Sunday, October 27, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகளில் தீபாவளி...1
நினைவுகள் என்பது பாதுகாக்கப்படவேண்டியவை...எல்லா நினைவுகளும் அல்ல..சில நமக்குப் பாடம் கற்றுத்தந்திருக்கும்..அப்படியான நினைவுகள் நாம் மறைந்த பின்னும் ஆன்மாவாய் சில காலம் உயிர்த்திருக்கும் என உப நிடதங்கள் கூறுகின்றன..சீனாவில் தொங்கும் சவப்பெட்டி என்ற மரத்தாலான மேலதிக கனமுடைய பெட்டி ஆகப்பெரும் உயரத்தில் 2500 ஆண்டுகளாய்த் தொங்கிக்கொண்டிருப்பதாகப் படித்திருக்கிறேன்..
கோவில்கள் நமது முன்னோர்களின் நினைவுகளை அவ்வப்போது தூண்டியபடியே இருக்கின்றன..நமது பண்பாடும் கலாச்சாரமும் சில நினைவுகளின் மீட்சியென்பதறிவோம்..அது போழ்து எனது வயது எட்டு என நினைக்கிறேன்..என் நினைவிலிருக்கும் முதல் தீபாவளி...கணவனை சிறுவயதிலேயே இழந்த என் அத்தையும்..எங்களின் தாய்தந்தையற்ற பெரியப்பாவின் பெண்..என் அக்காள் தங்கமும் நாங்கள் உடன்பிறந்தோர் அப்போது ஐந்து குழந்தைகளும் இருக்க...மத்திய அரசு ஊழியரான எனது தந்தை உடல் நிலையற்ற நிலையில் ஏறக்குறைய ஓராண்டாய் வேலைக்குச் செல்லாமல் வறுமையை விலைகொடுத்து வாங்கி எங்களிடம் விற்பனை செய்திருந்த நேரம்..
என் அப்பாவின் நிறுவனத்தில் கடன் வழங்கும் சங்கம் ஒன்றிருக்கும்..அதில் கடன்படாத தொழிலாளர்களே அந்நாட்களில் இல்லையெனலாம்..அச்சங்கம்..தீபாவளி நேரங்களில் கடனுக்கு துணிமணிகள் பட்டாசு போன்றவைகளைத் தரும்..என் தந்தை அந்தச் சங்கத்திலிருந்து தீபாவளிக்கு எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக மீட்டர்கணக்கில் துணி கிழித்துக் கொண்டு வந்துவிடுவார்..
இரண்டு புடவைகளும் வாங்கி வந்திருந்தார்...அதில் ஒரு புடவை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்க..அதை என் அத்தையிடம் கொடுக்காமல் என் அம்மாவிடம் கொடுத்துவிட..அந்த விடிந்தால் தீபாவளி என்ற இரவு விடிய விடிய நடந்த சண்டையால் விடியாமலேயே புலர்ந்தது..இரவு எட்டு மணிக்கு மேல் அந்த மொத்தத் துணியை அளவெடுத்து எங்களுக்கும் என் அக்காவிற்கும் சட்டை கால் சட்டை பாவடைச் சட்டை எனத் தைக்க வேண்டும்..திருப்பறாய்த்துறையின் கோவில் வாசலில் இருக்கும் தையல் கடைக்காரர்..எப்படியும் விடிவதற்கு முன் துணியை அணிந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் கொடுத்துவிடுவார்...என் அண்ணனின் அளவிற்கு எல்லாருக்கும் ஒரே மாதிரி தைத்து விடுவார்...
புதுச் சட்டைக் கனவில் திடீரென விழித்த நான் என் அம்மாவின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீரைக் கண்டேன்..அவள் மடியில் அமர்ந்து கண்ணீரைத் துடைக்க...அம்மாவிற்காக வாங்கி வந்திருந்த புடவை தாறுமாறாய் கிழித்தெறியப்பட்டிருந்தது...அடங்கா சினம் கொண்ட என் அப்பாதான் அப்படிச் செய்திருக்க வேண்டும்..
காலையில் தைக்கப்படாத துணிகளை தையல் காரர் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துவிட்டு என் பாட்டியிடம் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அந்த வார்த்தை இன்று வரை என் நினைவுகளில் இருந்து நீங்காமல் அடம் பிடிக்கிறது...
அந்தச் சூழலிலும் என் பாட்டி எங்கள் துணிகளுக்கு ஓரத்தில் மஞ்சள் கும்குமம் தடவி ஒவ்வொருவரின் தோளில் மாட்டி சுவாமி படங்களுக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னார்கள்...அடுத்தடுத்து வந்த அக்கம் பக்கத்து வீடுகளின் இனிப்புகளும் சிரிப்புகளும்...சூழலை மாற்ற நாங்கள் விளையாட்டில் அந்த தீபாவளியைக் கடந்துவிட்டோம்..விளையாட்டாய் கூட..
இன்று என்னிடம் இருக்கும் ஏராளமான சட்டைகளுக்கு புதிதாய் அணியும் வேளை நானே மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்வேன்..ஆனாலும் என் பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து தோளில் போட்ட அந்த தைக்காத மொத்த துணியின் புது வாசம் மட்டும் வைக்கும் மஞ்சளில் இத்தனை ஆண்டுகளாய் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண ..அதன் அறிந்து கொள்ள முடியா நீட்சியின் விந்தைகளை எப்படி விவரிப்பதென அறியேன்...
இன்னும் வரும்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...