Thursday, September 25, 2025

 






அருகருகே மரபுடைமை எச்சம் என்பதையும் ஆங்கில லெகசி என்பதையும் கிடத்துங்கள். மெல்லிய இழையொன்றால் இரண்டிற்குமான இடைவெளி இழை மின்னல் உங்கள் கண்களை கூசக்காணலாம்.
1990 ல் உங்கள் ரா. பி கடினமாக ஓடிவந்து எம்பி உயரம் ஒன்றைத் தாண்டிக் குதித்தான். அது முதன் முதலாக அரசு கல்லூரிகளில் பேராசியராகும் கனவிற்கான அரசாங்கம் நிர்ணயித்த கீழே மெத்தையற்ற உயரத்தாண்டுதல் இலக்கு.
அது அதுவரையிலான அப்பாவி ஏழை பிராமணன் ஒருவன் திராவிட கொடுங்கோல் மைதானத்தில் தாண்டவியலா உச்சம். எங்கள் மெலிந்த கால்கள் கொண்ட குடும்பத்தின் மரபுடைமை எச்சமாக அவ்வுயரம் இன்னமும் தாண்டவியலா உச்சியிலேயே உட்கார்ந்திருக்கிறது.
நிஜம் என்னவெனில் உங்கள் ரா.பி. க்கு மாநில அரசுக் கல்லூரிகளில் வகுப்பெடுக்கும் வாய்ப்பு இறுதி வரை கடந்த முப்பதாண்டுகள் தாண்டிய போலி திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கொடுக்கப்படவே இல்லை. பொய் வரலாறு புணையப்பட்ட ஏமாற்று சமூக நீதி இடஒதுக்கீட்டு அவலம் ஆங்கிலேயர்களால் ஊன்றப்பட்டது. அதன் மெல்லிய அறுபடப்போகும் ஆணிவேர் செயற்கை திராவிட அமிலம் ஊற்றி வளர்க்கும் போலி சமூகநீதி பார்த்தனீய வீழ்ந்துவிட்ட வெள்ளாமை.
தரம் எனும் நீரூற்றாத எந்தப் பயிரும் செழித்து வளரப்போவதில்லை. திராவிடம் சொல்லும் லெகசி என்பது குடும்ப அதிகாரத்தின் கொடுங்கோன்மை. அந்த லெகசி இம்மண்ணின் மைந்தர்களை இன்னமும் ஆரியன் திராவிடன் இந்து இஸ்லாம் கிருத்துவன் பார்ஸி சீக்கியன் வடக்கன் தெற்கன் சமூக நீதி நீட் ரகசியம் இலவசங்கள் இடஒதுக்கீடு எனும் கூண்டுகளில் அதிகார விலங்குகளின் பசிக்காக மனித இரைகளை வீசும் உத்தியன்றி வேறில்லை.
மரபுடைமை எச்சம் என்பது வழிவழியாக குடும்பத்தின் தனி உறுப்பினரால் நிர்ணயிக்கப்பட்ட எச்சம். அவ்வுறுப்பினர் கடும் உழைப்பின் விளைவாக நேர்மையை மெலிந்த கால்களில் ஜீவசக்தி களிம்பென தடவிக்கொள்வார். அவர் எந்தவித ஊக்கமருந்துமின்றி இலக்கை இலகுவாகத் தாண்டிக் குதித்திப்பார். மெத்தையற்ற தரையில் விழுந்து எலும்புகள் உடைந்தாலும் எழுந்து நடந்து நிமிர்ந்த நன்னடையுடன் சமூக வீதிகளில் கைத்தட்டல்களுடன் பெருமிதம் பொங்க நடந்து செல்வார். அது தான் மரபுடைமை எச்சம்.
இதோ முப்பதைந்தாண்டுகளுக்குப்பின் உங்கள் ரா. பியின் இரண்டாவது மகள் மாநில அரசுக் கல்லூரிகளில் வகுப்பெடுக்க நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்வெனும் இலக்கை வென்றிருக்கிறாள். அவள் தாண்டிய காட்டாறுகளும் கொடும் பாலைகளும் எவர் கண்களும் கண்டிராதவை. அக்கடின உழைப்பின் ஜீவ சக்தி களிம்பு தந்த வலிமையால் தாண்டிய உயரம். ஆதலால் தான் எங்கள் குடும்பத்தின் அரிய மரபுடைமை எச்சம் மீண்டும் அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
அன்பு நண்பர்களே. என் மகள் மேலும் மேலும்மேலதிக உயரங்களை எட்ட வாழ்த்துவீர்களா. நீங்கள் வாழ்த்துவீர்களா..? அவளின் மின்னும் வெற்றித் தங்கத் தொப்பியில் மயிலிறகுளை அடுக்குவீர்களா?
அரங்கன் உங்கள் ரா.பி யின் மகளுக்கு ஆசிகளைத் தர இப்பதிவின் வழி வேண்டுதல்களை பதிவு செய்கிறான். வேறென்ன செய்துவிட முடியும் இந்த ஏழைத் தகப்பனால்.
நன்றியும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
இக்கணத்தின் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்
உங்கள் ராகவபிரியன்

 








கைபேசியில் முன்பதிவு செய்கையில்
இரண்டு நெருஞ்சி கொத்துகள்
நடு மற்றும் மேல் படுக்கையென
ஆள் காட்டி விரலில் தைத்துவிடுகின்றன..
பயணித்தாக வேண்டிய கட்டாயம் துரத்த
குழந்தைகளை மேல் படுக்கை ஏணியில்
ஏற்றி விட்டு
நடுவில் தொங்கும்
முட்படுக்கையில் தவிக்கிறது தாய்மை..
கீழ்படுக்கை வென்று வந்த கிழவர்கள்
பயணச் சாதனைச் சால்வையை
இழுத்துப் போர்த்தியபடி
மனிதம் இறந்து போகும்
கால நொடிகளின் முகத்தை
மூடிக்கொள்கிறார்கள்..
பயணச்சீட்டுப் பரிசோதகர்
ஒரு பிடி மெளனத்தை
வாயில் வைத்துக் குதப்பியபடி
தலைகுனிந்து
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட
அறப் போராளியென
தவிக்கத் தொடங்குகிறார்.
மேல் படுக்கை குழந்தை புரண்டு
விளிம்பு வரை வருகிறது..
உறக்கமற்று
சதா ஆடிக்கொண்டிருக்கும்
தாய்மை ஊஞ்சல்
சட் டென
கைவிரித்து ஏந்திக் கொள்கிறது..
தொடர் வண்டியின் ஓடும் சப்தம்
இதயச் சப்தங்களை
நிணம் சிதைக்கும் கத்தியால்
துண்டு துண்டாய் வெட்டிக் குவிக்கிறது.,,
பயணம் முடியும் வரை
தோளில் குழந்தையுடன்
தொடர்வண்டிப் பெட்டியில்
மேகங்களில் ஊரும் நிலவென
நடந்து கொண்டிருக்கும் தாய்மை..
விலை கொடுத்து வாங்கப்பட்ட
உறக்கமுடனான
பயணப் படுக்கையில்
உறங்கவியலாவிடில்
தூக்கத்தினதும் தாய்மையினதுமான
வண்டிச் சத்தம்
என்ன விலை வைத்துத்
திருப்பித் தரப்படும்?
ராகவபிரியன்

Tuesday, September 16, 2025

 








பக்தியின் காலம் ஒரு தொடர் வண்டி. என் ஆன்மீகப் பயணத்தில் சற்று கண்ணயர்ந்து விட்டிருக்கிறேன் நான். திரவரங்க வீதிகளைச் சுற்றிக்கொண்டிருந்தவனை நொடிப்போதில் காஞ்சிமா நகரில் கொண்டுவிட்டுவிட்டது காலம். இதோ இப்போது காஞ்சியின் வீதிகளில் காமாட்சியைச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

பக்தி என்பது வாழ்வமைப்பின் வீடு மாற்றும் செயல் அல்ல. பக்தி என்பது சைவத்திலிருந்து வைணவத்திற்கோ இல்லைக் கோவிலைச் சுற்றுவதிலிருந்து வீதி சுற்றுவதோ இல்லை. பக்தியை பழகுவதும் விளையாட்டைப் பழகுவதும் வெவ்வேறானவை. விளையாட்டுத் திடலைச் சுற்றிய கால்கள் விரைவில் வீடடைய விரும்பும். கோவிலைச் சுற்றும் கால்கள் இறைவனை அடையத்தான் ஓடும்.
திருவரங்கனைச் சுற்றியவனை காமாட்சியைச் சுற்ற வைத்தவன் வரதன். காமாட்சியும் பெருந்தேவியும் அரங்க நாயகியும் இவனுக்கு ஒன்றுதான். ஆனால் திருவரங்கனைச் சுற்றுவதும் காஞ்சியைச் சுற்றுவதும் வித்தியாசமானவை. பக்தியின் கலிடியாஸ்கோப் சுற்றிக்கொண்டிருக்கையில் காஞ்சியையோ இல்லை அரங்கத்தையோ அவ்வளவு எளிதில் சுற்றுதல் என்பது இயலாது.
திருவரங்கனைச் சுற்றும் போதெல்லாம் மனம் இலகுவாகி அரங்கன் கருமேகமென நெடுஉரு கொண்டு உரையாடி உடன் வருவான். காமாட்சியைச் சுற்றும் போது வரதன் நீ பெரிய காஞ்சியைச் சுற்றுகிறாய் எனச் சொல்லி என்னை அனுதினமும் பகடி செய்கிறான். திருவரங்கம் என்பது ஆகப் பெரிய ஒன்று. பெரிதான எதுவும் தன்னைப் பெரிதெனச் சொல்வதில்லை. பெரிதினும் பெரிது கேள் என்பது தமிழ்த்தாரகம். பெரியகோவில் எனில் திருவரங்கம் தான். ஆனால் கச்சி ஏகம்பன் பெரிய காஞ்சியையும் பெருந்தேவி சின்ன காஞ்சியையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வரிய தத்துவம் பெரிதிற்கும் சிறிதிற்குமான இடைவெளி எதுவுமில்லை எனப் புரியவைப்பது தான். பெரிதான திருவரங்கத்தையும் பெரிதினும் பெரிதான காஞ்சியையும் சுற்றுதல் என்பது கால்கள் பெற்ற வரம்.
பக்தியைப் பழகிய கால்களை திருவரங்க மண்ணிலிருந்து காஞ்சி மண்ணில் இறக்குவதென்பது சொல்லில் அடங்கா வலி நிறைந்தது. கால்களைச் சுற்றிக் கட்டியிருக்கும் யானைச் சங்கிலி ஒலிக்க இழுத்து இழுத்து காஞ்சி வீதிகளை சுற்றி வருகையில் வலி பெரிதா கச்சி ஏகம்பனின் பெரிய காஞ்சி பெரிதா இல்லை வரதனின் காஞ்சி சிறிதா இல்லைப் பெரிதுதானா என எப்படிப் புரிந்து கொள்வது ?இப்படித்தான்.
புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு. நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி..
மலர்களில் சிறந்தது ஜாதி முல்லை. இறைவனில் பெரியவன் வரதன். அழகில் சிறந்தவள் ரம்பா. நகரில் பெரியது காஞ்சி.
இப்படியான பெரிதிற்கும் சிறிதிற்குமான எண்ண வண்டியில் சுற்றுவதும்..காஞ்சி காமாட்சியின் மாட வீதிகளைச் சுற்றுவதும்... சர்க்கஸில் மரணக் கிணறில் இருசக்கர வாகனத்தில் சுற்றுவதும்.. ஒன்றுதான். அவ்வளவு வாகன மரண நெரிசல். நெரிசலில் சிக்குண்டவனை நசுக்குவது பருமனா ஒல்லியா என்பதைவிட, கிடைக்கும் இடைவெளியில் சுவாசிக்க இயலுமா என்பது தான் வாழ்வியலின் ஊடுபுகுந்து வெளிவரும் பக்திசார்ந்த பகுத்தறிவு கேள்வி.
‘ஏரியிரண்டும் சிறகா எயில் வயிறா
காடுடைய பீலி கடிகாவா – நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு’
மேற்கண்ட வெண்பா எப்போது யார் எழுதியதென எவருக்கும் இதுவரைத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பதிவு செய்தால் மகிழ்வேன்.
ஊரின் இருபுறமும் ஏரிகள்..மயில்சிறகாம். கோட்டை மதில் மயில் வயிறாம். அடர் காடு மயில் தோகையாம். அத்தியூர் மயிலின் தலையாம்.
மயிலின் தலைப் பாகம் பெரிதா? இல்லை தோகை பெரிதா. அத்தியூர் என்பது தான் இன்றைய சின்னக் காஞ்சி. வரதனின் இடம். இதைப் பெரிய காஞ்சி எனச் சொல்லாமல் ஏன் சின்னக் காஞ்சி எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அதனால் தான் வரதன் என்னைப் பகடி செய்கிறானோ..? அறியேன்.
மாபெரும் பெருநகரை மானுடத்தைப் பிரிப்பது போல் பிரிப்பது சாபம் தானே. பிரித்தாளும் உத்தியைப் புகுத்திய ஆங்கிலேயனின் சுவடுகளை காஞ்சி மா நகரில் இன்றும் கூட காணமுடிகிறது. பக்தியின் சுவடுகளைத்தான் சாதி மத அரசியல் ரப்பர் கொண்டு அழிக்க முயற்சித்தும் திமிறி வெளி வந்து ஆங்காங்கே ஆயிரம் கோவில்களாய் குவிந்து கிடக்கிறது.
காலச் சங்கிலி காலைப் பிணைத்து இழுத்து முதுமை மரத்தில் இறுக்கிக் கட்டினாலும் வரதனையோ அரங்கனையோ சுற்றும் இவன் அவிழ்க்கவியால கட்டுடைத்து வரலாற்றின் கால வீதியில் கண்டிப்பாய் கால்பதிக்க ஓயாமல் சுற்றிக்கொண்டுதான் இருப்பான்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
பெருந்தேவித் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
ஆதிசங்கரத் திருவடிகளே சரணம்
ராகவபிரியன்

Monday, September 15, 2025

 





என் தோட்டத்தின் அபூர்வ மலரொன்றைச் சுற்றி

ஊடொலி கிளப்பியபடி
சுற்றித் திரிந்திருக்கிறதொரு
மரண வன்சித் திதலீ..
கனமற்ற அதன் கால்களின் ஸ்பரிசம்பட
அப்பூவின் மரணம் அப்போதே
நிகழ்வது ஆற்றொணா துயரம்..
என் வாழ்வில் இதுவரைக் காணா
பேரதிர்வின் காரணி வன்சியின்
வசீகரங்கள் உருவப்பட்டே ஆகவேண்டும்..
மரணத் திதலி என்னைச் சுற்ற மகிழ்வு மிஞ்சும்....
என்னையே சுற்றிக் கொண்டிருத்தலென்பதுதான்
காலக்கொடுமை..
அத்திதலீயின் சிறகு ஓவியங்கள்
பற்றியெரியும் சிதையின்
சாம்பல் வழியும் தாழியின்
குயவச் சக்கர கோட்டோவியங்கள்..
வன்சி திதலீயின் பூவிதழ் அமர்வைக் கொண்டாடுவோரின்
நயணக் கரங்களின் நகக்கீறல் வளைவுகள்
மெல்லிதழிலும் வசீகர மார்பிலும்
நகர்ந்து சென்ற உவர்வு நத்தையின்
வழித் தடங்கள்..
அவ்வந்தகத் துழாவல்
வழித் தடங்களில் கிடக்கும்
மகிழ்வின் தடுப்புச் சுவர்களில்
வன்சிகள் அமர்ந்து
வண்ணச் சிறகை சுழற்றுவதில்லை..
எவ்வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்படும்
மரண வன்சிகள் சுற்றித் திரிந்தால்
துக்கச் செய்தி துரத்திக்கொண்டிருக்குமென..
சொல்லிச் சென்றவன் சோதிடனல்ல..
உலகச் சோலையின் அத்தனை மலரிலும்
ஏதாவதொரு மரண திதலீ
எப்போதேனும் அமர்ந்தே தீரும்..
அதுவரை
வாழ்வில் வீசும் புயலில் சிக்கி
சிறகோவியம் சிதையக் கூடுமென
எருமையின் முதுகில் ஏறி
புகலிடம் தேடி திதலீயும் வன்சியும்
பறந்து திரிவது
சிறகுமுறிவின் மரண உத்தி...
என்ன செய்ய
திதலீயமர்வைத்
தடுக்கும் சக்தி மலருக்கேது...
ராகவபிரியன்

Thursday, September 11, 2025







 உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்

நேபாளம் பற்றி எரிகிறது. 2008ல் உருக்கி சாம்பலாக்கிய மன்னராட்சி மகுடம் மீளுருவாக்கத்திற்கு ஒத்திகை பார்க்கிறது. மாணவ எழுச்சிக் குவியலின் நடுவில் நேபாளத்து இமயச் சிகரங்கள் சிக்கித் தவிக்கின்றன. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதால் சாமாணியனின் நொடி முள் நகர்வு நிறுத்தப்படுகிறது. கைபேசியிலிருந்து மீண்ட பார்வை துப்பாக்கியின் வழி பாராளுமன்றத்தையும் ஜென் இசட் எனும் வார்த்தைகளின் மீதும் பதியவைக்கப்படுகிறது.
அமைதியை சுட்டெரித்த சாம்பலைக் குழைத்து ஜன நாயக நாற்காலியை வார்த்து அதன் மேல் உருக்கிய மகுடத்தில் முலாம் பூசும் உலைகளமாய் மாறிப்போனது காத்மண்டு வீதிகள்..மன்னர் ரானா வின் வம்ச அரசாட்சி முடிவிற்கு வந்த போதில் மோகன் கொய்ராலா எனும் நேபாள கவி இப்படி எழுதுகிறார்...ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக் கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன். இது மொழியாக்கமோ மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ இல்லை...
மன்னரின் கோபப்பார்வைக்குப்
பயந்த நேபாளிகள்
உயர் சிகரங்களின்
செங்குத்தான சரிவுகளில்
பூத்துக் குலுங்கும்
ஆர்கிட் மலரிதழ் தடுப்புகளினூடே
ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்..
இதோ பனிமலையின் உச்சியை
தங்கமயம் ஆக்க
நாளையின் ஆதவன்
உதிக்கப்போகிறான்..
நேபாளப் பெண்களின்
திருமணத்திற்கான
தாலித் தங்கத்தின் பொருட்டு
மன்னனின் மகுடத்தை
உருக்கப்போகிறோம்..
திருமண நாளில்
மென்சிவப்பு வண்ண
வெர்மிலியன் பூவாசத்தை
நேபாளமெங்கும்
தெளிப்பதற்காக
மன்னனின் வைரம் பதித்த
அதிகாரக் கமண்டலத்தை
தூக்கி வந்துவிட்டோம்..
மன்னர் குடும்பத்தைக் கொளுத்தியதால்
அடர்ந்து சூழ்ந்த
சிதைகளீன் சாம்பல் நிற
நேபாள இரவில்
ஊளையிடும்
அதிகார ஆந்தைகளின்
வாள் சுழற்றும் கண்கள்
பார்வையிழந்து விட்டன..
காத்மண்டு வீதிக் குப்பைகளுடன்
செங்கோலையும்
வெண்கொற்றக் குடையையும்
யாரோ வீசியெறிந்திருக்கிறார்கள்..
எலும்புத் துண்டுக்காக
அலையும் தெரு நாய்கள்
அவற்றைத்
தூக்கிச் செல்கின்றன.
இரத்த ஆறுகள் குதித்து ஓடும்
நேப்பாளப்
பள்ளத் தாக்குகளின்
சேற்றுத் தேங்கல்களில்
செந்தாமரைகள்
இனி மலரப்போவதேயில்லை...
வாழ்வின் வீழ்ந்த
சரிவுகளில் சிக்குண்ட
நேப்பாளிகளே..
ஆர்கிட் மலர் மாலைகளுடன்
மேலேறி வாருங்கள்..
ஜன நாயக மணப்பெண்
சர்வாலங்கார பூஷிதையாக
காத்திருக்கிறாள்..
ராகவபிரியன்

 







வாழ்வின் அந்திமத்தில் இதுவரை கால்வைக்காத பெரும் நகரொன்றின் கடைவீதிக்குச் செல்லுதல் திணிக்கப்பட்டுவிட்டது. கொள்முதலெனும் கலை கைவரப்பெற்றவர்கள் ஏதுமற்ற குகையில் கூட சில மூலிகைகளை உருவி வந்துவிடுவார்கள். வழமையான கொள்முதற் இடங்களில் வாங்கும் பட்டியலின் மனனம் அவசியமற்றது. கால்களும் சக்கரங்களும் இருப்பிட அட்ச ரேகை தீர்க்க ரேகை கணிப்புகளை நுட்பமாக அலசி அணிச்சையாய் நம்மைக் கொண்டு சேர்த்துவிடுவது வாடிக்கையியலின் பரிணாம வளர்ச்சி.

காஞ்சியின் எல்லா வீதிகளிலும் விடிந்தவுடனேயே சில சிற்றுண்டித் தள்ளுவண்டிகள் குறிப்பிட்ட சில கால இட இடைவெளிகளை நிரப்பத் தொடங்கிவிடுகின்றன., நீராகாரங்கள் இடம்பெயர்ந்து பழைய தயிர் சோறுகளுடன் புறப்பட்ட மானுட வாழ்வியலின் கோவணம் தொல்பொருட்த்துறையால் இனி அகழ்ன்றெடுத்தே ஆகவேண்டும்.. இன்றைய காஞ்சியின் அகன்ற வீதிகளின் போக்குவரத்து நெரிசலின் அடர்வை அளவிடுதலென்பது இயலாது. நிகழ் வாழ்வியலின் அவசரம் உந்தித் தள்ள விடியலிலேயே அடர்ந்து கொண்டு அது கெட்டிப் படுவது சுற்றியிருக்கும் தொழிற்சாலை வெளியேற்றி உள்வாங்கும் மனிதவள மேம்பாட்டியிலின் விகிதாச்சார ரசயான கழிவு. ஆங்கே ஆயத்தச் சிற்றுண்டிக்காக முண்டியடிக்கும் கூட்டமும் அதனைக் கொணர்ந்த வாகனங்களின் தாறுமாறான நிறுத்தல்களும் சுருட்டப்பட்ட கொள்முதல் பட்டியலை விரித்து வாசிக்க ஒரு துளி இடவசதி அளிப்பின் அதுவே காலத்தின் பெருங்கருணை.
விடியற் கால அவசரக் காற்று சற்று ஓய்ந்தால் கொள்முதலுக்கான சந்தைச் செல்லுதல் இலகுவாகுமென்பது காஞ்சிவாழ் மானுட பேராசையெனில் அதுதான் நிஜம். அடர்ந்த காஞ்சியின் போக்குவரத்து நெரிசல் மீறி கடைவீதிகளில் கொள்முதற் பட்டியட் பொருட்களை முழுமையாய் பற்றி வருவதென்பது பகீரத பிரயத்தனத்திற்கு சற்றும் குறைவானதல்ல..
போக்குவரத்து சற்று அடர்வு குறைந்து பெருமூச்சிற்கான இடம் கிடைக்கையில் சுருட்டப்பட்ட பட்டியலை மூச்சுக் காற்றால் விரித்து வாசிக்கக் கிடைப்பதென்பது நேர மேலாண்மையின் முதுகலைப் பட்டம் பெறுவது போன்றது. அந்த அரிய வாணிக நுகர்வுப் பட்டியலை நொடியில் நோக்கி முதுகலை பட்டத் தேர்வை வென்று நிகழ் போக்குவரத்து நெரிசல் பல்கலையில் பட்டம் பெற்றால் கொள்முதல் கூறுகளை அள்ளிவருதல் சுலபம்.
ஒரு வழியாய் கடைவீதிச் சந்தை புகுந்தாகிவிட்டது. கொள்முதல் அறத்தின் பேரம் பேசும் அத்தியாயம் கிழித்தெறியப்பட்டு மின்னனு எடையின் அடியில் காந்தமாய் ஒட்டப்பட்டு இறந்து கிடக்கும் யதார்த்தம் விவரணைகளைக்கூட விற்றுவிடும். நிகழ்ச் சந்தையின் விற்பனை நிலைவிலையின் நெகிழ்வுகள் சிதைவனுமதியற்றுப்போனதால் கொடுக்கல் வாங்கல் யுகத்தில் ஒரு கட்டு கீரை வாங்குதல் கூட விளிம்பு நிலை மானுட வாழ்வியலில் சவாலாகிப் போனது யதார்த்த இருண்மை. காஞ்சியின் கடைவீதியில் மாமல்ல பேரரசன் போர்த்தளவாடங்களுக்களுக்கான சந்தையை அமைத்திருக்கிறானாவென சரித்திரம் பேசும் இலக்கியங்களை துலாவத் தொடங்கியது இருண்மையின் குகைக்குள் கைவிளக்கின்றி கால்வைக்கும் அசட்டுத் துணிச்சலின் ஒரு விழுங்கவியலா மிடறு.
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ,
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடைகால் யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த...
எனும்
காஞ்சி மாநகரம் என்ற உருத்திரங்கண்ணனாரின் ஊடுபார்வையை கைவிளக்காக்கி ஒரு கட்டு கீரையின் நெகிழ்விற்கு அப்பாற்பட்ட நிலை விலைத் தகவல் கோரிஆக பவ்யமாய் விண்ணப்பிக்க குகை புகும் கலவர மூடியொன்று திடீரென திறந்து கொண்டது.
என்னதான் செய்வது
மாமல்லப் பேரரசன் கீரை சாப்பிட்டிருத்தலுக்கான வரலாற்றுச் சான்றுகள் கண்டிப்பாக கிடைத்திருக்க வாய்ப்பே இல்லையெனும் நிஜம் பொட்டில் அறைந்தது.
மேற்சொன்ன காஞ்சிப் பாடல் மொழியின் கலவரத்தில் கொள்முதற் பட்டியலைப் பறக்கவிட்டு கீரையில்லாமல் வீடு புக நேர்ந்தது அந்திம வாழ்வின் அகற்றவியலா துயரன்றி வேறென்ன.. வீடு புகுதலும் குகைபுகுதலும் பிரிக்கவியலா இரட்டைகள் தானே..
ராகவபிரியன்.

 





விரிந்து கிடந்த கல்லூரி மைதானமெங்கும்

கலாச்சார பார்வைக் கூழாங்கற்கள்
குத்திட்டு நிற்கையில்..
கைகோர்த்தபடி காதலியுடன்
காளிகோயில் நோக்கி நடக்காதே...
பார்
உடன் வரும் சாமுண்டியின் சூலத்திலிருந்து
சொட்டும்
சண்ட முண்டா தலைகளின் குருதி
கூழாங்கற்களைச் சிவப்பாக்குகிறது..
யாருமற்ற புதர் மண்டிய திடலெங்கும்
பார்வைப் புதர்கள் ஒளியூடுருவவியாலா
அடர்கொண்டு மண்டியிருக்கையில்
அவ்விடத்தில்
காதலியுடன் தனிமையில் உறவாடாதே...
உரத்த உறவுச் சப்த காந்தர்வ தாத் இசையொலி
சாதிவெறியனின் அரிவாளொன்றையோ இலையெனின்
கூட்டுப் பலாத்காரக் குழுஒன்றையோ
இழுத்து வந்து
கூழாங்கல்லில் சிவப்பைக் கொட்டிச் சென்றுவிடலாம்..
வறண்டு கிடக்கும் அகண்ட ஆறொன்றின்
மணற் தரையில் பார்வை எல்லைகளைத் தாண்டிய வெளிப் படுகையதில்
காதலியுடன் சாயம்கால
உரையாடல் நிகழ்த்துதல்
மாபெரும் மடத்தனம்.
என நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
அவ்விடப் புதைமணற் குழிகளில் தான்
புலைய மாடன் திரெளபதி அம்மன்
கால பைரவன் மகிஷி அட்டங்கம்மா
இன்னும் பல தெய்வீக சுடு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன..
இலக்கியங்களை நம்பி
எதிர்காலத் துணையின்
கைரேகைகளை வருடிக் கொண்டிராதே..
நிகழ் காலத்தில் இன்னமும்
சாதக ஆற்றங்கரைகளில் தான்
ஆடிப்பெருக்கில்
தாலி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
நிஜம் உணர்..
கொய்யப்பட்ட
சண்டா முண்டா தலைக் குருதிகளால்
ஈரமான கூழாங்கற்கள்
இன்னமும் காய்ந்து விடவில்லை...
கைகோர்த்து நடந்தாலும்
எதிர் கலாச்சார
தண்டவாளங்களின் மேல்
விழாமல் நடப்பதென்பது ஒருக்காலும் நடக்காது..
ராகவபிரியன்

 






வில்லியம் எஸ் பாரோஸ் எனும் புகழ் பெற்ற இலக்கிய மேதை தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தவர் என்பதால் இலக்கிய வரலாற்றில் தனதான இடத்தை இழந்து நிற்கிறார். முதல் மனைவி இவரை விவாகரத்து செய்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.

இவர் பதினெட்டு நாவல்கள் ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார்.
வாழ்வியலின் இந்திய கலாச்சார அறம் அமெரிக்கக் கலாச்சார வாழ்வியல் அறத்தின் நேரெதிர் முனை. இருந்தாலும் சக உயிரொன்றை கொலை செய்வதோ அல்லது தற்கொலைக்குத் தூண்டுவதோ உலகலாவிய மானுட அறம் மீறிய செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.
இவர் தனது இரண்டாவது மனைவி ஜோவான் வால்மரைக் கொலைசெய்து விடுகிறார். விசாரணையின் போது தான் மிதமிஞ்சிய போதையில் இருந்ததாகவும் துப்பாக்கியால் வில்லியம் டெல் ஸ்டெண்ட் எனும் பயிற்சி செய்கையில் துப்பாக்கி தவறி மேசையில் விழுந்து தானாகவே டிரிகர் உந்தப்பட்டு குண்டு பாய்ந்து வால்மர் இறந்துவிட்டதாகச் சொல்லி தப்பிக்கும் முயற்சி செய்திருக்கிறார். இருந்தாலும் இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வில்லியம் டெல் ஸ்டண்ட் என்பது இம்சை அரசன் படத்தில் வடிவேலு அம்பு விடும் பயிற்சி மேற்கொள்வார். அதாவது ஒரு மனிதனின் தலையில் பெரிய பொருள் முதல் ஆகச் சிறிய பொருள் வரை வைத்து அம்பெய்து குறிபார்த்து எய்யும் கலையில் நிபுணத்துவம் பெறும் செயல். அது போன்ற ஒரு செயலை தான் வால்மரிடம் செய்து காட்டியதாகவும் ஆனால் துப்பாக்கி கைதவறி மேசையில் விழுந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
அவரின் நேக்கட் லன்ஞ் எனும் நாவல் புகழ் பெற்ற ஒன்று. இருந்தாலும் உலக கிளாஸிக் வரிசையில் தன் இடத்தைத் தக்க வைக்கவியலாமல் கால ஓட்டத்தின் வேகத்தில் கிழிந்து கிடக்கிறது.
அந்த நாவலின் ஒரு சில வரிகளை உங்களுக்காக கீழே தருகிறேன்..
“The junk merchant doesn't sell his product to the consumer; he sells the consumer to his product. He does not improve and simplify his merchandise. He degrades and simplifies the client.”
― William S. Burroughs, Naked Lunch: The Restored Text
Naked Lunch Quotes Showing 1-30 of 121
“You were not there for the beginning. You will not be there for the end. Your knowledge of what is going on can only be superficial and relative.”
― William S. Burroughs, Naked Lunch: The Restored Text
[ நாவலின் இந்த வரிகள் சாத்தான் வேதம் ஓதுவதாக கிண்டல் செய்யப்பட்டதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.]
இந்தப் பதிவு யாரையும் தொடர்பு படுத்தி எழுதப்படவில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்..
காலத்தை வென்று நிற்கும் இலக்கியப் படைப்புகள் இறவாத் தன்மையைத் தக்க வைக்க வேண்டுமெனில் அதன் படைப்பாளனின் வாழ்வியல் அறமும் தேவைப்படுகிறதென்பதை வரலாறு சொல்கிறது..
வேறொன்றும் இல்லை.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
நன்றி
ராகவபிரியன்
வில்லியம் பாரோஸூம் அவரால் கொலைசெய்யப்பட்ட அவரின் மனைவி வால்மரும் மற்றும் அவர்களின் சின்னஞ்சிறிய சிசு பில் ஜூனியரும்..[ படம் இணையத்திலிருந்து சுட்டது]

 நீண்ட இலக்கிய இடைவெளிக்கு முன் இறுதியாக 1992 ல் பாபு. எஸ். ராஜகோபாலன் என்ற பெயரில் எனது கவிதை ஒன்று ஜனரஞ்சக இதழொன்றில் வெளியானது. பிறகான வாழ்வின் ஓய்வற்ற தொடர் சூறாவளி எழுத்துலகில் இருந்தும் இலக்கிய உலகில் இருந்தும் சற்றி தள்ளி ஆனால் ஒட்டியே அமைந்த இன்னொரு பாதையில் பயணிக்க வைத்து விட்டது. வாழ்வையே சூறாடி நிர்மூலம் ஆக்கிக்கொண்டிருந்த இரக்கமற்ற அப்புயல் வலுவிழந்தாலும் இன்னமும் முற்றிலும் அகன்று கரை கடந்துவிடவில்லை. ஆனாலும் 2014 முதல் மீண்டும் எழுத்துலகப் பாதையில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை முக நூலும் ஒரு சில இணைய இதழ்களும் சிற்றிதழ்களும் மாத வார இதழ்களும் வழங்கத் தொடங்கின.

1992லிருந்து 2014 வரையிலான இடைப்பட்ட இடைவெளியில் நடந்த சில நிகழ்வுகள் இவனால் கவனிக்கப்படவில்லை. இவனின் தவறுதான் அது. அதனால் ஒரு சில பதிவுகள் தவறாகவும் தேவையற்றும் எனது முக நூல் சுவரில் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டியதாகிப் போனது. அவைகளை இனம் கண்டு உண்மை தெரிந்து அல்லது கண்டு கொண்டு..ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்கிவிட்டேன்.
இலக்கியம் தனிப்பட்ட வாழ்வின் வெளிவராத பக்கங்களைப் பற்றிக் கவலை கொண்டேதே இல்லை. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வியலின் அறம் சார் வாழ்வு முறை இறவா இலக்கிய பங்களிப்பிற்கு மிகவும் இன்றியமையாதது.
இருப்பினும் தனிப்பட்ட வாழ்வியிலின் இருண்ட பக்கங்கள் பொதுவெளியில் வருகையில் ஒரு சில விவரமறியாமல் பதியப்படும் இலக்கியம் தொடர்பான பதிவுகள் தவறான புரிதலை வாசகர்களிடம் கொண்டு சேர்த்துவிடுவதை தவிர்த்தல் கடினெனமென உணர்ந்திருக்கிறேன்.
அதனால் தான் நேற்றைய எனது பதிவை நீக்கிவிட்டேன்.
நன்றி
ராகவபிரியன்

Sunday, September 7, 2025

 





உலகக் கவிகளின் துளித்தேன் உன் உள்ளங்கையில்

ஆலிவரையோ கிராண்டொ எனும் அர்ஜெண்டைனாவின் சர்ரியலிச கவியின் இரண்டு கவிதைகளை எதார்த்தமாய் படிக்க நேர்ந்தது.. சட் டென தூரத்து மரத்தில் இரண்டு கிளிகள் அலகுரசும் சப்தம் அலறலென செவியறைய பார்வை அவ்விடம் பதிவது போல கவிதை வரிகள் பார்வையைப் பிடுங்கிக்கொண்டன.
அவர் அர்ஜெண்டைனாவின் இருபதாம் நூற்றாண்டு அவண்ட் கெரேட் அதாவது முன்னோடிக் கவிகளில் ஒருவர். அறுபத்து ஏழு வயது வரை இந்தப் பெயர் கண்ணில் படாதது இனிப்புக் கடையில் திருனெல்வேலி அல்வா பொட்டலம் கண்ணில் பட்டாலும் மைசூர்பா வாங்குவது போன்று பார்வைச் சுவரின் அப்பால் கிடந்தது நெருடல் தந்தது..
அவரின் சர்ரியலிச முன்னோடி இயக்கம் பாப்லா நெரூடா போன்றோரை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை என லத்தீன் அமெரிக்க இலக்கிய வரலாறு பேசுவதைப் படித்ததும் வெட்க மாஸ்க்கை கண் வரை சிறிது மேலேற்ற வேண்டியதானது. கிராண்டொ மார்ட்டின் பியாரோ எனும் இலக்கிய விமர்சன இயக்கம் ஒன்றையும் அவர் நிறுவி இலக்கியத்திற்கான அழிக்கவியலா பங்களிப்பைச் செய்திருக்கிறார். கவனிக்கப்படாத கற்கோட்டைகள் காலத்தை வென்று வாழ்ந்தால் அது அதன் பின்னான தலைமுறைப் பார்வையாளர்களை ஈர்த்து கவனிக்க வைக்குமென்பது நிஜம் தானே.
அவரின் ஒரு ஸ்பானிய மொழிக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதை என்னளவில் தமிழில் தருகிறேன்.. இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ மொழிபெயர்ப்போ இல்லை...
பூக்கள் நிரம்பி வழியும்
அணைக் கதவங்களை
சட் டெனத்
திறந்து விடாதீர்கள்..
அவ்விடம்
குளித்துக் கொண்டிருக்கும்
பெண்கள் கொஞ்சமும்
உடுத்தியிருக்கவில்லை...
அணைக்கரையில் அவர்கள்
நடந்து வருகையில்
எதற்காகவும்
பின் தொடராதீர்கள்..
பூக்கள் நிரம்பியிருக்கும்
அவர்களின் உடையிலிருக்கும்
பட்டாம் பூச்சிகள் பறந்து
சென்றுவிடும்..
அவர்கள் உள்ளாடைகள் அணிந்திருக்கவில்லை..
உங்களுக்கான கூடுதல் தகவல்..
அந்தி மயங்கும் பொழுதில்
அருகிருக்கும் விடுதியின்
மாடக் கம்பிகளின் மேல்
குனிந்து பேசும்
அவர்களின் மார்புப் பூக்கள்
விகசித்துப் பூத்திருக்கும்..
அண்ணாந்து பார்த்தால்
உங்கள் கைகளில் அவை
உதிர்ந்து விழவும் வாய்ப்பிருக்கிறது..
மார்புப் பூக்கள் ஆககனத்தவை...
உங்கள் கைகளில் விழுந்தால்
வார்தைகளையும் பார்வையையும்
உள்ளிழுத்துக் கொண்டு
வேறெதையாவது
பரவசப்பட்டு வெளியேற்றிவிடுவீர்கள்..
பரவசம் தவிர்த்தல் பிரம்ம முரண்
அதனால் தான்...
பெண்களையும் பூக்களையும்
தேக்கித்தான் வைத்தாக வேண்டும்..
பிரித்துப் பார்ப்பது பாவச்செயல்தானோ...?
சொல்லுங்கள்...
ராகவபிரியன்

Friday, September 5, 2025

 




My Thanks to Museindia Magazine and to the great eminent literary critic, Smt. Vijaya Bhanu Kote,

ISSN: 0975-1815
YOUR SPACE
Poetry
TO THE HYPNOTIZED WRITER
Your creations are void and ridiculous and are not against the co-writer but thee..
And the rest of your life, your eyes will have no vision, but only blindness.
The writing world needs appreciation, O Naysayer
No future for thee.. I say...
Thy writing
Is cruel and broken the moral barriers? You, Naysayer
The stones you throw at an innocent human have no bones
Your writing of duotone colours prohibiting thy enthrone
and speaks volumes of thy bozos..
Thy ridiculous
Is the writing terror frightening your co-writer
By wrenching his forty-five-year-old nonstop fruit-yielding
creative trees
Your daring, unquestioned, miserable act will also
put you in the same coffin beside him. Remember...
Now speak, O Naysayer, with the gentle voice, the truth about your literary colleague and thee...
Regain your melted vision and see his stature with thy raised eyes
And speak about his chiseled writing on the walls of history
to tell the world that he is the tallest among this era's writers.
Will you...?
This poem is a scathing critique of a writer, referred to as the "Naysayer," who is accused of being cruel, destructive, and terrorizing towards their literary colleague. The language is rich and evocative, with vivid imagery and metaphors that convey the intensity of the emotions.
The poem's structure and rhythm are well-crafted, with a clear and consistent rhyme scheme and meter. The use of allusions to biblical language and style adds to the poem's sense of gravity and authority.
The central theme of the poem is the destructive power of negative criticism and the importance of acknowledging and appreciating the work of others. The speaker's condemnation of the Naysayer's actions is fierce and uncompromising, with the threat of consequences for their behavior.
The poem also touches on the theme of artistic integrity and the importance of respecting the creative work of others. The image of the "forty-five-year-old nonstop fruit-yielding creative trees" is a powerful metaphor for the writer's body of work, and the Naysayer's destruction of it is a symbol of the devastating impact of negative criticism.
The final lines of the poem, where the speaker asks the Naysayer to "Regain your melted vision and see his stature with thy raised eyes / And speak about his chiseled writing on the walls of history," suggest a glimmer of hope for redemption and a recognition of the colleague's greatness.
Overall, this poem is a powerful exploration of the complexities of creativity, criticism, and artistic integrity, and the ways in which our words and actions can have a profound impact on others.
Vijaya Bhanu Kote, Visakhapatnam, Sep 02, 2025
Author
RAGAVAPRIYAN THEJESWI RAJAGOPALAN ragavapriyansrajagopalan@gmail.com, TRICHIRAPPALLI
Aug 29, 2025

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...