Tuesday, November 5, 2019

தொடர் வண்டிகள்
கால் நீவிக்கொள்ளும்
நிலையங்களில் தான்
அவசர அசுரனின்
உருவம் காணமுடியும்..
கழிப்பறையற்ற கிராம வீட்டின்
காவிரிக் கரை பட்டதாரியின்
காலை நரகலை மிதித்த
குளிக்காத கால்கள்
படித்துறையில் இறங்கும்
நொண்டல்அவசரம்..
காலைப் பசிக்கான
பொட்டலங்களை
சுற்றி இருக்கும்
முடியாத நூல் அவசரம்..
புதிதாக வாங்கிய பயணப்பெட்டியின்
சக்கரங்களைச் சுழல விடாத
சுமையான வாழ்வின் போதாக் கால
பொம்மையவசரம்..
கண்ணற்ற ஒருவனின்
அருமையான ராகத்துடன்
ஒட்டத்துடிக்கும்
வண்டி புறப்படும் முன்னான
அலுமினிய லோட்டாவின்
தப்பான தாள அவசரம்..
இத்தனையையும் கால் நீவியபடியே
கவனித்துக் கொண்டிருக்கிறது
புறப்படத் தயாரான
தொடர் வண்டியும்..
சில அருமையான புத்தகங்களையும்
தினசரிகளையும் அழகாக மாட்டிக்கொண்டு
ஒரு வாசக முகமாவது
தன் முகம் காணாதா
என ஏங்கியபடியேகால் நீவிக் காத்திருக்கும்
வண்டியினதும்
விற்பனையாளனதுமான
வசீகர அமைதி முகங்களும்..

அவசர அசுரனின் திருப்தியான
பார்வை ஏப்பத்தை
வெளியிட்டபடியே புறப்பட்டது வண்டி...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...