Thursday, September 4, 2025

 




உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்...
மீண்டும்...
காலத்தின் கொடுமையான பொழுதுகள் முதுமையில் வருவது சபிக்கப்பட்ட மானுடத்தின் மேய்சல் ஓய்ந்த பசு முட்டியிட்டு அமர்வதான தொழுவ வாழ்வாகிவிடுகிறது. அசைவதென்பதே சிக்கலாகிவிட்ட குறுகிப்போன தொழுவத்தில் இளைமையையும் வளமையையும் மீந்திருக்கும் வாழ் நாளையும் அசைபோடுதல் பற்கள் விழுந்துவிட்ட தாடைகளுக்கு எளிதானதல்ல.
இதயம் கனத்து மரத்துப்போன வாழ் நாளின் பசித்த பொழுதில் ஒரு சிப்பம் நறுக்கு வைக்கோல் வீசியது போல் சில கவிதைகள் விருட்டென தும்பறுத்து மேய்வதற்கு தயாராகச் சொல்லும்.
அப்படியான சில வரிகள் ஆகச் சாதாரணமாக இருந்தாலும் அடைந்து கிடக்கும் மீந்த வாழ்வின் வழிகளை திறந்து வைக்கும் திறன் மிகுந்தவை. முதுமை எழுதும் விரல்களை ஒன்றிணைத்து இயக்கச் சக்தியை சீராக செலுத்தும் வகைமையற்று வளைந்து கிடக்கும் பொழுதில் குடும்ப நாசீசியம் தொழுவத்தைச் சுத்தம் செய்ய தூங்கும் பசுவிற்கு மூங்கில் அடிகளை முதுகில் விளாசுகையில் விடியல் கூட சற்று தாமதித்தே தன் கிரண வீச்சைத் தொடங்கும்.
கால் கொளம்புகளின் பிளவுகளில் அப்பிய சாணமும் சேறும் நாற்றமும் நடையை நொடித்துக் காட்டும் பொழுதில் பஞ்சகவ்யத்திற்காக சில வக்கிர கைகள் அதன் காம்புகளை நசுக்கிப் பீய்ச்ச குருதி கொப்பளித்துச் சீறுவது சகிக்கவியலா முதுமையின் தவிர்க்கவியலா அவலம்.
காராம் பசுவாக குடம் குடமாய் பால் தரும் வளமையீட்டும் வழியாக தெருக்கம்பத்தில் நைந்த கயிறில் கற்றி பராமரித்த மேய்ப்பனை மின்னும் விளக்கொளியில் தங்கத் தகடு வேய்ந்த தொழுவம் அமைக்கும் வளமை தந்த சத்தான பிறப்பினால் ஆசீர் வதிக்கப்பட்டிருந்தாலும் காலக் காற்றின் திசையில் காம்புகள் வெடித்து கொம்பிரண்டும் சுருங்கிய சோகத்தை எப்படித்தான் கடப்பது.
பாப் டைலனின் வரிகள் காற்றில் மிதந்து வர முதிர் பசு சிறு கன்றாக மாறி துள்ளிக் குதிக்க வைக்கும் வரிகள் என்னளவில் இங்கே தமிழில் தரப்படுகிறது.. இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ மொழி மாற்றமோ இல்லை...
உங்கள் கைகள் கட்டுகளுக்குள்ளோ கையுறைகளுக்குள்ளோ
பொதித்தானியாகி சிக்காதிருக்கட்டும்...
உங்களின் குளம்படிகளைப் பிளவு செய்யும்
கனவிய உலகில் கால் வைக்காதீர்கள்..
உங்களின் அஸ்திவாரம் கெட்டியாக இருப்பின்
அஸ்திச் சாம்பலைக்கூட
காற்றால் தூக்கிச் செல்வது கடினம்..
கிடைப்பது வைக்கோலானாலும் தவிடு மிதக்காத
அரிசிக் கழுனீரெனினும்
உற்சாகத்துடன் உண்ணத் தெரிந்தால்
விடியல் வெறியக் குளம்பியென
இனிக்கத் தொடங்கும்..
முதுமையில் கூட உன் பாடலின் எக்காளம்
உன் கன்றுகளின் காதில்
கவிதையென ஒலிக்கட்டும்...
தொழுவத்தில் மண்டியிட
மூட்டுக்கள் ஒத்துழைக்காவிட்டாலும்
உன் மனம் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்...
உன்னால் இப்போது கூட
துள்ளிக்குதிக்கவியலும்...
ராகவபிரியன்
May your hands always be busy
May your feet always be swift
May you have a strong foundation
When the winds of changes shift
May your heart always be joyful
May your song always be sung
And may you stay forever young
[ பாப் டைலன்..2016 ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு பெற்றவரின் பாடல்]

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...