Wednesday, December 25, 2019

எனக்குத் தெரியும்
நீங்கள் என்னை விரும்புகிறீர்களென்று..
தொய்வற்ற பதிவுகளுக்கான
உங்கள் கண்கள்
தேடித் தேடி அலுத்த
கடைசீ நொடிகளில்
என்
பதிவுகளைப் படிக்க நேர்வதால்
விருப்பமோ கருத்தோ
இடும் உங்கள் விரல் பூக்கள்
உதிர்ந்து அயர்ந்திருக்கக் கூடும்..
நான் அறிவேன்..
என் எழுத்துக்களுக்கான
வான இருட்டில்
என்னை இனம் காண
அயராது நோக்கும்
உங்கள்
இலக்கியத் தர
பார்வை உயரங்களில்
திடீரென
எரி கல்லாய் சறுக்கி விடுகிறேன்..
என்னைப்
படிக்கத் துடிக்கும்
உங்கள் இதயத்தின்
சீரான சப்தங்கள்
பார்வைக்கு வழிகாட்டும்
திசை மாணிக்காக
சற்றே நின்று
புறப்படும்..
அதையும் அறிந்ததால்
நான் சொல்வேன்..
கொஞ்சம்
அமேசான் கிண்டிலுக்குச்
செல்லுங்கள்..
ஆங்கிலமும் தமிழும்
அதன் அதிதீவிர
இலக்கிய
மின்னல்களும் அடங்கிய
எரிகல் விழுந்துவிடாத
என் வானத்தை
தெளிவாகப் பார்க்கலாம்..
ராகவபிரியன்
I know my dear friends
you all like me..
your tired eyes
and finger flowers
have fallen
to naught
on reaching my post..
Dear friends
I know
when your eyes
staring at my sky
i had
fallen as a meteor
in your
vision's literary screen
Dear friends
The train sounds of
your heart beats
simply stopped
on a station
without any
literary signal..
Friends ...
Don't be frightened
Browse
Amazon.in..Amazon.com
and all Amazon sites..
My literary works
blossom with a green signal
and
from the window
of your running train
you could see
the amazing sky
of literary mine..
Ragavapriyan Thejeswi

Tuesday, December 17, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகள்..
எனது பட்டப்படிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் 1981ல் முதல் வகுப்புத் தேர்ச்சியுடன் முடிவடைந்தது..வேலை பார்த்துச் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம்..சென்னை சென்றேன்..எனது உறவினர் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவனால் தான் வாழ்வின் தடங்களில் சொந்தக் கால்கொண்டு நடக்க முடியும் என்றார்...நான் என்னை முதுகலைவணிகவியலில் சேர்த்து விடச் சொன்னேன்..இரண்டு வருடங்கள் அதற்காகும் செல்வுகளையும் எனது பராமரிப்பிற்கான செலவுகளையும் கணக்கிட்டு..ஒரு புது உத்தியைக் கண்டு பிடித்தார்..ஒரு ஆடிட்டரிடம் என்னை ஆர்டிகிள்ட் கிளார்க்காகச் சேர்த்துவிட்டார்..
அங்கே நடந்த கொடுமைகளை..ஒரு ஏழை ஆடிட்டராகும் கனவைக் காணக்கூடாதென்ற உண்மையை உங்களுக்கு அடுத்தடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்..மீண்டும் திருவாரூர் வந்தேன்..விடிந்தால் என் வீட்டார் பேசப்போகும்.. வேலையற்ற பட்டதாரியின் மேல் வீசப்போகும் வார்த்தை கணைகளுக்குப் பயந்து ஓசி ரயில் ஏறி தஞ்சை வந்துவிடுவேன்..தஞ்சை பேருந்து நிறுத்தப் புத்தகக் கடையில் சில சமயம் தஞ்சை பிரகாஷ் இருப்பார்...தம்பி சாப்பிட்டாயா...எனக் கேட்கும் அவரின் குரல் இன்னமுன் என் உள் மனதில் கேட்டுக் கொண்டிருக்கும்..எப்படியும் ஒரு தேனீர் வாங்கிக் கொடுத்துவிடுவார்...கணையாழி வாங்க காசில்லை என்பதைச் சொன்னவுடன்..ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் புத்தகக் கடையிலிருந்து எனக்கு ஒரு கணையாழி புத்தகம் தருவார்..எங்காவது போய் படித்துவிட்டு திரும்பக் கொடுத்துவிடு என்பார்..எனது பெயரை நான் அவரிடம் பாபு என்றுதான் கூறியிருந்தேன்..ராகவபிரியன் என்பதை அவராக கண்டுபிடித்தது பத்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சுபமங்களா வாசகர் வட்ட நிகழ்வில்..
சில சமயம் நடந்தே திருவையாறு வரைச் சென்றுவிடுவேன்..ஒருமுறை திருவையாறு அருகில் உள்ள கடுவெளி கிராமம் வரை வந்துவிட்டேன்...ஒரு முதியவர் அமர்ந்திருந்த புளியமர நிழலில் நானும் அமர்ந்து ஐயா இது என்ன ஊர்..என்றேன்..கடுவெளி தம்பி...சரி கடுவெளிச் சித்தரைப் பற்றி கேள்கிப்பட்டிருக்கிறாயா...எனக்கேட்க..இல்லை என்றேன்..
மண்புழுவை பாம்பாக ஆக்கக்கூடிய சக்தி உள்ளவர் என்றவுடன்..ஆச்சரியமாய்ப் பார்த்தேன்..நீ யார் என்றார்..வேலையில்லாத பட்டதாரி என்பதைச் சொல்லக் கூசிய நாவால்...கவிஞன் என்று கூசாமல் பொய் சொன்னேன்..கையில் கணையாழி வேறு இருக்கிறது...ஆனால் அந்தப் பெரியவர் தம்பி..காடுவெட்டிச் சித்தர் ஒரு பாடல் உலகப் புகழ்பெற்றது தெரியுமா..என்றார்..
நந்த வனத்தில் ஓர் ஆண்டி..அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி..அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
எனது இதயத் துடிப்பின் பரவச வேகம் எல்லை கடந்து செல்ல..அவரோ காடுவெளிச் சித்தரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார்..
மெல்ல எழுந்து பேருந்தில் ஏறி தஞ்சை வந்தேன்..கடையில் எனது ஆசான் இல்லை..கணையாழியைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையம் வர..நினைவெல்லாம் அந்தப் பாட்டில் இருந்தது..
காடுவெளிச் சித்தரைப் பற்றி நிறைய படித்தேன்..
அதன் தாக்கத்தில்
படிக்கும் வயதில் வெடித்துப் பேசாதே
நொடிக்கும் நடையில் விழுதல் வேண்டாமே
தடுக்கும் கல்லொன்றை நகர்த்திப் பார்
அடுக்காய் வெற்றிகள் அடைவாய் நீ
ராகவபிரியன்..
எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை..வண்டி நாகூர் வந்திருந்தது..மீண்டும் அடுத்த வண்டியில் ஆரூர் வர அன்றிலிருந்து இன்று வரை பயணப் பொழுதுகளில் சில சமயம் தூக்கம் வந்தாலும் கவிதை மட்டும் வருவதேயில்லை...
கடுவெளிச் சித்தரின் இன்னொரு பாடல் உங்களுக்காக..
வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கடுவெடுயாமே.’
[கடுவெளிச் சித்தர்]
தொடர்வண்டிச் சித்தன்

Sunday, December 15, 2019

வாழைப்பட்டைகள் வேய்ந்த
மலையாளக் குடையினடியில்
குடியிருப்பதாகிப்போனது
அவளின் வாழ்வு..
தூறல் தூவிக்கொண்டிருக்கும்
விதியின் சிகப்பு நாளொன்றில்
மகிழ்ந்துவில்
குழந்தை மகளை
கணவனிடம் விட்டுவிட்டு
போட்டித் தேர்வின்
கணிணித் திரையில்
கேள்விகளுக்காகக் காத்திருக்கையில்
நூலேணியொன்றின்
படிகள் அறுந்துவிழுவதைக் காண்கிறாள்..
அப்பாவிடம்
எதையெதையோ கேட்கப் போகும்
மகளின்
ஈர உள்ளாடையை
கணவனால் மாற்றிவிட முடியுமாவென
யோசிக்கும் பொழுதுகளில்
வெள்ளைக் காகம் ஒன்று
வெண் திரையில்
அலகால் குழந்தையை
அப்படியே தூக்கியது..
இந்திய ஜனாதிபதி
கோவிந்தன் கோவிந்த் ராம் நாத் ராம்னாத் கோவிந்த்
என்ற விடைகளில்
எது சரியானதெனும்
மன யாசிப்பில்
குழந்தையின் அழுகுரல் தொட்டில்
அவள் முன்னே
எழுவதும் விழுவதுமாயிருந்தது..
தேர்வு முடியும் முன்
வெளியேறும் அனுமதியில்லையெனும் போதில்
கற்பாறைகளில்
அவளின் மகிழுந்துவை
தலை குப்புற
ஓட்டிக்கொண்டிருந்தான் கணவன்..
எங்கிருந்தோ
அவளின் ஜன்னலின் அருகில்
குரங்கொன்று
எட்டிப் பார்க்க..
அதனின் மடிகவ்விய குட்டியை
அது தவற விட்டது
அறிந்து
கோவிந்தா என அலறினாள்..
அருகிருந்த
தேர்வெழுதும் சகபோட்டியாளப் பெண்
சன்னக் குரலில்
ராம் நாத் கோவிந்த்
என்றபோது
கணிணியின் திரை
இழுத்து மூடப்பட்டுவிட்டது..
ராகவபிரியன்

Sunday, December 1, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..1+2
ஆன்மீக அனுபவங்களைப் பற்றிய பொதுமதிப்பீடுகள் எதுவாக இருந்தாலும் சுயமதிப்பீடு நேர்மையாக இருந்தால் அரங்கனை கண்டிப்பாக உணரமுடியும்..அரங்கனை அனுதினமும் தியானிப்பவனுடன் அரங்கன் தொடர்ந்து அவனின் மனதுள் சயனித்திருப்பது நிஜம்..பகவான் அர்ஜுனனுடன் யுத்த களத்தில் கூடவே இருந்தும் அர்ஜுனனால் பகவானை முழுவதும் உணரமுடியவில்லை..அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கேட்கிறான்...
கதம் வித்யாம்ஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்
கேஷூ கேஷூ ச பாவே ஷூ சிந்த்யோஸி பகவந்தம்யா..!!
அரங்கா..நான் உன்னையே சிந்தித்துக்கொண்டிருக்கையில் நீ எந்த உருவில் என்னுடன் இருக்கிறாய் என்பதை அறியமுடியாமல் தவிக்கிறேன்..உன் உருவங்களில் ஒன்றையாவது எனக்குக் காட்டித்தரமாட்டாயா...?
இது அர்ஜூனனுடைய கேள்வியென்றாலும் கடந்த ஐம்பது வருடங்களாக என் மனதிலும்...எத்தனையோ நூற்றாண்டுகளாக உங்கள் மனதிலும் உள்ள கேள்விதான்..இன்று கும்பகோணம் அருகில் உள்ள கருவளர்சேரி கோவிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனது ஓய்வு வாழ்வின் திட்டமிடாத பணிகளின் திணிக்கப்பட்ட அமைப்பியல் வாழ்வின் மிச்சங்களில் ஒன்றாகிப்போனது...தட்பவெட்ப நிலையின் சாதகமற்ற நிலையிலும் கடும் மழைவெள்ளம் கண்டிப்பாக எதிர்வரும் என்ற சூழலிலும் எனது போர்ட் ஐக்கானைக் கிளப்பிக்கொண்டு..விடியலில் அரங்கனை தியானித்தேன்...அரங்கா உடன் வருவாய்..வேறெதுவும் சொல்லாமல் கவனத்தை வண்டியைச் செலுத்துவதில் செலுத்தினேன்..செங்கிப்பட்டிக்கு சற்று முன்பு...எனது மகிழுந்து நூற்றுப்பத்து கி.மீ வேகத்தில் இருக்க கருடாழ்வார் தாழப்பறந்து வண்டியின் முன் ஒரு வட்டமிட்டு பின் மறைந்து போனார்...தொடர் தூறலில் கும்பகோணம் சாலையை விட்டு திருவாரூர் சாலையில் செல்வதைக்கூட அறியாமல் சாலியமங்கலம் வர உடன் வந்த மாப்பிள்ளை கூகுளில் பார்த்து அப்பா இங்கிருந்து பாப நாசம் வழி செல்லப்போகிறீர்களா எனக் கேட்டவுடன் தான் ...வழி மாறிப்போனது தெரிந்தது..
அதே கூகுளிடம் அவர் வழி கேட்க இது அரங்கன் செயல் என உணர்ந்த நான் அம்மாபேட்டை வழியாக கிராமத்துச் சாலையொன்றின் வழி வலங்கைமான் அடைந்து கருவளர் சேரி அடைந்தோம்..அதுவரை மழையின்றி சிறிது இளவெயிலும் தலை காட்ட பயணம் தடையின்றி இலக்கடைய...கருவளர் சேரியில் வலக்கையை தலைக்குக் கொடுத்தபடி சற்றே தலை தூக்கி என்னைப்பார்த்தார் அரங்கன்...
அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸ்யஸ்தித:
ஆஹமாதிஸ்ச மத்யம் ச பூதா நாமந்த ஏவச!!
அர்ஜூனா நான் உன்னிடத்தில் ஆத்மாவாக இருக்கிறேன்..நானே முதலும் நடுவும் முடிவுமாக இருக்கிறேன்..அது மட்டுமல்ல...
ஆதித்யா நாமஹம் விஷ்னுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமா ந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷ்த்ராணாமஹம் ஸஸீ..!!
நான் அதிதியின் புதல்வர்கள் பன்னிரண்டாயும் அதில் மஹாவிஷ்னுவாயும் ஓளிரும் சூரியனாயும் நாற்பத்தொன்பது வாயுதேவர்களுள் தேஜஸ்வியாயும் ..சந்திர மண்டலத்தின் தலைவனான நிலவாகவும் இருக்கிறேன்...
இங்கே கருவளர்சேரியில் இன்று உன்னை வரவழைத்து அருள் தர கொஞ்சம் தலைதூக்கிப் பார்பவனாகவும் இருக்கிறேன்..என்றும் சொல்வதாகப் பட..மனதில் தோன்றிய திவ்ய பிரபந்த பாடல்களை உரத்துச் சொல்லத்தொடங்கினேன்..
அண்ட குலத்திற்கு அதிபதியாகி
அசுரர் ராக்கதரை இண்டகுலத்தில்
எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டகுலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டை குலத்தைத் தவிர்த்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே...
[பெரியாழ்வார்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Tuesday, November 26, 2019

தலை குனிந்தவர்களின்
குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்..
தாழ்வு மனப்பான்மையும்
சம்மட்டியடித் தோல்விகளும்
என்னை நீந்தச் சொல்லி
வற்புறுத்துகின்றன..
மிதக்கும் அழுகிய
ஏச்சுக்களின்
தென்னம்பழமொன்றின்
வாடையில்
அடைத்துக்கொள்கிறது
வீரம் தொலைத்த மூச்சு..
மெல்ல
அறிவு பொய்த்துப்போன
அவல உடைகளைக்
களைகிறேன்..
முழுதுமாய்த் தோற்றவனின்
உடல் நடுக்கம்
பாதங்களின்
ஊன்று மண்ணைப்
பறிக்கத் தொடங்க..
வழுக்கிக் குளத்தில் விழுகிறேன்..
தலைகுனிந்தவர்களின்
குளத்தில் நீந்தத் தெரிந்தால்
நீர்பரப்பின் மேல்
தலை நிமிர்ந்தே இருக்கும்...
ராகவபிரியன்

Tuesday, November 5, 2019

தொடர் வண்டிகள்
கால் நீவிக்கொள்ளும்
நிலையங்களில் தான்
அவசர அசுரனின்
உருவம் காணமுடியும்..
கழிப்பறையற்ற கிராம வீட்டின்
காவிரிக் கரை பட்டதாரியின்
காலை நரகலை மிதித்த
குளிக்காத கால்கள்
படித்துறையில் இறங்கும்
நொண்டல்அவசரம்..
காலைப் பசிக்கான
பொட்டலங்களை
சுற்றி இருக்கும்
முடியாத நூல் அவசரம்..
புதிதாக வாங்கிய பயணப்பெட்டியின்
சக்கரங்களைச் சுழல விடாத
சுமையான வாழ்வின் போதாக் கால
பொம்மையவசரம்..
கண்ணற்ற ஒருவனின்
அருமையான ராகத்துடன்
ஒட்டத்துடிக்கும்
வண்டி புறப்படும் முன்னான
அலுமினிய லோட்டாவின்
தப்பான தாள அவசரம்..
இத்தனையையும் கால் நீவியபடியே
கவனித்துக் கொண்டிருக்கிறது
புறப்படத் தயாரான
தொடர் வண்டியும்..
சில அருமையான புத்தகங்களையும்
தினசரிகளையும் அழகாக மாட்டிக்கொண்டு
ஒரு வாசக முகமாவது
தன் முகம் காணாதா
என ஏங்கியபடியேகால் நீவிக் காத்திருக்கும்
வண்டியினதும்
விற்பனையாளனதுமான
வசீகர அமைதி முகங்களும்..

அவசர அசுரனின் திருப்தியான
பார்வை ஏப்பத்தை
வெளியிட்டபடியே புறப்பட்டது வண்டி...
ராகவபிரியன்

Monday, November 4, 2019

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகிழுந்துவில் திருக்கோவிலூர் செல்லும் வழியில் பெரம்பலூர் கடந்த சில தொலைவில் உடும்பு ஒன்று தேசிய நெடுஞ்சாலையை வலமிருந்து இடமாக லாவகமாக கடந்து செல்கையில் எனது மகிழுந்துவின் சக்கரத்தில் சிக்கிய சப்தம் கேட்டது...கண்டிப்பாக உயிர் தப்பி அதன் மறுவாழ்விடம் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பின் நவீன கவிதை உங்களுக்காக...அன்பன்..ராகவபிரியன்
உடும்புப் பிடியாய்
சில படிமங்கள்
என் சுவற்றின் மேல்
சில பூச்சிகளுக்காக
காத்திருக்கின்றன..
அதன் முதுகில்
கயிறு கட்டி
கோட்டைச் சுவர் மேல்
ஏறிவிட எத்தனிக்கிறேன்..
அதை வேட்டையாட
அதன் இறைச்சியால்
வயிற்று வலி போக்கிக்கொள்ள
ஈட்டியுடன்
சில அறிவு ஜீவிகள்
சுவரோரம்
எக்காலமும் காத்திருக்கிறார்கள்..
அதன் தோல் வேய்ந்த
இசை மேளச் சப்தம்
பற்றிக் கொண்டு
உலக நாடுகளின்
நடனச் சுவர்களில்
தத்தியேறியவர்களை
அறிவேன்..
ஏதோ ஒரு பொந்தில்
பதுங்கிக் கிடக்கும்
உடும்பு
பின் நவீன
தேசீய நெடுஞ்சாலையை
வாலாட்டியபடி
பம்மிக் கடக்க
பயண வெளி அதிரும்..
எனது பயணப் பார்வைகளில்
இதுவரை
சாலையில் அடிபட்டுக் கிடக்கும்
ஒரு உடும்பு உடல் கூட
படிமமாய் படுத்தியதில்லை..
பின் நவீனச் சாலைகளில்
இன்னும்
கனரக வாகனங்கள்
உடும்பெதையும்
சந்திக்கவுமில்லை...
ராகவபிரியன்

Tuesday, October 29, 2019



மனித வாழ்வின் காய்கறி வாங்கும் செயல் வகைமையென்பது தனித்துவமானது..அதுவும் ஒரு மழை நாளில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாங்கும் செயல் வகைமை சிந்திக்க வைக்கும் வல்லமையுடையது.. ஒரு காய்கறிப் புலத்தினுள் கொம்புடைய மாடுகள் சேற்றில் அனாயாசமாய்ச் சுற்றி வந்து அதற்கான காய்கறித் தீவனங்களுக்கான உத்தியைக் கட்டமைக்கும் நேர்த்தியை நனைந்தபடியே ரசித்தபடி எனது வாடிக்கைக்காய்கறி கடையில் நிரூபிக்கப்பட்ட புரிதல் உள்ள விற்பனை நுட்பமறிந்த பெண்மணியிடம்..
உருளை என்னா வெல...என்று கேட்டேன்..
இன்னா சாமி..தாடி சுருள் சுரூளா அழகாகீது..இன்னா வெசயம்... அவள் விலை இன்னும் சொல்லவில்லை...
அத வுடும்மா..உருளை என்னா வெல அதச் சொல்லு...
ம்...வழக்காமன வெல தான் சாமி..மழ கொட்டு கொட்டுன்னு கொட்டுது..காய வித்து ராங்கா வெல சொல்லி காசு கொட்டப்போவுதாக்கும்..எத்துனை கிலோ..சொல்லியவாறே உருளைக் கிழங்குகளை தராசில் அள்ளிப் போட்டாள்...
ஆமா...கிலோவாங்குறாங்க...ஒரு அரை கிலோ போதும்...
சாமி...நீ எப்பப் பாறு எதோ தலையில கொம்பு மொளச்சா மாதிரி தான் பேசுவ...குடுக்கற காச குடு சாமி...பொறவு..உங்கிட்ட ஒன்னு கேக்கனும்..கோவிச்சுக்காத சாமி..இன்னைக்கி...குருசாமி வேற இடத்துக்குப் போவுதாமே..எந்த எடம் சாமி...அவளின் கண்ணெல்லாம் அதிசயம் பொங்கி கொம்பு போல் வளர்ந்திருந்தது...
யம்மா...ஆள வுடு..அவரு எதனாச்சும் ஒரு எடத்துக்குப் போவட்டும்..எவ்ளொ ஆச்சு...ஏறக்குறைய காய்கறிகளை பேச்சுக் கொடுத்தபடியே வாங்கி பையில் நிறைத்துக் கொண்டேன்..
சாமி ...சாமி..சொல்லு சாமி...சொன்னா இன்னா கொறைஞ்சா போயுடுவே..எப்பப் பாறு கொம்பு வச்சா மாதிரியே திரியற...சொல்லு சாமி...
அதிகம் பேசாத...கொம்ம்ப பத்தி உனக்கு என்னா தெரியும்....
நரிக்கொம்பு வித்தாலும் விப்பேனுங்க...ஆனா நரிபோல வஞ்சன செய்யாமாட்டேன்...சட்டென்று பாடிக் காட்ட அதிர்ந்தேன்..
யம்மா...குரு விருச்சிகத்துலேர்ந்து தனுசுக்குப் போறாரு...ஆள வுடு...அவ்ளோதான் தெரியும்...
ஒரு ஐன்னூறு ரூபாயை கொடுத்து சில்லரைக்காக நிற்கும் நொடிகளில்...
காண்டா மிருகத்தின் கொம்பு பற்றிய சில விடயங்களைப் பற்றிய புனைவுகள் மனமிருகத்தின் தலையின் நடுவில் வளரத் தொடங்கியது...கொம்பின் சில மருத்துவ வியாபார தேவைகளுக்காக காண்டா மிருகங்கள் இன்றளவும் வேட்டையாடப்படுவைதை எண்ணி என் நினைவுக் கொம்பை சட்டென்று உடைத்துப் போட...
சாமி...நீ சோசியத்துல கொம்பனாம்ல..சொல்லிக்கிறாக...குருசாமி மாறினா..காந்தி மார்க்கெட் கள்ளிக்குடிக்குப் போயிடுமா சாமி...அப்பாவியாய் தன் வாழ்வாதாரமே பிடுங்கி எறியப்படப்போகும் நிகழ்வின் கூறுகளை தனக்கே உரிய இன்னொஸன்ஸில் கேட்க...எனக்குள் கோபத்தின் கொம்புகள் அடர்த்தியாய் முளைக்கத் தொடங்கின....
அவரு எங்கிட்டுப்போனா உனக்கென்ன..அரசில்வாதியா ஆன பொறப்ப்பாடு கொம்பு மொளைச்சு சாதா ஜனத்தை மறந்துடறாங்க...எத வேணாலும் எங்க வேணாலும் மாத்துவாங்க....நீ பயப்படாத...அதெல்லாம் மார்க்கெட்டு இங்க தான் இருக்கும்...நீ சொல்ற குரு சாமிக்கு கொம்பு இருக்கு தெரியுமா...எனது வார்தைகளின் கூறுகள் கலைந்திருந்தை அவள் கவனித்தபடியே...
சொல்லு சாமி...மழ வுட்டாதான் சனம் காய் வாங்க வரும்..நீ சொல்லு சாமி..சொல்லு சாமி...
இன்னும் இரண்டு தக்காளிப் பழங்களை எனது பைக்குள் போட்ட படியே அவள் கேட்டது...கொம்பு தீய்க்கப்பட்ட வண்டி மாடு ஒன்று அப்பாவியாய் நுகத்தடியில் கட்டப்பட பின்னங்கால்களை நகர்த்துவது போலிருந்தது...
கண்ணை மூடிக்கொண்டு சொல்லத் தொடங்கினேன்...
சொல்லிய ரவிக்குச் சிரசு மத்தியினில்
துலங்குகூரிலாமல் நோக்கும்
துய்ய கொம்பு உளதாம்...வெண்பிறை தனக்கே
சொற்றனர் கொம்பு இலை என்றே
வல்ல செவ்வாய்க்குச் சிர நடு மேலாய்
வளர்ந்து எழு கூரிய கொம்பு ஆம்
மாலவன் தனக்கே சிரத்து ஒரு புறத்தின்
மருவிய கொம்பு உளது ஆகும்
நல்ல பீதகற்கே சென்னி மத்தியினில்
நாடிரு கொம்பு என நவில்வர்
நலம் உடன் செறிந்திடு கொம்பு ஆம்
அல்லல் சேர் காரி இருவகைப் பாம்பு
ஆகிடும் மூவர்கள் தமக்கு
அறுத்தி மறுப்பட்டு இருந்து கீழ் நோக்கும்
ஆகிய கொம்பு உளது ஆமால்...
[ஞானப் பிரதீபிகை சம்ஸ்கிருத பாடல் தமிழில் தந்தவரின் பெயர் தெரியவில்லை...}
கண்ணைத் திறந்து பார்க்க..காய்கறிக் காரி என் வழுக்கைத் தலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்..அதில் மழைத்துளி இரண்டு தளும்பிக்கொண்டிருந்ததை அனிச்சையாய்த் துடைக்க தலையிலிருந்த கொம்பு ஒன்று உதிர்ந்து முள்ளங்கிப் பத்தைக்குள் பதுங்கிக்கொண்டதைப் பார்த்தேன்..
ராகவபிரியன்

Monday, October 28, 2019

கொட்டித் தீர்த்த
கோர காலை மழையின்
கொடூரக் கரங்களில் இருந்து
என் மகிழுந்துவை
தண்ணீர் படாமல்
காப்பாற்றமுடியவில்லை..
துருவேறிப் போன
பொருளாதாரக் குறியீடாய்
நாளைய பட்டறையில்
தேயப்போகிறது அது..
சாமான்ய பொதுஜனனாய்
பர்கேப்பிட்டா இன் கம்மிற்கும்
ரெப்போ ரேட்டிற்கும்
வளர்ந்து வரும்
வளர்ந்து கொண்டிருக்கும்
வளர்ந்தே தீரும்
என்ற சொற்றொடர்களின்
இழைகளின் அறுந்துவிழாத
ஆங்கில வார்த்தைகளின்
கம்பி நடனமும்
புரியாமல் மழையையும்
மகிழுந்துவையும்
பார்த்தபடியிருக்கிறேன்..
சுர்ஜித்தை வெளிக்கொணர
நடத்தப்படும் பிரயத்தனங்களும்
பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதத்தை
ஏழு சதமாய் உயர்த்தப்போகும்
விந்தை நாடகத்தையும்
அறியாத வருணன்
மகிழுந்துவின் மேல்
குதித்துக் குதித்து
விளையாடிக்கொண்டிருக்கிறான்..
இறக்குமதிகளுக்கான
சந்தையின் ஏற்றமோ இறக்கமோ
புரியாமல்
வெங்காயத்திற்கு
விலைபேசியபடி
கொச்சைத் தமிழில்
திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்
மனைவி..
ஆறாய் பெருகி ஓடும்
மழையின் சாலை வாய்க்காலில்
நனைந்தபடியே
என் கவிதை நோட்டின்
பக்கங்களைக் கிழித்து
கப்பல் விட்டுக் கொண்டிருக்கிறாள்..
மகள்...
இந்தியப் பொருளாதாரமாய்
மழை ஓய்ந்த
வீட்டின் வாசற்பெரு வெளியில்
மகிழுந்துவின்
சக்கரத்தினடியில்
தடம்புரண்டு
கவிழ்ந்து கிடக்கிறது
காகிதக் கப்பல்..
ராகவபிரியன்

Sunday, October 27, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகளில் தீபாவளி...1
நினைவுகள் என்பது பாதுகாக்கப்படவேண்டியவை...எல்லா நினைவுகளும் அல்ல..சில நமக்குப் பாடம் கற்றுத்தந்திருக்கும்..அப்படியான நினைவுகள் நாம் மறைந்த பின்னும் ஆன்மாவாய் சில காலம் உயிர்த்திருக்கும் என உப நிடதங்கள் கூறுகின்றன..சீனாவில் தொங்கும் சவப்பெட்டி என்ற மரத்தாலான மேலதிக கனமுடைய பெட்டி ஆகப்பெரும் உயரத்தில் 2500 ஆண்டுகளாய்த் தொங்கிக்கொண்டிருப்பதாகப் படித்திருக்கிறேன்..
கோவில்கள் நமது முன்னோர்களின் நினைவுகளை அவ்வப்போது தூண்டியபடியே இருக்கின்றன..நமது பண்பாடும் கலாச்சாரமும் சில நினைவுகளின் மீட்சியென்பதறிவோம்..அது போழ்து எனது வயது எட்டு என நினைக்கிறேன்..என் நினைவிலிருக்கும் முதல் தீபாவளி...கணவனை சிறுவயதிலேயே இழந்த என் அத்தையும்..எங்களின் தாய்தந்தையற்ற பெரியப்பாவின் பெண்..என் அக்காள் தங்கமும் நாங்கள் உடன்பிறந்தோர் அப்போது ஐந்து குழந்தைகளும் இருக்க...மத்திய அரசு ஊழியரான எனது தந்தை உடல் நிலையற்ற நிலையில் ஏறக்குறைய ஓராண்டாய் வேலைக்குச் செல்லாமல் வறுமையை விலைகொடுத்து வாங்கி எங்களிடம் விற்பனை செய்திருந்த நேரம்..
என் அப்பாவின் நிறுவனத்தில் கடன் வழங்கும் சங்கம் ஒன்றிருக்கும்..அதில் கடன்படாத தொழிலாளர்களே அந்நாட்களில் இல்லையெனலாம்..அச்சங்கம்..தீபாவளி நேரங்களில் கடனுக்கு துணிமணிகள் பட்டாசு போன்றவைகளைத் தரும்..என் தந்தை அந்தச் சங்கத்திலிருந்து தீபாவளிக்கு எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக மீட்டர்கணக்கில் துணி கிழித்துக் கொண்டு வந்துவிடுவார்..
இரண்டு புடவைகளும் வாங்கி வந்திருந்தார்...அதில் ஒரு புடவை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்க..அதை என் அத்தையிடம் கொடுக்காமல் என் அம்மாவிடம் கொடுத்துவிட..அந்த விடிந்தால் தீபாவளி என்ற இரவு விடிய விடிய நடந்த சண்டையால் விடியாமலேயே புலர்ந்தது..இரவு எட்டு மணிக்கு மேல் அந்த மொத்தத் துணியை அளவெடுத்து எங்களுக்கும் என் அக்காவிற்கும் சட்டை கால் சட்டை பாவடைச் சட்டை எனத் தைக்க வேண்டும்..திருப்பறாய்த்துறையின் கோவில் வாசலில் இருக்கும் தையல் கடைக்காரர்..எப்படியும் விடிவதற்கு முன் துணியை அணிந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் கொடுத்துவிடுவார்...என் அண்ணனின் அளவிற்கு எல்லாருக்கும் ஒரே மாதிரி தைத்து விடுவார்...
புதுச் சட்டைக் கனவில் திடீரென விழித்த நான் என் அம்மாவின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீரைக் கண்டேன்..அவள் மடியில் அமர்ந்து கண்ணீரைத் துடைக்க...அம்மாவிற்காக வாங்கி வந்திருந்த புடவை தாறுமாறாய் கிழித்தெறியப்பட்டிருந்தது...அடங்கா சினம் கொண்ட என் அப்பாதான் அப்படிச் செய்திருக்க வேண்டும்..
காலையில் தைக்கப்படாத துணிகளை தையல் காரர் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துவிட்டு என் பாட்டியிடம் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அந்த வார்த்தை இன்று வரை என் நினைவுகளில் இருந்து நீங்காமல் அடம் பிடிக்கிறது...
அந்தச் சூழலிலும் என் பாட்டி எங்கள் துணிகளுக்கு ஓரத்தில் மஞ்சள் கும்குமம் தடவி ஒவ்வொருவரின் தோளில் மாட்டி சுவாமி படங்களுக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னார்கள்...அடுத்தடுத்து வந்த அக்கம் பக்கத்து வீடுகளின் இனிப்புகளும் சிரிப்புகளும்...சூழலை மாற்ற நாங்கள் விளையாட்டில் அந்த தீபாவளியைக் கடந்துவிட்டோம்..விளையாட்டாய் கூட..
இன்று என்னிடம் இருக்கும் ஏராளமான சட்டைகளுக்கு புதிதாய் அணியும் வேளை நானே மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்வேன்..ஆனாலும் என் பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து தோளில் போட்ட அந்த தைக்காத மொத்த துணியின் புது வாசம் மட்டும் வைக்கும் மஞ்சளில் இத்தனை ஆண்டுகளாய் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண ..அதன் அறிந்து கொள்ள முடியா நீட்சியின் விந்தைகளை எப்படி விவரிப்பதென அறியேன்...
இன்னும் வரும்..
ராகவபிரியன்

Saturday, October 26, 2019

செவித்துறண்டியால்
காதுகுடையும் சித்திக்கு
குழந்தையின்
பட்டாம்பூச்சியின்
பின்னான ஓட்டம்
சொன்னாலும் புரிவதில்லை..
பட்டாம்பூச்சியை
கணுக்கையில் படிமமாய்க்
கிடத்திப் பேசும்
குழந்தை மொழி
அம்மாவைத் தவிர
யாருக்காவது புரியுமா என்ன..?
பட்டாம் பூச்சிகளை
பெரும் பறவைகள்
உண்பதில்லையாம்..
அம்மா எனும் வானம் தவிர
வேறெங்கும் பாசத்தின்
வண்ணங்கள் கிடைப்பதில்லையாம்..
தீபாவளி வண்ண உடைக்கான
சேர்த்தி வலையல்கள்
பட்டாம் பூச்சியின்
படிமத்தை மறைத்தால்
குழந்தையால் பேச முடியாதாம்..
வலையல் வேண்டாமென
சொன்னக் குழந்தையை
செவித்துறண்டியால்
குத்தியபடியே சித்தி
அழும் குழந்தையின் கைவலிக்க
வலையல் அடுக்குகிறாள்..
அந்தச் சின்னக்
கையிலிருந்த படிமப்பூச்சி
ஆழ்துளை கிணற்றுக்குள்
தன் உணர்விழைகளால்
குழந்தையைத் தேடிக்கொண்டிருக்க..
வலிக்கும் கைவலையல்களை
ஒவ்வொன்றாய்த் தள்ளி
இடைவெளியில்லாமல்..
தன் தலைமைப் பட்டாம் பூச்சியிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்..குழந்தை..

மத்தாப்புக் கொளுத்தினால்
கை சுட்டுவிட்டாதாம்..
வண்ணம் மங்கிப்போக
வாய்ப்பிருக்கிறதாம்...
குழந்தையின் அன்பில்
கையில் மத்தாப்பூவாய்
சிறகடிக்கிறது படிமத்தட்டான்...
ராகவபிரியன்

Friday, October 25, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...
சில நிகழ்வுகள் மானுடம் நிகழ்த்தியதாகக் கொண்டாலும் அதன் தூரத்து இயக்குக் கருவி ஆண்டவனிடம் இருப்பதை ஆன்மபலம் பொருந்திய ஞானக்கண் காட்டிக் கொடுத்துவிடும்..அத்தகைய ஞானக்கண் அன்பே சிவமாக உருவம் கொண்ட ஆதிசிவனின் முகத்தில் இருப்பதை அறிவோம்..
சிவ ஞான போதம் அதை இப்படிக் கூறுகிறது..
தொண்டர்கள் தாமும் வானோர் தொழும் திருமேனி தாமும்
அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி
வெண்சரளங்கள் சிந்த விழி மொழி குளற மெய்யே
கண்டுகொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே..
ஒரு பக்தியின் வெளி சிவமயமாய் மாறுகிறது...அங்கே சின்ன திடலொன்று உருவாக சிவம் சிவனென்று உறங்கத் தொடங்குகிறது..இருபுற நிழலில் திடல் குளிர சிவபக்தர்கள் சிவமென்றறியாமல் தாமும் உறங்குவதைக் காண உவகையெழும்பும் முகம்..அம்முகம் கண்டு சிவ ஞானக் கண் திறக்கும்..திடலும் உவகையும் ஆணவமும் எரிந்து சாம்பலாகிவிடும்...
இருளாது அன்றி இலது..எவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள் என்று சித்தாந்த அட்டகம் பேசுகிறது...
உறங்கும் திடலின் சிவ நிழலென அறியாமல் மகிழுந்துவை நிறுத்த...சிவன் மனித உருவின் ஆணவமென உருவெடுத்து...இடம் தனதென்கிறான்..மகிழுந்து தனதான உவகையிடம் சென்றடைய..ஆணவம்...
ஒரு பொருளும் காட்டாது இருள்..உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது...
என்ற சிவ ஞான சூத்திரத்திற்கினங்க..இருள் கூட பொருளின் உருவம் தெளிவின்றி காட்டக் கூடும்..ஆணால் ஆணவம் கண்ணை மறைத்தால் இருளும்..அதனுள்ளே மறைந்திருக்கும் பொருளும்..உள்ளுறங்கும் சிவமும் தெரியாமல் செய்துவிடும்..உண்மையைக் காண...அதிசயமாய் தூரத்து இயக்கு கருவியின் சிவ விரல் நடன முத்திரையைக் கண்டு அதிர நேர்ந்தது..
வெளிக்கான வேலியின் கல்தூண்களை ரிஷபவாகனமெடுத்துச் சாய்த்தும் கூட ஆணவம் நிஜம் உணர மறுக்க...சிவ உறக்கம் கலைந்து...நிழற்சுவர் ..மணற்சுவர்..அடுக்கிக் கிடந்த மாயா கன்மங்களான கற்றூண்கள் ...தனு கரண புவன போகங்கள்..இரண்டாகப் பிளக்க...ரிஷபங்கள் திடலின் ஆணவப் புல் மேய..சிவம் தன் இருப்பைக் காட்ட...இன்னமும் விழித்தெழாத...வேலியகற்றாத சிவ உடலின் மேல்..பிளந்த கற்றூண்களை அடுக்கி கிடப்பதை என்னவென்று சொல்ல...
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து..
எங்கே நிகழ்வின் இயக்கு கருவியைக் காணும் பேறு பெற்ற கண் இருக்கிறதோ...அங்கே சிவம் சிவமாய்க் கிடக்கும்..உடலெல்லாம் விபூதிப் பட்டைகளுடன் கன்ம மாயைகளை அடக்கும் சிவசக்தியின் ஞான விழி நெற்றியை உடலெங்கும் உடுத்தியிருக்கும்..நிஜமான ஆச்சாரியர்கள் உடலெடுத்து சிவமாய்க் கிடந்திருக்கிறார்கள்..
அருளில் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளில் தலையிலது போல..
எனும் சிவ ஞான வாக்கினை தியானித்து...அனைத்தையும் சிவம் ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து...அரங்கனுக்கு நன்றி சொல்வோம்..
பஞ்ச நதீஸ்வரர் திருவடிகளே சரணம்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Thursday, October 24, 2019

இந்த வருட தீபாவளி இல்லாத
வெளியொன்றைத் திறக்கிறேன்..
அப்பெருவெளியின்
படிமப்படிகளின் மேல் கிடக்கும்
வீதியோரக் கடைகளின்
சதுரமற்ற செவ்வகமற்ற
மிதியடியை
மிதித்தே உள்ளேகுகிறேன்..
விடியாத இரவொன்றிலிருந்து
நீளும் மத்தாப்புச் சிதறல்கள்
மன வெளியெங்கும்
வெறுப்பேற்றிச் சுற்றுகின்றன..
முதிராத மனமகிழ்வின்
அறைகளைத் திறப்பதற்கான
சாவி தேடியலைந்த
அவ்வெளியெங்கும்
என் வெற்றுக் கால்களில்
அப்பிக்கிடக்கிறது
சோகத்தின் சேறு..
முகம் கவிழ்ந்த
கூடடையும் பறவைக்காலென
நுனிப் பாதம் பட்ட
பழைய சாக்கின்
மிதியடி ஸ்பரிசம்
எம் மண்ணின் வாசமென
மனம் நிறைக்க..
ஏதுமற்ற என் பணப்பையில்
நிரம்பித் ததும்புகிறது
வெளியிடமுடியாத
அன்பு...
ராகவபிரியன்

Sunday, October 20, 2019

என் பிரதியிலிருந்து
நான் விலகிவிட்டேன்..
ஒரு படைப்பின் அந்தம்
இன்னொரு பிரதிக்கான
ஆதியென அறிவேன்..
பிரதியிலிருக்கும்
ஆய்வுப் பார்வை எனதல்ல..
இப்போது
என் மொழியியல் கண்கள்
குருடாகிக் கிடக்கிறது..
பிரதியை நீங்கள் கிழித்துப்போடுங்கள்..
என் மொழி அதைப் பார்க்கப்போவதில்லை..
என் பிரதியிலிருக்கும்
பூணூல் உங்களால் அறுத்தெறியப்படவில்லை..
என் மார்பில் இருப்பது
நேற்று மாற்றப்பட்ட புதுப்பூணூல்..
சூழலியல்
அமைப்பியல்
கோட்டாட்டுவியல்..
மிகு நுட்பவியல்
நுண் தளவியல்
புன்னாக்குவியல்
எனச் சொல்லிவந்து
இறுதியில் என் பிரதியை
பூணூலியலில் முடிப்பீர்கள்..
பூணூலின்
பிரம்ம முடிச்சவிழ்ப்பவனின்
முடிச்சவிக்கியியல்
பிரம்மப் படைப்பாளியறிவான்..
அகம் பிரம்மாஸ்மி..
என் பிரதியிலிருந்து
அவிழ்த்தெறியப்பட்ட
பூணூலில் இருந்து
நான் விலகிவிட்டேன்..
என் மார்பின் பூணூல்
என்னை விட்டு விலகுவதுமில்லை..
நான் கைவிடப்படுவதுமில்லை..
இன்னொரு படைப்பிற்கான
ஆதி முகத்தைப் படைக்கும்
படைப்பியலின்
நுட்பங்களோடு
கையிலிருக்கும்
மணிமாலையை
உருட்டத்தொடங்குகிறான்..
பூணூல் அணிந்த
பிரம்மச் சித்தன்..
ராகவபிரியன்

Wednesday, October 16, 2019

தொன்னூறுகளில் யூகோஸ்லோவியா என்ற ஐரோப்பாவின் ஆகப்பெரிய நாடு சிதறுருகிறது..நாடு துண்டாடப்படுகையில் இனப்படுகொலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறதெனச் சொன்ன..பின்னாளில் செர்பியா மற்றும் யுகோஸ்லாவியா எனப் பிரிக்கப்பட்ட நாடுகளின் அரசுகளுக்குத் தலைமைதாங்கிய அதிபர் சொலோபோடன் மிலோசோவிக்..அகண்ட உலக நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்...பாஸ்னிய போர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான கொடுரங்களைச் சந்தித்த யுத்தமென வரலாறு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அதில் குருதி எழுத்துக்களால் அதைப் பதிந்து வைத்திருக்கிறது..அவருக்கான குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க அவர் தனக்கான வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் வாதாடிக்கொண்டிருக்கிறார்..அவரின் கம்யூனிஸ வளர்ப்பும் சிந்தனைகளும் அவரிடம் பாசாங்கற்ற எந்தவித பயமுமற்ற மன நிலையைத் தந்திருந்ததால்..சிறையிலிருந்தவாறே தன்மீதான வழக்குகளை துச்சமென மதித்து நேர்கொண்டிருந்த ஒரு நாளில் சிறைச் சாலையில் மரணமுறுகிறார்..அவரின் இறுதிச் சடங்கில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹாண்ட்கி கலந்துகொண்டு இரங்கற்பா வாசிக்கிறார்..ஒரு போர்க்குற்றவாளியை ..அதுவும் கம்யூனிஸ சித்தாந்தங்களை செயல் படுத்திய நாட்களில் தன் கைகளில் மனிதக் குருதியை அள்ளிக் குடித்தவரை புகழந்து எழுதிய ஒருவருக்கு எப்படி நோபல் கொடுக்கக்கூடலாம் என்ற குரல் இன்று இலக்கிய உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது..எழுத்து என்பது நிஜங்களை உரத்தக் குரலில் பதிவு செய்வது..அது மனித மனங்களின் இருண்ட பகுதிகளை வெளிச்ச மிட்டுக் காட்டுவது..சொலோபோடன் மிலோசோவிக் குற்றவாளியாக இருந்தாலும் நிர்வாகத் திறமையுடையவர் என்றும் ..இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் என்றும் அவரின் கருணையுள்ளம் அறிந்தவன் நான் என்றும் முழங்குகிறார்..பீட்டர் ஹாண்ட்கி...இருந்தாலும் கனடாவின் மார்க்ரெட் அட்வுட்..ஹாருகி முராகமி..கென்யாவின் நூகி வா தியாங்க் போன்றவர்களைப் புறந்தள்ளி பீட்டருக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த உலகளாவிய மிகப்பெரிய பரிசு தரப்பட்டதா என்ற கேள்விக்கு.
.நோபல் பரிசு தேர்வுக்குழு இப்படிச் சொல்லியிருக்கிறது.." மனித வாழ்வின் அனுபவங்களை ..சந்தித்த அவலங்களை..துல்லியமாக ..அதற்கான வரையறைகளுடன்..மிகவும் சக்திவாய்ந்த மதி நுட்பம் நிறைந்த வார்த்தைகளால் இலக்கியம் படைத்தவர் பீட்டர் ஹாண்ட்கி.." இது போதாதா...அவரே எதிர்பார்த்திராத பரிசை அரங்கன் அவருக்குத் தந்திருக்கிறான்..அவரின் தனிப்பட்ட விருப்பமான தலைவர் உலக மக்களால் வெறுக்கப்படுவதால் அவரும் வெறுப்பைக் காட்ட வேண்டுமா..வெறுப்பையும் மீறிய நட்பின் சக்தி ஆழ்மன உள்ளத்தில் அசாத்திய துணிச்சலைத் தரும் அல்லவா..நோபல் தேர்வுக் குழுவிற்கும்..மஹாகவி பீட்டர் ஹாண்ட்கீ அவர்களுக்கும்..அனைத்து நண்பர்களுக்கும் அரங்கனுக்கும் என் நன்றிகள்...அன்பன்..ராகவபிரியன்

Tuesday, October 15, 2019

ஒரு பின் நவீன மழைக் கவிதை...மழைக் கவிதை எழுதாதவன் கவிஞனாய் இருக்க முடியாது...என்ன நான் சொல்றது..
மேலொன்றும் கீழொன்றுமான
இரண்டு மழைத்துளிகளை
விட்டு வைத்திருக்கிறது
என் வீட்டிற்கு வந்து போன மழை..
கீழிருக்கும் மழைத்துளி
காயும் வரை
பார்த்திருக்கிறேன்..
கொஞ்சமும் பொறுமையற்ற
மேலிருக்கும் அத்துளி
அன்னாந்த என் முகத்தில்
விழுந்து தெறிக்கிறது..
கீழே அதுவரை
உருண்டுகொண்டிருந்ததுதுளியல்ல..

மேலே மழை பொறுமையற்றிருக்க..
கீழே துளியற்றதாய்
உருள்வது ..மழையல்ல..
ஒரு மாநதியின் சுருக்கம்..
பூமியின் மேல் மழை..எனில்
மழையின் கீழ் தான் பூமி..
பூமியின் வீட்டிற்குத்தான்
வந்து வந்து திரும்புகிறது மழை..
ராகவபிரியன்

Friday, October 11, 2019

எழுதும் திறனும் அதைத் தாண்டிய அனுபவமும் அதையும் வரலாறாய் மாற்றத்தக்க எழுச்சிமிகு எழுத்தாற்றலும் அபரிமிதமாய் வாய்க்கப்பெற்ற எழுத்தாளுமை 2018ற்கான நோபல் இலக்கியப் பரிசை வென்ற போலந்தின் ஓல்கா டொக்ரகொசா..
போலந்தின் மக்கள் சோவியத் ஸ்டாலினிடமும்..கம்யூனிஸ அடக்குமுறையிடமும்..பொருளாதர நிரந்தரமற்ற வாழ்வுமுறையிடமும்..அத்தகைய பொருளாதார அடக்குமுறைமையைச் செயலாக்கிய ஸ்டாலின் என்ற இரும்புக்கை மாயாவி மறையும் வரையும் பட்ட துன்பங்கள் வரலாற்றின் சிகப்புப் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன..கம்யூனிஸத்தின் பொருந்தாக பிற்போக்குக் கொள்கைகளால் உலகளாவிய அளவில் அதன் வீழ்ச்சியை நாம் தற்சூழலில் கண்ணுறுவது போல போலந்தும் 1953றிற்குப் பிறகு கண்ணுற்றது..ஓல்கா என்ற பிறவி எழுத்தாளுமை 1962ல் போலந்தின் ஒரு குக்கிராமத்தில் பிறக்கிறது..அது பிறந்த நாளில் தான் திடீரென போலந்தின் உணப்பண்டங்களுக்கான விலை நிர்ணயக் கோணம் வித்தியாசமாய் சோவியத் ருஷ்யாவால் பார்க்கப்பட்டு... பன்மடங்கு விலையுயர்வு திணிக்கப்பட்டது..மெல்ல நடைவண்டியைத் தள்ளியபடி வீதியில் அடியெடுத்துவைத்த சின்னஞ்சிறு ஓல்கா ரொட்டித் துண்டிற்காக தங்களது வீட்டையே விற்றுவிட்டு நடுத்தெருவில் தாயின் கைபிடித்து நடந்த அந்த நாட்களை பின்னொரு நாளில் கச்சிதமாகத் திட்டமிட்டு இலக்கிய உலகம் எதிர்பார்த்திராத உத்தியும் நடையும் கொண்டு நாவலாய்ப் படைக்கிறார்..உலகம் அதிர்வின்..எழுத்து தந்த அதிர்வின் காரணமாய் எரிமலையொன்று வெடித்துச் சிதறியதை உணர்ந்தது..
கிடைத்த உணவுகளுக்கான போராட்டங்கள் மனதிலும் வயிற்றிலும் தங்கிவிட சிக்மண்ட் ப்ராய்டையும் வில்லியம் ப்ளேக்கையும் உண்டு அவ்வப்போது பசியாறியதாய்ச் சொல்லும் ஓல்கா..இலக்கிய உலகின் அத்தனை விருதுகளையும் பரிசுகளையும் குவித்திருக்கிறார்..தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட முன்வராத பதிப்பக உலகிற்குச் சாட்டையடியாய் தனது சொந்தப் பதிப்பகம் தொடங்கி அழியாத எழுத்தை அகில உலகிலும் உலவவிடுகிறார்..இரண்டாம் உலகப்போரின் விளைவாய் போலந்து நாட்டவர்கள் நாடற்று வீடற்று நாடோடிகளாய் ஐரோப்பாவெங்கும் வீதிகளில் உறங்கியதால் மன நோய்க்கு ஆட்பட்டு மரணமுறுவதைக் காணச் சகியாமல் மன நோய் ஆலோசனை மையம் ஒன்றைத் துவக்கி இன்னமும் நடத்திவருகிறார்..
அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ மொழியாக்கமோ இல்லை...
சிறகுகள் பொறுத்தப்பட்ட
பசுவொன்று
வானில் மேயத்தொடங்குகிறது..
போலந்தில் புல்வெளிகளின்
மேச்சல் விலை மேலதிகம்..
வானில் கூட
புல் மேயும் பொழுதுகளில்
கொம்புகளை அசைக்க
அதற்கு உரிமையில்லை..
கீழே விரிந்திருக்கும்
புல்வெளிகள்
அதனுடையதெனினும்
அதன் சொந்த மல்ல..
அதனால் தான் வானில்
நட்சத்திரங்களுக்கிடையில்
வளர்ந்திருக்கும்
புல் நுனிப் பனித்துளிகளில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது..
அதன் தொழுவம்
அதனுடையதில்லை..
அது நமைச்சல் தாங்காமல்
அவ்வப்போது வீசும்
வாலில் அமர்ந்த ஈக்கள்
வசதியாய்
முகத்தில் அமரும்..
ஈக்களை விரட்டுவதற்கான
விலை போலந்தில்
ஆகமிகு அதிகம்..
வானில் ஈக்கள் மொய்க்க
அனுமதி யில்லையென்பதால்
அங்கு மேய்வதில்
சுகம் அதற்கு..
புல் மேய்வது மட்டும்
மாட்டிற்கான
ஒரே வேலையில்லை..
சில சமயங்களில்
காய்ந்த வைக்கோலுக்காகவும்
வயிற்றில்
ஈரத்துணியுடன்
அது பறந்தாக வேண்டும்..
ராகவபிரியன்

Sunday, October 6, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..
காண்டீபத்தை வீசியெறிந்து யுத்தம் செய்ய மறுத்த பார்த்தனைப் பார்த்து பகவான்..யுத்தம் செய்தாக வேண்டிய கட்டாயத்தை...அதன் நியாயங்களை..அருமையாக எடுத்துரைக்கிறார்...யுத்தம் என்பதன் காரணமே..நியாயங்களை வெற்றி கொள்ளவைப்பதற்கான செயல் என்பதை அரங்கன் கீதையில் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில்..பார்த்தனின் யுத்தம் செய்ய பயப்படும் தன்மையை அலித் தன்மை என்று சொல்வது ஆச்சர்யங்களைத் தருகிறது..
க்லைப்யம்மா ஸ்மகம: பார்த நைதத்த்வய்யுப்பத் யதே
க்ஷூத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப!
இங்கே அரங்கன் அர்ஜுனனிடம்..இழிந்த உள்ளம் என்பதை அலியின் தன்மையாகக் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது..
அல்லூருக்கு வந்த முதல் நாள் அன்றே..அரங்கனை என்னிடத்தில் தவறாகக் கூறியது..அது அரங்கன் காதில் விழும் என்பதை உணராத அறியாமை..ப்ராமணன் என்றால் ஒரு சில அடையாளங்கள் வேண்டும் என்ற..அந்த அடையாளங்களைத் தாங்காத நிஜம்மான ப்ராமணனை மறைமுகமாக மனக்காயமுறுத்தும் திமிர் நிறை செயல்கள்..அரங்க பக்தியை சந்தேகமுறுதல் போன்ற சில ஒவ்வாமைகளை அரங்கன் எனக்குக் காட்டிக் கொடுக்க..நான் அரங்கனிடம்.."அரங்கா..இதையெல்லாம்..ஏன் என்னிடத்தில் சொல்கிறாய்...திருக்கச்சி நம்பியின் வரலாறை அறிந்தவர்கள் தான் நீ உரையாடும் செய்தியை ஓரளவு நம்புவார்கள்..ஆக அது போயிற்று ஆயிரமாண்டுகள்...இன்னமும் நீ உரையாடுகிறாய்..அதுவும் என்னிடம் என்பதை யாரும் நம்ப மறுப்பது மட்டுமன்றி..என்னை ஏமாற்றுக் காரணாகவும்..எதோ ஒரு காமக் கண்ணோட்டத்தில் நான் புதுப் புது உத்திகளைக் கையாள்வதாகவும் எண்ணி..என்னை ஒதுக்கி வைப்பது மட்டுமல்ல..என்னோடு யாரும் ஆகச் சாதரண உரையாடல்களைக் கூட தவிர்த்தும் விடுகிறார்கள்..அது மட்டுமல்ல...எனது அறுபது வயதிற்குத் தரவேண்டிய நியாயமான மரியாதையைக்கூட தருவதில்லை...அரங்கா..உனக்கான மிருஷ்ட்டா பூஜைகளை நேரம் தவறாமல் நியமமாகச் செய்ய வேண்டுமெனில்..அதை உரியவர்களிடம் நேரே நீ சொல்லிவிடு" எனக் கதறினேன்..மனக் காயத்திற்கான களிம்புகள் ஆன்மீக பரிசோதனை மருத்துவ மனையில் நிறைய இருப்பதால்..கொஞ்சம் வலி குறைய..அரங்கனிடம் சரணாகதி செய்தேன்..உடனே..
அரங்கன்.." நீ என்ன கோழையா...இல்லை..அலியா..நான் இருக்க நீ ஏன் பயம் கொள்கிறாய்...போருக்குப் பயந்த அர்ஜூனனிடமும் இதையேதான் சொன்னேன்.."என்று சொல்லி..தன் வலது கையைத் திறந்து காட்ட மேற்கண்ட ஸ்லோகம் என் உப்பிலியப்பனின்..கையில்...பொறிக்கப்பட்டிருந்தது..திடுக்கிட்டுக் கண்விழித்து கீதைப் புத்தகம் எடுத்துப் பார்த்தால்..அதே வரிகள்...அதிர்விலிருந்து நான் மீள..சில நாட்கள் பிடித்தன..எனது பிரபந்த வாசிப்பின் போர் இன்னும் துல்லியமாக..அதிகச் சக்தியுடன் ..அதீத சப்தத்துடன் ..அதன் இலக்கை நோக்கி நகர..எனது சாதாரண எந்த உள் நோக்கமும் அற்ற உரையாடல்கள் ,,அதுவும் என் குடும்பத்தாருடனான..உரையாடல்கள் கூட...ஒட்டுகேட்கப்பட்டு...கீதையின் பொருளுரை போல வெவ்வேறு அர்த்தங்களுடன் சிலரின் உள்ளத்தைத் தாக்க்கியதை அறிந்து மேலதிக வருத்த முற்றேன்..
இருந்தும்...அரங்கனின் கட்டளை..என்பதால் பிரப்ந்த வாசிப்பை காலையிலிருந்து இரவு வரை என்று நீட்டித்த முதல் நாள்..அரங்கனிடம் .."அரங்கா..இந்த அவதையை முடிவிற்குக் கொண்டு வா..."என்று வேண்டியபடியே..தொலைக்காட்சியில் மனம் லயிக்காமல் இருந்த ஆன்மீகப் பொழுதில்..என் மகள்..ஜோதி தொலைகாட்சியில் கேளம்பாக்கம் பிரம்ம பெருமாளின் அபிஷேக ஆராதனைகளை காட்டும் நிகழ்வின் ஒளிபரப்பை வைத்துவிட்டு நகர்ந்து விடுகிறாள்..அரங்கனின் மூன்று முகங்களில் நரசிம்மமும்..வாராக முகமும்..மச்ச உடம்பில்..பதினாறு கைகளுடன் இருக்கும் அந்த அர்ச்சையின் வித்தியாசமான உருவம் மனதை ஈர்க்க..அதில் லயிக்கிறேன்..அபிஷேக ஆராதனை முடிந்து..அலங்காரமும் முடிந்த பின்..அரங்கனின் வலது கரத்தில்...ஒரு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பலகையில்.." நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மாட்டப்பட...அரங்கன் இனி அனைத்தையும் தானே கவனிக்கப்போகிறான்...என்பதுணர்ந்து..மனதின் கனம் குறைய..வாசலுக்கு வருகிறேன்..எனது அருமை நண்பர்..அல்லூர் ப்ரகாஷ்..நாளை நாம் திருச்சி கலெக்டரைச் சந்தித்து.. ஜீயபுரம்..அரங்கன் கோவிலுக்குச் சொந்தமான மண்டபத்தை ..சாலை விரிவாக்கத்தால் இடிபடாமல் தவிர்க்க..விண்ணப்பம் தரச் செல்கிறோம்..என்றார்..
நானும் இது அரங்கன் செயல் என்றே..நினைத்து ஒப்புக்கொண்டு விட்டேன்..அடுத்த நாள் காலை வானம் மெல்ல தூறிக்கொண்டிருக்க..நானும் ஒன்பது மணிவரை மிருஷ்ட்டா பூஜைகள் நடைபெற வில்லை என்பதை..கவனித்தவாறு இருக்க..எங்கே நான் பிரபந்த வாசிப்புப் போரை உக்கிரமாகத் துவக்கி விடுவேனோ எனப் பயந்தவர்கள்..வித்தியாசமான ஆயுதமொன்றால் என்னைத் தாக்கத் தயாரானார்கள்..அரங்கன் அன்று எனது பிரபந்த வாசிப்பு வேண்டாம் என்பதை முன் கூட்டியே சொன்னதை உணர்ந்து...திருச்சி ஆட்சியரைக் காணச் சென்றுவிட்டேன்..பிரபந்தம் வாசித்தால்..கருத்து வேறுபாடுகளின்..கூடாத பிற்போக்குப் பார்வை கொண்டோரால் விளக்கு மாற்றால் அடிவாங்க நேரிடும் என்பதையும் உணர்ந்தேன்..அரங்கனுக்கான போர் நிகழ்ந்தால் அஸ்திரப்பிரயோகங்கள் அரங்கனையும் தாக்கும் என்பதை அறியாதவர்கள்..நான் பயந்து பின் வாங்கிவிட்டேன் எனப் புல்லரித்துப் போயிருப்பார்கள்..
கார்பண்யதோஷாபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸ்ம்மூடசேதா:
யச்ச் ரேய:ஸ்யா ந் நிஸ்சிதம் ப்ரூஹித ந் மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதிமாம் த்வாம் ப்ரபந்நம்..!!
அரங்கா..கோழைகளுடனும்..கோழைத்தனத்தாலும் பக்தியின்... அரங்க பக்தியின் மேன்மையறியாதவர்களிடம்..எவ்வாறு உனது கட்டளையை எடுத்துச் சொல்வது..?அரங்கா..எந்தச் செய
ல் அல்லது சாதனை உறுதியாக மேன்மை படுத்துமோ ...அதை எனக்குக் கூறு...நான் உன்னைத் தானே பற்றியிருக்கிறேன்..உன் அடிமை என்பதால்..என் மீதான விளக்குமாற்றின் அடிகள் உன் மீதும் விழும் என்பதை அறியாதவர்களின் செயல்களை மன்னித்துவிடு...எனக்கு தகுந்த அறிவுரையையும் வழி நடத்தலையும் தருவாய்....
என்பதாக என் சின்னஞ்சிறிய அறிவிற்கு எட்டியவரை பொருள் சொல்லி...இதோ இந்த பிரபந்தப் போரை முடிவிற்குக் கொண்டு வருகிறேன்...இனி அரங்கன் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வான்...
பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்கிருதாம்..
தர்மசம்ஸ்தாப நார்த்தாயே சம்பவாமி யுகே...யுகே...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...

Friday, October 4, 2019

The words are conveniently blocked out
The sentences are totally blotted out
The meanings are hidden inside miseries
As understood by the literary treasuries
Every time a writer like me writes and writes
about the souls of millions dying in poverty lurid lights
An ocean of poetry prose in pseudo neo modernism
by the popular stricken literary giants prism
simply swallowing the realism by their selfish..selfi ism
To reach the audience and the readers
To reach their attention and their radarsAn ordinary poet like me should dance
Dance and dance along the lines of chance..

O poet ..O poetry...O prose..O writer..
Do not get carried for e'er
Thou time will come will definitely come..
To the literary world a poet has come..
To the literary world a poet has come..
Ragavapriyan Thejeswi

Thursday, September 26, 2019

புனிதத்தின் வாசம் அடைக்கப்பட்ட
பொடியொன்றை
ஆன்ம மனதின்
கூம்புவடிவ சிறு கூண்டில்
அடைக்கிறேன்..
தூபக் காலில் கவிழ்க்கப்பட்ட
கூம்பின் முனையில்
பிரபந்தச் சப்தமெழுப்ப
முனை பற்றி
வாசப் புகை நடனமிடத் தொடங்கியது..
புகையின் கோட்டோவியங்களில்
உச்சிரவஸை
சுட்டு வீழ்த்தினான்
ஒரு கடவுள் மறுப்பாளன்..
அவன் கவிஞனாம் வேறு..
கடவுள் படங்களென
மாட்டப்பட்டிருந்த
குதிரை லாயமொன்றின்
வாசலில்
தூபப் புகை சூழும்
இடமற்ற
செயற்கை அடர்வில்
மனமகிழுந்துவை
நிறுத்த முடியாமல்
இங்கும் அங்குமாய்
திருப்புகிறேன்..
பாதையில் நிறுத்தப்பட்ட
மகிழுந்துவின் ஓட்டுனராய்
பொடி அடைக்கப்படும்
கூண்டுக்குள்
சுருங்கிக் கொண்டுஒரு [ச்]சு வாசமற்ற
வாசனாய்த் தவிக்கிறேன்..

படங்களில் மாட்டப்பட்ட
குதிரைகளை
அவிழ்த்துவிடுங்கள்..
மகிழுந்துவைக்
கொஞ்சம் அவ்விடத்தில்
நிறுத்திக் கொள்கிறேன்...
ராகவபிரியன்

Friday, September 20, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...
குடும்பம் சமூகம் வெளிவட்டாரம் வாழ்வின் அயராத உழைப்பால் பெற்ற வெற்றியின் மீதான பொறாமை..அதனால் அருகிலிருப்போர் மறைமுகமாக நற்பெயருக்கு விளைவிக்கும் களங்கம்.. இவையெல்லாம் உள்மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி நிலையின் தாக்குதல்களால் சில பால்ய நினைவுகளைப் பதிவுசெய்ய வேண்டியதாகிறது..
திருப்பறாய்த்துறையில் ஒரு மார்கழி மாதத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து திருப்பாவையை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்...விடிந்தால் அதை ஒப்புவிக்கும் போட்டியில் வென்றால் ஒரு வெள்ளிக்காசும் ஒரு டம்ளர் ராகிமால்ட்டும் கிடைக்கும்..ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கி பின் கண்மூடி வரிகளை மீளுருக்கொணரும் வேளை உஸ் எனும் சத்தம் கேட்க.. கண் திறந்தால் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து இங்கும் அங்கும் தலையைத் திருப்பியபடியிருக்கிறது..நொடியில் ஓட்டமாய்க்கீழிறங்கி சப்தமிட யாராரோ மாடியேறித் தேடுகிறார்கள்..பாம்பு கண்ணில் படவேயில்லை..
நிசப்தங்களுடனான ஒரு நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கம்...திருவாரூரின் தொடர்வண்டித் தொழிலாளர் குடியிருப்பில் ஆடிமாதக் காற்று கொணர்ந்து வீசிய குப்பைகள் குவிந்து கிடந்து...வினோத சப்தமெழுப்பிய தருணம் கண் திறக்க...அந்தச் சுவரோத்திலிருந்து புறப்பட்ட ராஜ நாகத்தின் மிக நீண்ட மெல்லிய ஊர்தலை மெளனமாய் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்..பதற்றங்களும் அதன் துளிகளும் விடமென வேர்வைக்கால்களெங்கும் துளிர்க்க விழித்தே இருந்த இரவும் காலையில் அதைப் பிடிக்க நடந்த முயற்சிகளும்..இன்னமும் மனமெங்கும் ஊர்ந்திருப்பதை அரங்கன் அறிவான்..
திருச்சியில் அன்றைய செஞ்சோஸப் பள்ளியின்..சர்ச்சின் அருகில் ஒரு மலைப்பாம்பு சிறைப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
ஆறாமிடத்தில் ராகு இருந்தால் விஷ ஜந்துக்கள் அந்த ஜாதகன் இருக்கும் வரை கண்ணில் படாதென ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன..நாங்கள் உத்தியோகம் பார்த்த நிலையங்களில் நிறைய பாம்புகள் குடியிருந்தன...ஒரு உயரதிகாரி...பாம்பைக் கண்டால் நீங்கள் விரும்பிய ஊருக்கு மாற்றல் உத்தரவு வருமென்று கூறியதைக் கேட்டிருக்கிறேன்...எனது வாழ்வின் அனுபவ அறைகளில் பாம்பொன்று கண்ணில் பட்டால் விபரீதங்கள் நிகழ்ந்த வரலாற்றுப் படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
திருப்பாவை மனனம் செய்த மறு நாள் தான் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி விஷம் வைத்து ருஷ்யாவில் கொல்லப்பட்ட செய்தி வர...திருப்பாவை போட்டி ரத்தாகி எனக்கான அன்றைய ராகிமால்ட் கிடைக்காமல் போனது உச்சகட்ட துரதிருஷ்ட்டத்தின் இறுதிக்காட்சியாகிப்போனது..
அரங்கனின் உக்கிரம் பற்றிய எனது எச்சரிக்கைகளைத் தவறாகவே சில தன்னல போலி தகுதியற்றவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்..அரங்கன் அறிவான்..இன்றும் கூட காலையில் அரங்கன் மாலைகள் அடங்கிய பையுடன் தன் கோவிலுக்கு வந்து நடை திறக்கப்படாத அதிர்வில் ஏமாற்றத்துடன் திரும்பியதை ஊர் அறியும்..காலை ஏழு மணி தாண்டியும் அரங்கன் சந்நிதி திறக்கப்படாமல் இருப்பதாலும்...அதனால் பக்தன் உருவில் வந்து சோதித்த அரங்கன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாலும்..அர்ச்சையின் உக்கிரம் பலமடங்கு அதிகரித்திருப்பதை உணர்ந்தால்...மிருஷ்ட்டா பூஜைகளை செய்ய வேண்டும் நியமங்களுடன் என்ற அரங்கனின் நேரடியான ஆணையிடல் நிகழ்வாகவே ஆன்மீக புத்தகத்தில் அது...பதிவாகியிருக்கிறது..தங்களின் தவறுகளை மறைக்க பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியும் அரங்கன் சந்நிதி முன்பாகவே வலிந்து நடத்தப்படுகிறது...
போற்றுவோர் போற்றட்டும் ..புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..அரங்கன் கீதையில் சொன்ன உண்மைகளை உணர்ந்தவர்கள் அரங்கனின் உண்மையையும் உணர்வார்கள்...ஒரு சிலர் என்னை அரங்கன் என்று அழைத்து அரங்கனை அவமானப்படுத்துகிறார்கள்..நான் அரங்கனில்லை...ஒரு சாமான்ய ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண பக்தன் அவ்வளவே..
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸ்ர்வஸ்ய விஷ்டிதம்..
ஒளிகளுக்கெல்லாம் ஒளியான பரப்பிரம்மம் மாயைக்கு அப்பாற்பட்டது.. ஞானவடிவமானது அறியபடவேண்டிய அது தத்வ ஞானத்தினால் மட்டுமே புரியப்படும்..குறுகிய பார்வையும் தவறான கண்ணோட்டமும் பரப்பிரம்மம் எதிரில் இருந்தாலும் கண்ணை மறைத்துவிடும்...வயதும் அறிவும் அனுபவமும் உள்ள மஹா ஞானவான்களால் கூட புரிந்து கொள்ள முடியாத பரப்பிரம்மம் நிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட நிஜமான உயரமுடையது..அது எல்லோர் இதயத்திலும் மனதிலும் இருந்து மனசாட்சியென்ற பெயரிலும் போற்றப்படக்கூடியது...[என்னளவிலான பொருள்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

Tuesday, September 17, 2019

ஒரு கோவிலின்
கோபுர பொம்மைகளில்
வாக்கு வானம்
கவிந்திருக்கிறது..
அவ்வப்போது
காணாமல் போய்
மீண்டும் குதித்துக் கொத்தும்
கருப்பு இறகு
ஊர்க் குருவிகள் இரண்டு
தொடமுடியாத
வானத்தில் பறந்து
பார்க்கிறது...
பொம்மைப் பழங்களை
மூக்கால் உடைக்க
முடியாமல்
அருகில் பிய்ந்து பறக்கும்
கருப்பும் சிவப்புமான
கொடிக்கம்பத்தில்
அமர்ந்து
இங்கும் அங்கும் பார்த்து
செம்மாந்து போகும்..
இதோ
கோவிலின் கீழே
காய்ந்த வாழைப்பழத்தின்
எச்சங்கள் மேலே
சுற்றிக்கிடக்கும்
பூணூலின் மிச்சங்கள்..
வாக்குப் பசி
வெட்கமறியாதது...
வசிப்பது கோபுரவானமெனினும்
பூணூலைக் கொத்துவதெனின்
புல்லரிக்கும்
குருவிகளுக்கு..
கொத்தும் நொடிகளில்
இலக்கியம் பற்றி
கத்தவும் செய்யும்..
பூணூலைக் கொத்தி
விசிறும் மூக்கின்
வீச்சுக்களில்
கோபுர வானம்
சுருங்கிப் போனதாய்..
உடைந்து விட்டதாய்..
இறுமாப்புடன்
இறகு கோதும்..
பூணூல் அணிந்த
அதிகாரத்திடம்
பொட்டுக் கடலைகளுக்காக
சிறுகு சுருக்கி
சின்னதாய் தத்தி
வேடிக்கை காட்டி
விட்டத்தில்
எதையோ தேடியலைந்ததை மறந்து..
அதிகார வாக்கு வானத்திற்காக
இப்போது
கோவில்களில்
கடவுள் இருக்கிறாரென
கூச்சல் போடுகின்றன..
கோபுர பொம்மைகள் மேல்
வீசப்பட்டு
சிக்கிக் கிடக்கும்
செருப்புகளை
கருப்பு இறகு
குருவிகளிடம்
கீழே தள்ளிவிடும்
விசைகளில்லை..
புறாக்களுக்கான
கோபுர வீடுகளை
குருவிகளுக்கு
யாரும் ஒதுக்குவதில்லை..
அவர்களிடமே
அதிகாரம்
இருந்தாலும் கூட..
நெற்றியில்
பூசப்பட்ட சாம்பலையும்
சீச்சுவர்ணத்தையும்
மூக்கால் துடைத்து
மூச்சு விடும் குருவிகள்
உயர உயரப் பறந்தாலும்
வாக்கு வான
நூல் சுற்றிய கலசங்களில்
செளகர்யமாய் அமர்ந்து
குளிர் காயமுடியாது...
ராகவபிரியன்

Sunday, September 15, 2019

ஒரு குமுட்டி அடுப்பின்
குழிக்குள் நிரப்பப்படும்
கரித்துண்டுகளென
வார்த்தைகள் கருத்து
உள்ளங்கைகளில் ஒட்டிக்கொள்கின்றன..
பற்ற வைத்த நெருப்பை
விசிறிரும்
போதை விசிறிகளின்
தடுமாற்ற நடனம்
வார்த்தைத் துண்டுகளில்
ஒட்டாமல்
புகையாகி சன்னதாய்
புறப்படுகின்றன...
விசிறியை விட்டெறிந்துவிட்டு
ஊத முயல்கையில்
முயலோடும் வரப்புகளில்
கரித்துண்டுகள்
நீண்டு முளைத்து விடுகின்றன..
பற்றிவிடாத
நெருப்பொன்றை
குமுட்டிக்குள்ளிருந்து
கிளப்பமுடியாத
நிஜம் உணர்ந்து
மண்ணெண்ணைப் போத்தலை
பிரபஞ்சமெங்கும்
தேடித்தேயும்
பார்வைக் கால்கள்..
செந்தணல் முளைத்த
இதயப் பரப்பெங்கும்
நான் ரொட்டி சுட்டு
மீந்த வார்த்தைகளில் தான்
அப்பளம் ஒன்றை
பின் நவீனமென
கத்திக்கொண்டிருக்கும்
கழுதையொன்று
சுட்டுப்பார்க்கிறது..
ராகவபிரியன்

Saturday, September 7, 2019

இறைமை என்பது உணரப்படவேண்டும்..அவ்வாறான இறையுணர்வு ஒவ்வொருவரிலும் இருக்கிறதென அறிவோம்..இறைமையை இறையுணர்வை சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் அதன் நிஜத்தன்மையை சந்தேகிக்கும் செயல்பாடுகளும் தவிர்க்கவொன்னா இழப்புகளை ஏற்படுத்திவிடுமென திருமூலர் சொல்கிறார்..
தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே .
அதுபோன்ற இறையுணர்வை அரங்கன் அருளியிருப்பது நம்பமுடியாத ஒன்றாகவே எப்போழ்தும் இருக்கிறது..அதுபோழ்து இந்தச் சிறுவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்..திருப்பறாய்த்துறை விவேகானந்த உயர் நிலைப்பள்ளியில்..அவனின் வகுப்பில் காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட இந்தச் சிறுவன் எல்லாப்பாடங்களிலும் முதலாக வருகிறான்..அது மட்டுமல்ல..அதுவரையிலான அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு வரலாற்றில் கணிதத்தில் அவன் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியதை அறிவித்த ஆசான் அச்சிறுவனை அவனின் இருப்பிட உட்காரும் பலகையின் மீதேறி நிற்கவும்..சக மாணவர்களைக்கொண்டு கைத்தட்டவும் பணிக்கிறார்..
மாலையில் அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அவனுடன் சண்டையிடுகிறான்..ஏற்கனவே இருந்த ஒரே ஒரு வெள்ளைச் சீருடைச் சட்டை கிழிக்கப்பட அச்சிறுவன் அவமானத்தில் அழத்தொடங்குகிறான்..அவனின் வேறு சில நண்பர்கள் அந்த பொறாமையாற்பட்ட சிறுவனை மீண்டும் வேறு போட்டியில் வெற்றி கொள் என போதிக்க..உடனே..அந்தத் தோழன் இச் சிறுவனை மிதிவண்டிப் போட்டிக்கு அழைக்கிறான்...
தோழனும் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சிறுவனெனினும் பணக்காரன்..அப்போது அவனிடம் மிதிவண்டியொன்று இருந்தது..ராலே மிதிவண்டிகள் அப்போதைய பண்பாட்டுத் தளத்தின் பொறாமைக்கான காரணி..இச்சிறுவனிடம் மிதிவண்டி இல்லை..கூனிக் குறுகிப்போகிறான்..அவனுடைய தமிழாசிரியர்..அவரின் இடது கை மணிக்கட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும்..செயலற்று..வலது கையால் தான் அவரால் இயக்கங்களை நிகழ்த்த முடியும்..அவரின் பெயர் இப்போழ்தில் நினைவு வர மறுக்கிறது...அவர்..தீவிர சைவப்பற்றாளர்..இச்சிறுவனிடம் ஒருமுறை மாணிக்க வாசகரின் பாடல் ஒன்றைத் தந்து மனனம் செய்யச் சொல்ல..இச்சிறுவனும் அடுத்த நாளே ஒப்பிக்க அவர் பரிசாகத் தந்த காலணா..நாணயத்தை புத்தகப்பையில் வைத்திருந்தான்..அதைக் கொடுத்து ஒரு வாடகை மிதிவண்டி எடுத்து வந்து போட்டிக்குத் தயாரானான்..அக்ரஹாரமே திரண்டு நின்று வேடிக்கைப் பார்த்தது..மேலக்கோடியில் இருக்கும் இச்சிறுவனின் வீட்டிலிருந்து கீழக்கோடி பள்ளி மைதானத்தை ஒரு சுற்று வந்து பெருமாள் கோவிலில் முடிக்கவேண்டும்..
ஏழையாயும் நோஞ்சானாயும் பட்டினியுடனும் இருக்கும் இச்சிறுவனும் பழைய மிதிவண்டியும் கண்டிப்பாக தோற்றுவிடும்..பணக்கார ஆறாம் வகுப்பிலேயே ஆஜானுபாகுவான சிறுவனும் புத்தம் புதிய ராலே மிதிவண்டியும் கண்டிப்பாக வென்று விடுமென நினைத்து..அவன் பக்கம் அத்தனை பேரும் நின்றிருக்க..இச்சிறுவன் பக்கம் அப்போதைய அடுத்த வீட்டு அண்ணன் ராமநாதன் நம்பிக்கையோடு நின்றிருக்க..அரங்கனும் உடனிருக்க..போட்டி துவங்கியது..
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு
சோதியுமாய் இருள் ஆயினார்க்கு
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தது நாமே..
[மாணிக்க வாசகர்..]
காலணா பெற்றுத் தந்த அந்தப் பாடலை உரக்கச் சொல்லியபடியே இச்சிறுவன் மிதிவண்டியை மிதித்து பெருமாள் கோவில் வாசல் வருகிறான்..பலத்த கரகோஷம்..அந்த ஆறாம் வகுப்புத் தோழன் இச்சிறுவனை வெற்றி கொள்ள முடியாத நிஜத்தையுணர்ந்து..ராலே மிதிவண்டியை வீதியில் போட்டு விட்டு வீட்டிற்குள்ளே ஓடி விட்டதாய் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்..இச் சிறுவனும் வீடு வந்து முகம் கழுவி திரு நீறு பூசி..பெருமாள் கோவிலில் ஆயிர நாமம் சொல்லத் தொடங்கினான்..
ராகவபிரியன்

Thursday, August 29, 2019

பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் நாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை...
சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்...
பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமிருந்தாலும் அதை சரியாக உபயோகிக்க பயிற்சி தேவை என்பதை இன்றைய பயிற்சி எல்லாவற்றிற்கும் தேவை என்ற உத்தியை... எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் பாடியது பின் நவீனம் இல்லையா...
நான் ஆங்கிலம் மற்றும் வேறு எந்த மொழியையும் மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை...வாலி ஒரு பாடலில்.."இவரு இவரு சுவரு சுவரு..."என்று காதலுக்குத் தடையாய் இருக்கும் வில்லனை பற்றி எழுதியிருப்பார்...வைரமுத்துவும் இது போல் நிறைய பாடல் வரிகளைத் தந்திருக்கிறார்...இருந்தாலும் பின் நவீனம் என்றால் அது பிராமணர்களால் வந்துவிடக் கூடாதென்ற ஒருவித மூட எண்ணங்களையும் உள் நோக்கக் கற்பிதங்களையும் உள்ளடக்கி பாரதியைப் புறந்தள்ளி..கண்ணதாசனைக் கொண்டாடுவது..வாலியைப் புறந்தள்ளி வைரமுத்துவைக் கொண்டாடுவது என்ற திராவிட கடவுள் மறுப்பு இயக்கம் தந்த தாக்கத்தால் நிஜமான இலக்கியம் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனப்பாண்மைதான்...சிந்தனைகளின் பின்னங்கள் தான் பின் நவீனம் என்றால் அது உண்மை ஆகாது..நமது வரலாற்று இலக்கியம் அல்லது இலக்கிய வரலாறு குறுகிய பார்வையுடைத்தது...இல்லையெனில்..தி.ஜானகி ராமனை விடுத்து அகிலன் ஞானபீடம் பெற்றிருப்பாரா...போகட்டும்... உங்களுக்காக ஒரு பின் நவீன கவிதை...
திடலருகிலுள்ள சுவரொன்றில்
அணில் தாவியேறுகிறது..
எறும்புகள் எந்தச் சிரமமுன்றி
வரிசையாய் ஏற முடிகிறது..
சில காக்கைகளும் கூகைகளும்
வல்லூருகளும் கூட
சுவரின் உச்சியில் அமர முடிகிறது..
திடலில் எதையோ தேடியலையும்
மயிலொன்று
நொடியில் சுவர் மேல்
அமர்ந்து தோகைவிரிக்கிறது..
திடலையும் சுவரையும்
கம்பி வேலியிட்டு
என்னுடையதென்கிறான் மனிதன்..
சுவரின் மேல்
மனிதனால் சுதந்திரமாகத்
தூங்கக் கட்டிலை
கடுகியிட முடியுமோ...?
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...