Sunday, October 20, 2019

என் பிரதியிலிருந்து
நான் விலகிவிட்டேன்..
ஒரு படைப்பின் அந்தம்
இன்னொரு பிரதிக்கான
ஆதியென அறிவேன்..
பிரதியிலிருக்கும்
ஆய்வுப் பார்வை எனதல்ல..
இப்போது
என் மொழியியல் கண்கள்
குருடாகிக் கிடக்கிறது..
பிரதியை நீங்கள் கிழித்துப்போடுங்கள்..
என் மொழி அதைப் பார்க்கப்போவதில்லை..
என் பிரதியிலிருக்கும்
பூணூல் உங்களால் அறுத்தெறியப்படவில்லை..
என் மார்பில் இருப்பது
நேற்று மாற்றப்பட்ட புதுப்பூணூல்..
சூழலியல்
அமைப்பியல்
கோட்டாட்டுவியல்..
மிகு நுட்பவியல்
நுண் தளவியல்
புன்னாக்குவியல்
எனச் சொல்லிவந்து
இறுதியில் என் பிரதியை
பூணூலியலில் முடிப்பீர்கள்..
பூணூலின்
பிரம்ம முடிச்சவிழ்ப்பவனின்
முடிச்சவிக்கியியல்
பிரம்மப் படைப்பாளியறிவான்..
அகம் பிரம்மாஸ்மி..
என் பிரதியிலிருந்து
அவிழ்த்தெறியப்பட்ட
பூணூலில் இருந்து
நான் விலகிவிட்டேன்..
என் மார்பின் பூணூல்
என்னை விட்டு விலகுவதுமில்லை..
நான் கைவிடப்படுவதுமில்லை..
இன்னொரு படைப்பிற்கான
ஆதி முகத்தைப் படைக்கும்
படைப்பியலின்
நுட்பங்களோடு
கையிலிருக்கும்
மணிமாலையை
உருட்டத்தொடங்குகிறான்..
பூணூல் அணிந்த
பிரம்மச் சித்தன்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...