Monday, September 15, 2025

 





என் தோட்டத்தின் அபூர்வ மலரொன்றைச் சுற்றி

ஊடொலி கிளப்பியபடி
சுற்றித் திரிந்திருக்கிறதொரு
மரண வன்சித் திதலீ..
கனமற்ற அதன் கால்களின் ஸ்பரிசம்பட
அப்பூவின் மரணம் அப்போதே
நிகழ்வது ஆற்றொணா துயரம்..
என் வாழ்வில் இதுவரைக் காணா
பேரதிர்வின் காரணி வன்சியின்
வசீகரங்கள் உருவப்பட்டே ஆகவேண்டும்..
மரணத் திதலி என்னைச் சுற்ற மகிழ்வு மிஞ்சும்....
என்னையே சுற்றிக் கொண்டிருத்தலென்பதுதான்
காலக்கொடுமை..
அத்திதலீயின் சிறகு ஓவியங்கள்
பற்றியெரியும் சிதையின்
சாம்பல் வழியும் தாழியின்
குயவச் சக்கர கோட்டோவியங்கள்..
வன்சி திதலீயின் பூவிதழ் அமர்வைக் கொண்டாடுவோரின்
நயணக் கரங்களின் நகக்கீறல் வளைவுகள்
மெல்லிதழிலும் வசீகர மார்பிலும்
நகர்ந்து சென்ற உவர்வு நத்தையின்
வழித் தடங்கள்..
அவ்வந்தகத் துழாவல்
வழித் தடங்களில் கிடக்கும்
மகிழ்வின் தடுப்புச் சுவர்களில்
வன்சிகள் அமர்ந்து
வண்ணச் சிறகை சுழற்றுவதில்லை..
எவ்வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்படும்
மரண வன்சிகள் சுற்றித் திரிந்தால்
துக்கச் செய்தி துரத்திக்கொண்டிருக்குமென..
சொல்லிச் சென்றவன் சோதிடனல்ல..
உலகச் சோலையின் அத்தனை மலரிலும்
ஏதாவதொரு மரண திதலீ
எப்போதேனும் அமர்ந்தே தீரும்..
அதுவரை
வாழ்வில் வீசும் புயலில் சிக்கி
சிறகோவியம் சிதையக் கூடுமென
எருமையின் முதுகில் ஏறி
புகலிடம் தேடி திதலீயும் வன்சியும்
பறந்து திரிவது
சிறகுமுறிவின் மரண உத்தி...
என்ன செய்ய
திதலீயமர்வைத்
தடுக்கும் சக்தி மலருக்கேது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...