உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்
நேபாளம் பற்றி எரிகிறது. 2008ல் உருக்கி சாம்பலாக்கிய மன்னராட்சி மகுடம் மீளுருவாக்கத்திற்கு ஒத்திகை பார்க்கிறது. மாணவ எழுச்சிக் குவியலின் நடுவில் நேபாளத்து இமயச் சிகரங்கள் சிக்கித் தவிக்கின்றன. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதால் சாமாணியனின் நொடி முள் நகர்வு நிறுத்தப்படுகிறது. கைபேசியிலிருந்து மீண்ட பார்வை துப்பாக்கியின் வழி பாராளுமன்றத்தையும் ஜென் இசட் எனும் வார்த்தைகளின் மீதும் பதியவைக்கப்படுகிறது.
அமைதியை சுட்டெரித்த சாம்பலைக் குழைத்து ஜன நாயக நாற்காலியை வார்த்து அதன் மேல் உருக்கிய மகுடத்தில் முலாம் பூசும் உலைகளமாய் மாறிப்போனது காத்மண்டு வீதிகள்..மன்னர் ரானா வின் வம்ச அரசாட்சி முடிவிற்கு வந்த போதில் மோகன் கொய்ராலா எனும் நேபாள கவி இப்படி எழுதுகிறார்...ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன். இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ இல்லை...
மன்னரின் கோபப்பார்வைக்குப்
பயந்த நேபாளிகள்
உயர் சிகரங்களின்
செங்குத்தான சரிவுகளில்
பூத்துக் குலுங்கும்
ஆர்கிட் மலரிதழ் தடுப்புகளினூடே
ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்..
இதோ பனிமலையின் உச்சியை
தங்கமயம் ஆக்க
நாளையின் ஆதவன்
உதிக்கப்போகிறான்..
நேபாளப் பெண்களின்
திருமணத்திற்கான
தாலித் தங்கத்தின் பொருட்டு
மன்னனின் மகுடத்தை
உருக்கப்போகிறோம்..
திருமண நாளில்
மென்சிவப்பு வண்ண
வெர்மிலியன் பூவாசத்தை
நேபாளமெங்கும்
தெளிப்பதற்காக
மன்னனின் வைரம் பதித்த
அதிகாரக் கமண்டலத்தை
தூக்கி வந்துவிட்டோம்..
மன்னர் குடும்பத்தைக் கொளுத்தியதால்
அடர்ந்து சூழ்ந்த
சிதைகளீன் சாம்பல் நிற
நேபாள இரவில்
ஊளையிடும்
அதிகார ஆந்தைகளின்
வாள் சுழற்றும் கண்கள்
பார்வையிழந்து விட்டன..
காத்மண்டு வீதிக் குப்பைகளுடன்
செங்கோலையும்
வெண்கொற்றக் குடையையும்
யாரோ வீசியெறிந்திருக்கிறார்கள்..
எலும்புத் துண்டுக்காக
அலையும் தெரு நாய்கள்
அவற்றைத்
தூக்கிச் செல்கின்றன.
இரத்த ஆறுகள் குதித்து ஓடும்
நேப்பாளப்
பள்ளத் தாக்குகளின்
சேற்றுத் தேங்கல்களில்
செந்தாமரைகள்
இனி மலரப்போவதேயில்லை...
வாழ்வின் வீழ்ந்த
சரிவுகளில் சிக்குண்ட
நேப்பாளிகளே..
ஆர்கிட் மலர் மாலைகளுடன்
மேலேறி வாருங்கள்..
ஜன நாயக மணப்பெண்
சர்வாலங்கார பூஷிதையாக
காத்திருக்கிறாள்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment