Tuesday, September 17, 2019

ஒரு கோவிலின்
கோபுர பொம்மைகளில்
வாக்கு வானம்
கவிந்திருக்கிறது..
அவ்வப்போது
காணாமல் போய்
மீண்டும் குதித்துக் கொத்தும்
கருப்பு இறகு
ஊர்க் குருவிகள் இரண்டு
தொடமுடியாத
வானத்தில் பறந்து
பார்க்கிறது...
பொம்மைப் பழங்களை
மூக்கால் உடைக்க
முடியாமல்
அருகில் பிய்ந்து பறக்கும்
கருப்பும் சிவப்புமான
கொடிக்கம்பத்தில்
அமர்ந்து
இங்கும் அங்கும் பார்த்து
செம்மாந்து போகும்..
இதோ
கோவிலின் கீழே
காய்ந்த வாழைப்பழத்தின்
எச்சங்கள் மேலே
சுற்றிக்கிடக்கும்
பூணூலின் மிச்சங்கள்..
வாக்குப் பசி
வெட்கமறியாதது...
வசிப்பது கோபுரவானமெனினும்
பூணூலைக் கொத்துவதெனின்
புல்லரிக்கும்
குருவிகளுக்கு..
கொத்தும் நொடிகளில்
இலக்கியம் பற்றி
கத்தவும் செய்யும்..
பூணூலைக் கொத்தி
விசிறும் மூக்கின்
வீச்சுக்களில்
கோபுர வானம்
சுருங்கிப் போனதாய்..
உடைந்து விட்டதாய்..
இறுமாப்புடன்
இறகு கோதும்..
பூணூல் அணிந்த
அதிகாரத்திடம்
பொட்டுக் கடலைகளுக்காக
சிறுகு சுருக்கி
சின்னதாய் தத்தி
வேடிக்கை காட்டி
விட்டத்தில்
எதையோ தேடியலைந்ததை மறந்து..
அதிகார வாக்கு வானத்திற்காக
இப்போது
கோவில்களில்
கடவுள் இருக்கிறாரென
கூச்சல் போடுகின்றன..
கோபுர பொம்மைகள் மேல்
வீசப்பட்டு
சிக்கிக் கிடக்கும்
செருப்புகளை
கருப்பு இறகு
குருவிகளிடம்
கீழே தள்ளிவிடும்
விசைகளில்லை..
புறாக்களுக்கான
கோபுர வீடுகளை
குருவிகளுக்கு
யாரும் ஒதுக்குவதில்லை..
அவர்களிடமே
அதிகாரம்
இருந்தாலும் கூட..
நெற்றியில்
பூசப்பட்ட சாம்பலையும்
சீச்சுவர்ணத்தையும்
மூக்கால் துடைத்து
மூச்சு விடும் குருவிகள்
உயர உயரப் பறந்தாலும்
வாக்கு வான
நூல் சுற்றிய கலசங்களில்
செளகர்யமாய் அமர்ந்து
குளிர் காயமுடியாது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...