Thursday, September 11, 2025

 







வாழ்வின் அந்திமத்தில் இதுவரை கால்வைக்காத பெரும் நகரொன்றின் கடைவீதிக்குச் செல்லுதல் திணிக்கப்பட்டுவிட்டது. கொள்முதலெனும் கலை கைவரப்பெற்றவர்கள் ஏதுமற்ற குகையில் கூட சில மூலிகைகளை உருவி வந்துவிடுவார்கள். வழமையான கொள்முதற் இடங்களில் வாங்கும் பட்டியலின் மனனம் அவசியமற்றது. கால்களும் சக்கரங்களும் இருப்பிட அட்ச ரேகை தீர்க்க ரேகை கணிப்புகளை நுட்பமாக அலசி அணிச்சையாய் நம்மைக் கொண்டு சேர்த்துவிடுவது வாடிக்கையியலின் பரிணாம வளர்ச்சி.

காஞ்சியின் எல்லா வீதிகளிலும் விடிந்தவுடனேயே சில சிற்றுண்டித் தள்ளுவண்டிகள் குறிப்பிட்ட சில கால இட இடைவெளிகளை நிரப்பத் தொடங்கிவிடுகின்றன., நீராகாரங்கள் இடம்பெயர்ந்து பழைய தயிர் சோறுகளுடன் புறப்பட்ட மானுட வாழ்வியலின் கோவணம் தொல்பொருட்த்துறையால் இனி அகழ்ன்றெடுத்தே ஆகவேண்டும்.. இன்றைய காஞ்சியின் அகன்ற வீதிகளின் போக்குவரத்து நெரிசலின் அடர்வை அளவிடுதலென்பது இயலாது. நிகழ் வாழ்வியலின் அவசரம் உந்தித் தள்ள விடியலிலேயே அடர்ந்து கொண்டு அது கெட்டிப் படுவது சுற்றியிருக்கும் தொழிற்சாலை வெளியேற்றி உள்வாங்கும் மனிதவள மேம்பாட்டியிலின் விகிதாச்சார ரசயான கழிவு. ஆங்கே ஆயத்தச் சிற்றுண்டிக்காக முண்டியடிக்கும் கூட்டமும் அதனைக் கொணர்ந்த வாகனங்களின் தாறுமாறான நிறுத்தல்களும் சுருட்டப்பட்ட கொள்முதல் பட்டியலை விரித்து வாசிக்க ஒரு துளி இடவசதி அளிப்பின் அதுவே காலத்தின் பெருங்கருணை.
விடியற் கால அவசரக் காற்று சற்று ஓய்ந்தால் கொள்முதலுக்கான சந்தைச் செல்லுதல் இலகுவாகுமென்பது காஞ்சிவாழ் மானுட பேராசையெனில் அதுதான் நிஜம். அடர்ந்த காஞ்சியின் போக்குவரத்து நெரிசல் மீறி கடைவீதிகளில் கொள்முதற் பட்டியட் பொருட்களை முழுமையாய் பற்றி வருவதென்பது பகீரத பிரயத்தனத்திற்கு சற்றும் குறைவானதல்ல..
போக்குவரத்து சற்று அடர்வு குறைந்து பெருமூச்சிற்கான இடம் கிடைக்கையில் சுருட்டப்பட்ட பட்டியலை மூச்சுக் காற்றால் விரித்து வாசிக்கக் கிடைப்பதென்பது நேர மேலாண்மையின் முதுகலைப் பட்டம் பெறுவது போன்றது. அந்த அரிய வாணிக நுகர்வுப் பட்டியலை நொடியில் நோக்கி முதுகலை பட்டத் தேர்வை வென்று நிகழ் போக்குவரத்து நெரிசல் பல்கலையில் பட்டம் பெற்றால் கொள்முதல் கூறுகளை அள்ளிவருதல் சுலபம்.
ஒரு வழியாய் கடைவீதிச் சந்தை புகுந்தாகிவிட்டது. கொள்முதல் அறத்தின் பேரம் பேசும் அத்தியாயம் கிழித்தெறியப்பட்டு மின்னனு எடையின் அடியில் காந்தமாய் ஒட்டப்பட்டு இறந்து கிடக்கும் யதார்த்தம் விவரணைகளைக்கூட விற்றுவிடும். நிகழ்ச் சந்தையின் விற்பனை நிலைவிலையின் நெகிழ்வுகள் சிதைவனுமதியற்றுப்போனதால் கொடுக்கல் வாங்கல் யுகத்தில் ஒரு கட்டு கீரை வாங்குதல் கூட விளிம்பு நிலை மானுட வாழ்வியலில் சவாலாகிப் போனது யதார்த்த இருண்மை. காஞ்சியின் கடைவீதியில் மாமல்ல பேரரசன் போர்த்தளவாடங்களுக்களுக்கான சந்தையை அமைத்திருக்கிறானாவென சரித்திரம் பேசும் இலக்கியங்களை துலாவத் தொடங்கியது இருண்மையின் குகைக்குள் கைவிளக்கின்றி கால்வைக்கும் அசட்டுத் துணிச்சலின் ஒரு விழுங்கவியலா மிடறு.
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ,
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடைகால் யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த...
எனும்
காஞ்சி மாநகரம் என்ற உருத்திரங்கண்ணனாரின் ஊடுபார்வையை கைவிளக்காக்கி ஒரு கட்டு கீரையின் நெகிழ்விற்கு அப்பாற்பட்ட நிலை விலைத் தகவல் கோரிஆக பவ்யமாய் விண்ணப்பிக்க குகை புகும் கலவர மூடியொன்று திடீரென திறந்து கொண்டது.
என்னதான் செய்வது
மாமல்லப் பேரரசன் கீரை சாப்பிட்டிருத்தலுக்கான வரலாற்றுச் சான்றுகள் கண்டிப்பாக கிடைத்திருக்க வாய்ப்பே இல்லையெனும் நிஜம் பொட்டில் அறைந்தது.
மேற்சொன்ன காஞ்சிப் பாடல் மொழியின் கலவரத்தில் கொள்முதற் பட்டியலைப் பறக்கவிட்டு கீரையில்லாமல் வீடு புக நேர்ந்தது அந்திம வாழ்வின் அகற்றவியலா துயரன்றி வேறென்ன.. வீடு புகுதலும் குகைபுகுதலும் பிரிக்கவியலா இரட்டைகள் தானே..
ராகவபிரியன்.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...