Tuesday, September 16, 2025

 








பக்தியின் காலம் ஒரு தொடர் வண்டி. என் ஆன்மீகப் பயணத்தில் சற்று கண்ணயர்ந்து விட்டிருக்கிறேன் நான். திரவரங்க வீதிகளைச் சுற்றிக்கொண்டிருந்தவனை நொடிப்போதில் காஞ்சிமா நகரில் கொண்டுவிட்டுவிட்டது காலம். இதோ இப்போது காஞ்சியின் வீதிகளில் காமாட்சியைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

பக்தி என்பது வாழ்வமைப்பின் வீடு மாற்றும் செயல் அல்ல. பக்தி என்பது சைவத்திலிருந்து வைணவத்திற்கோ இல்லைக் கோவிலைச் சுற்றுவதிலிருந்து வீதி சுற்றுவதோ இல்லை. பக்தியை பழகுவதும் விளையாட்டைப் பழகுவதும் வெவ்வேறானவை. விளையாட்டுத் திடலைச் சுற்றிய கால்கள் விரைவில் வீடடைய விரும்பும். கோவிலைச் சுற்றும் கால்கள் இறைவனை அடையத்தான் ஓடும்.
திருவரங்கனைச் சுற்றியவனை காமாட்சியைச் சுற்ற வைத்தவன் வரதன். காமாட்சியும் பெருந்தேவியும் அரங்க நாயகியும் இவனுக்கு ஒன்றுதான். ஆனால் திருவரங்கனைச் சுற்றுவதும் காஞ்சியைச் சுற்றுவதும் வித்தியாசமானவை. பக்தியின் கலிடியாஸ்கோப் சுற்றிக்கொண்டிருக்கையில் காஞ்சியையோ இல்லை அரங்கத்தையோ அவ்வளவு எளிதில் சுற்றுதல் என்பது இயலாது.
திருவரங்கனைச் சுற்றும் போதெல்லாம் மனம் இலகுவாகி அரங்கன் கருமேகமென நெடுஉரு கொண்டு உரையாடி உடன் வருவான். காமாட்சியைச் சுற்றும் போது வரதன் நீ பெரிய காஞ்சியைச் சுற்றுகிறாய் எனச் சொல்லி என்னை அனுதினமும் பகடி செய்கிறான். திருவரங்கம் என்பது ஆகப் பெரிய ஒன்று. பெரிதான எதுவும் தன்னைப் பெரிதெனச் சொல்வதில்லை. பெரிதினும் பெரிது கேள் என்பது தமிழ்த்தாரகம். பெரியகோவில் எனில் திருவரங்கம் தான். ஆனால் கச்சி ஏகம்பன் பெரிய காஞ்சியையும் பெருந்தேவி சின்ன காஞ்சியையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வரிய தத்துவம் பெரிதிற்கும் சிறிதிற்குமான இடைவெளி எதுவுமில்லை எனப் புரியவைப்பது தான். பெரிதான திருவரங்கத்தையும் பெரிதினும் பெரிதான காஞ்சியையும் சுற்றுதல் என்பது கால்கள் பெற்ற வரம்.
பக்தியைப் பழகிய கால்களை திருவரங்க மண்ணிலிருந்து காஞ்சி மண்ணில் இறக்குவதென்பது சொல்லில் அடங்கா வலி நிறைந்தது. கால்களைச் சுற்றிக் கட்டியிருக்கும் யானைச் சங்கிலி ஒலிக்க இழுத்து இழுத்து காஞ்சி வீதிகளை சுற்றி வருகையில் வலி பெரிதா கச்சி ஏகம்பனின் பெரிய காஞ்சி பெரிதா இல்லை வரதனின் காஞ்சி சிறிதா இல்லைப் பெரிதுதானா என எப்படிப் புரிந்து கொள்வது ?இப்படித்தான்.
புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு. நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி..
மலர்களில் சிறந்தது ஜாதி முல்லை. இறைவனில் பெரியவன் வரதன். அழகில் சிறந்தவள் ரம்பா. நகரில் பெரியது காஞ்சி.
இப்படியான பெரிதிற்கும் சிறிதிற்குமான எண்ண வண்டியில் சுற்றுவதும்..காஞ்சி காமாட்சியின் மாட வீதிகளைச் சுற்றுவதும்... சர்க்கஸில் மரணக் கிணறில் இருசக்கர வாகனத்தில் சுற்றுவதும்.. ஒன்றுதான். அவ்வளவு வாகன மரண நெரிசல். நெரிசலில் சிக்குண்டவனை நசுக்குவது பருமனா ஒல்லியா என்பதைவிட, கிடைக்கும் இடைவெளியில் சுவாசிக்க இயலுமா என்பது தான் வாழ்வியலின் ஊடுபுகுந்து வெளிவரும் பக்திசார்ந்த பகுத்தறிவு கேள்வி.
‘ஏரியிரண்டும் சிறகா எயில் வயிறா
காடுடைய பீலி கடிகாவா – நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு’
மேற்கண்ட வெண்பா எப்போது யார் எழுதியதென எவருக்கும் இதுவரைத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பதிவு செய்தால் மகிழ்வேன்.
ஊரின் இருபுறமும் ஏரிகள்..மயில்சிறகாம். கோட்டை மதில் மயில் வயிறாம். அடர் காடு மயில் தோகையாம். அத்தியூர் மயிலின் தலையாம்.
மயிலின் தலைப் பாகம் பெரிதா? இல்லை தோகை பெரிதா. அத்தியூர் என்பது தான் இன்றைய சின்னக் காஞ்சி. வரதனின் இடம். இதைப் பெரிய காஞ்சி எனச் சொல்லாமல் ஏன் சின்னக் காஞ்சி எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அதனால் தான் வரதன் என்னைப் பகடி செய்கிறானோ..? அறியேன்.
மாபெரும் பெருநகரை மானுடத்தைப் பிரிப்பது போல் பிரிப்பது சாபம் தானே. பிரித்தாளும் உத்தியைப் புகுத்திய ஆங்கிலேயனின் சுவடுகளை காஞ்சி மா நகரில் இன்றும் கூட காணமுடிகிறது. பக்தியின் சுவடுகளைத்தான் சாதி மத அரசியல் ரப்பர் கொண்டு அழிக்க முயற்சித்தும் திமிறி வெளி வந்து ஆங்காங்கே ஆயிரம் கோவில்களாய் குவிந்து கிடக்கிறது.
காலச் சங்கிலி காலைப் பிணைத்து இழுத்து முதுமை மரத்தில் இறுக்கிக் கட்டினாலும் வரதனையோ அரங்கனையோ சுற்றும் இவன் அவிழ்க்கவியால கட்டுடைத்து வரலாற்றின் கால வீதியில் கண்டிப்பாய் கால்பதிக்க ஓயாமல் சுற்றிக்கொண்டுதான் இருப்பான்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
பெருந்தேவித் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
ஆதிசங்கரத் திருவடிகளே சரணம்
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...