Monday, November 4, 2019

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது மகிழுந்துவில் திருக்கோவிலூர் செல்லும் வழியில் பெரம்பலூர் கடந்த சில தொலைவில் உடும்பு ஒன்று தேசிய நெடுஞ்சாலையை வலமிருந்து இடமாக லாவகமாக கடந்து செல்கையில் எனது மகிழுந்துவின் சக்கரத்தில் சிக்கிய சப்தம் கேட்டது...கண்டிப்பாக உயிர் தப்பி அதன் மறுவாழ்விடம் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பின் நவீன கவிதை உங்களுக்காக...அன்பன்..ராகவபிரியன்
உடும்புப் பிடியாய்
சில படிமங்கள்
என் சுவற்றின் மேல்
சில பூச்சிகளுக்காக
காத்திருக்கின்றன..
அதன் முதுகில்
கயிறு கட்டி
கோட்டைச் சுவர் மேல்
ஏறிவிட எத்தனிக்கிறேன்..
அதை வேட்டையாட
அதன் இறைச்சியால்
வயிற்று வலி போக்கிக்கொள்ள
ஈட்டியுடன்
சில அறிவு ஜீவிகள்
சுவரோரம்
எக்காலமும் காத்திருக்கிறார்கள்..
அதன் தோல் வேய்ந்த
இசை மேளச் சப்தம்
பற்றிக் கொண்டு
உலக நாடுகளின்
நடனச் சுவர்களில்
தத்தியேறியவர்களை
அறிவேன்..
ஏதோ ஒரு பொந்தில்
பதுங்கிக் கிடக்கும்
உடும்பு
பின் நவீன
தேசீய நெடுஞ்சாலையை
வாலாட்டியபடி
பம்மிக் கடக்க
பயண வெளி அதிரும்..
எனது பயணப் பார்வைகளில்
இதுவரை
சாலையில் அடிபட்டுக் கிடக்கும்
ஒரு உடும்பு உடல் கூட
படிமமாய் படுத்தியதில்லை..
பின் நவீனச் சாலைகளில்
இன்னும்
கனரக வாகனங்கள்
உடும்பெதையும்
சந்திக்கவுமில்லை...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...