்தில் நிகழ்ந்தாலும்
தரையின் பள்ளங்களில் புதைந்தாலும்
உறைந்து போன
சில உயிரியல் வாழ்வச்சம்
தற்காலிகமாகவேனும் நீங்குகிறதென்பதுதான்
இயற்பியலின் இயங்கியல்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment