Thursday, September 25, 2025

 








கைபேசியில் முன்பதிவு செய்கையில்
இரண்டு நெருஞ்சி கொத்துகள்
நடு மற்றும் மேல் படுக்கையென
ஆள் காட்டி விரலில் தைத்துவிடுகின்றன..
பயணித்தாக வேண்டிய கட்டாயம் துரத்த
குழந்தைகளை மேல் படுக்கை ஏணியில்
ஏற்றி விட்டு
நடுவில் தொங்கும்
முட்படுக்கையில் தவிக்கிறது தாய்மை..
கீழ்படுக்கை வென்று வந்த கிழவர்கள்
பயணச் சாதனைச் சால்வையை
இழுத்துப் போர்த்தியபடி
மனிதம் இறந்து போகும்
கால நொடிகளின் முகத்தை
மூடிக்கொள்கிறார்கள்..
பயணச்சீட்டுப் பரிசோதகர்
ஒரு பிடி மெளனத்தை
வாயில் வைத்துக் குதப்பியபடி
தலைகுனிந்து
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட
அறப் போராளியென
தவிக்கத் தொடங்குகிறார்.
மேல் படுக்கை குழந்தை புரண்டு
விளிம்பு வரை வருகிறது..
உறக்கமற்று
சதா ஆடிக்கொண்டிருக்கும்
தாய்மை ஊஞ்சல்
சட் டென
கைவிரித்து ஏந்திக் கொள்கிறது..
தொடர் வண்டியின் ஓடும் சப்தம்
இதயச் சப்தங்களை
நிணம் சிதைக்கும் கத்தியால்
துண்டு துண்டாய் வெட்டிக் குவிக்கிறது.,,
பயணம் முடியும் வரை
தோளில் குழந்தையுடன்
தொடர்வண்டிப் பெட்டியில்
மேகங்களில் ஊரும் நிலவென
நடந்து கொண்டிருக்கும் தாய்மை..
விலை கொடுத்து வாங்கப்பட்ட
உறக்கமுடனான
பயணப் படுக்கையில்
உறங்கவியலாவிடில்
தூக்கத்தினதும் தாய்மையினதுமான
வண்டிச் சத்தம்
என்ன விலை வைத்துத்
திருப்பித் தரப்படும்?
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...