விரிந்து கிடந்த கல்லூரி மைதானமெங்கும்
கலாச்சார பார்வைக் கூழாங்கற்கள்
கைகோர்த்தபடி காதலியுடன்
காளிகோயில் நோக்கி நடக்காதே...
பார்
உடன் வரும் சாமுண்டியின் சூலத்திலிருந்து
சொட்டும்
சண்ட முண்டா தலைகளின் குருதி
கூழாங்கற்களைச் சிவப்பாக்குகிறது..
யாருமற்ற புதர் மண்டிய திடலெங்கும்
பார்வைப் புதர்கள் ஒளியூடுருவவியாலா
அடர்கொண்டு மண்டியிருக்கையில்
அவ்விடத்தில்
காதலியுடன் தனிமையில் உறவாடாதே...
உரத்த உறவுச் சப்த காந்தர்வ தாத் இசையொலி
சாதிவெறியனின் அரிவாளொன்றையோ இலையெனின்
கூட்டுப் பலாத்காரக் குழுஒன்றையோ
இழுத்து வந்து
கூழாங்கல்லில் சிவப்பைக் கொட்டிச் சென்றுவிடலாம்..
வறண்டு கிடக்கும் அகண்ட ஆறொன்றின்
மணற் தரையில் பார்வை எல்லைகளைத் தாண்டிய வெளிப் படுகையதில்
காதலியுடன் சாயம்கால
உரையாடல் நிகழ்த்துதல்
மாபெரும் மடத்தனம்.
என நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
அவ்விடப் புதைமணற் குழிகளில் தான்
புலைய மாடன் திரெளபதி அம்மன்
கால பைரவன் மகிஷி அட்டங்கம்மா
இன்னும் பல தெய்வீக சுடு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன..
இலக்கியங்களை நம்பி
எதிர்காலத் துணையின்
கைரேகைகளை வருடிக் கொண்டிராதே..
நிகழ் காலத்தில் இன்னமும்
சாதக ஆற்றங்கரைகளில் தான்
ஆடிப்பெருக்கில்
தாலி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
நிஜம் உணர்..
கொய்யப்பட்ட
சண்டா முண்டா தலைக் குருதிகளால்
ஈரமான கூழாங்கற்கள்
இன்னமும் காய்ந்து விடவில்லை...
கைகோர்த்து நடந்தாலும்
எதிர் கலாச்சார
தண்டவாளங்களின் மேல்
விழாமல் நடப்பதென்பது ஒருக்காலும் நடக்காது..
ராகவபிரியன்
No comments:
Post a Comment