Monday, December 22, 2025

 தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்...4

தன் வாழ்விடக் காட்டிலிருந்து தப்பிய புலி
நள்ளிரவில் மானுடக் குடியிருப்புகளில்
பசியின் வரலாற்றை உறுமியபடி
இரை தேடி அலைகிறது..
உடும்பின் இடுப்பில் நூலேணியைக் கட்டி
கோட்டை மதிலேறிக் குதிக்க வந்த
வரலாற்றுத் திருடன்
புலிக்குப் பயந்து பம்மத் தொடங்குகிறான்..
இரவின் நிசப்தத்தில் ஒலிக்கும்
விதவிதமான பல்குரல் ஒலிகளுக்குப்
பயப்படாத குடுகுடுப்பைக்காரன்
புலிப்பாதை மசானத்தில்
தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை
தோண்டத் தொடங்குகிறான்..
அவனின் குழிபறிக்கும்
மண்வெட்டிச் சப்தத்தில்
திராவிட வரலாறு ஒலிக்கத் தொடங்க
புலியும் உடும்பும் தலைச்சன் பிள்ளைப் பிணமும்
பயந்து நடுங்கத் தொடங்கின..
அந்த நிசப்த
வரலாற்று அருவப் பொழுதுகளில்
எரிந்த கட்சி எரியாத கட்சி
விரசப்பாட்டின் சிற்றிண்பம் துய்க்க
வாடிக்கையாய்ச் செல்லும்
முண்டாசு சுற்றிய பெருந்தலைகள்
பம்மிப்பம்மி பயமின்றி நடக்கும்
பின் நவீன பிந்தைய காலணி காலங்களில்
தங்கள் மனைவிகளை
ஒருபோதும்
உடன் அழைத்துச் செல்வதில்லை..
போகட்டும்..
மானற்ற காடுகளைத் துறந்த புலி
சேவல் கிடைத்தாலும் சமாதானமாகிவிடுவதை
மூடிய மின்சுற்று படக்கருவிகள்
இப்போது
பத்திரமாய் படம்பிடித்துக் காட்டுகின்றன..
கோட்டை மீதேறிக் குதித்த
வரலாற்றுத் திருடன்
பசிதாங்காமல்
குளிர் காய மூட்டிய தீயில்
உடும்பு மாமிசத்தை உருட்டிக்கொண்டே
தேசியத் தணலில் சூடில்லை என
புலம்பித் தீர்க்கிறான்..
நடுநிசியில் வீட்டு வாசலில் நின்ற
குடுகுடுப்பைக் காரன்
குறிசொல்வதை ஒளிந்திருந்து
கேட்டவனுக்கு பாஷை புரியவில்லை..
அந்தக் குடுகுடுப்பையன்
பேசுவது சம்ஸ்கிருதமென்று
அணைத்துக்கொண்டிருந்த
அன்றைய வைப்பாட்டியிடம்
அசடொழுகும் வீரமுடன் சொன்னவன்..
வாசலில் நிழலாடிய
முண்டாசு பிம்பத்தைக் கண்டு
துண்டைக் காணோம்
துணியைக் காணோமென
அம்மணமாய் ஓடத்துவங்குகிறான்..
ராகவபிரியன்



No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...