தமிழிலக்கிய ஆப்பரேஷன் செந்தூரம்..1
------------------------------------------------------
இந்த எளியவனுக்கு[ உங்கள் ராகவபிரியனுக்கு] இலக்கியமும் தெரியாது அரசியலும் தெரியாது என்று போகிற போக்கில் புழுதிவாரித் தூற்றிவிட்டுப் போகிறார்..
காடு வாவா என அழைக்கும் இவனின் காலமிது. எழுத்திலிருந்து விலகியிருந்த காலங்களின் பிரளயத்தீயின் வெப்பம் உணர்ந்தவன். அது மானுட சிதையின் சில மணி நேரத்தில் ஆறிவிடக்கூடிய பொய்யுடல் தின்னும் வெப்பத்தைவிட அளவு நீர்த்துவிடாத நீறு பூக்காத சூடுடையதென்பதை அனுபவத்தில் உணர்ந்தவன்..
இந்த எளியவனுக்கு எழுத்துலகில் எவருடனும் போட்டியில்லை. எவர்மீதும் இவனுக்கு எழுத்துப்பொறாமையோ புகழின் பொறாமையோ இல்லை. இவனுக்கு எந்த விருதோ பரிசோ ஏன் எழுத்தின் மீதான வருமானமோ தேவையே இல்லை... இவன் அதற்காக எழுதுபவனும் அல்ல..
போகட்டும்..இலக்கியம் பற்றிய நுனிப்புல் மேய்ச்சலைக் கொஞ்சம் அசையிடுவோம்..
பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக ஆன்சியன் ரிஜிம் ஆதரவாளர்கள் அன்றைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி சிம்மாசனத்தின் வலப்புறம் அமர்கிறார்கள்.. எங்கே..பிரஞ்ச்சின் பாராளுமன்றத்தில். எதிர்ப்பாளர்கள் இடது புறம் அமர்கிறார்கள். இது நடந்த ஆண்டு 1789..
அப்படித்தான் வலதுசாரி எனும் பெயரும் இடதுசாரி எனும் பெயரும் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் எழுதப்பட்டது..
அதற்கு முந்தைய உலகளாவிய இலக்கியங்கள் அனைத்தும் வலதுசாரி இலக்கியமென கூசாமல் தமிழ் இலக்கிய உலகம் புறந்தள்ளி குப்பையில் கொட்டிவிட்டது. இதைச் செய்தவர்கள் யார்..? தங்களை இடதுசாரி இலக்கிய அறிவுஜீவி அடையாள அட்டைகளை தாங்களே தயாரித்து அணிந்துகொண்டிருப்பவர்கள்தான்.
வலதுசாரி இலக்கிய அடையாளமாக தேசபக்தி எனும் கருத்தாக்கம் இப்போது பரவலாக புகுத்தப்படுகிறது. இந்திய தமிழ் இலக்கிய அறிவு போதாமையால் தேசபக்தியைப் பற்றிய எழுத்துக்கள் வலதுசாரி இலக்கிய அடையாளங்களானது ஆறுதலற்ற இலக்கியத் துயரம் தானே.. இதையும் மீறி தனி நபர் சுதந்திரம் சந்தைச் சுதந்திரம் எனும் கருத்தியல் திணிப்புகள் கூட இடதுசாரி தமிழ் இலக்கியத்திற்குள் எப்படிப் புகுந்ததென எவராலும் பதிவு செய்ய இயலவில்லை. தனி நபர் சுதந்திரமும் சந்தைச் சுதந்திரமும் வலதுசாரி வகைமையென்பது கூட அறியாதவர்கள் இந்த எளியவனை இலக்கிய அறிவற்றவன் என்றும் வெகுமக்களின் வாழ்க்கை முறை அறியாதவனென்றும் புழுதி பூசிய சொல்வீசி புளங்காகிதம் அடைகிறார்கள்.. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..
தமிழிலக்கிய இடதுசாரிகள் காட்டும் எழுத்துப்பிம்பச் சோற்றுப் பானையிலிருந்து ஒரு பருக்கைப் பதம் பார்க்க இப்போது உங்கள் விரல் நுனியில் வைக்கிறேன்..
ருஷ்ய கம்யூனிச இடது சாரி இலக்கியத்தைப் பற்றியும் தாஸ்தாவஸ்கி தர்ஜினேவ் மற்றும் டால்டாய் இவர்களைப் பற்றியும் நிறைய கட்டுக்கதைகளை தமிழ் இடதுசாரி அடையாள அட்டையுடன் நடமாடும் எழுத்தாளர்கள்.. கொட்டிப் பரப்பியிருக்கிறார்கள்.. இன்னமும் கொடிபிடித்து கூச்சலிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..பாவம் பரமபதத்திலிருக்கும் பிதாவும் மெதினாவரை ஓடிய வர்க்கத்தவர்களும் அவர்களை மன்னிக்கட்டும்..
இவான் சொனிஸோவிச்இன் ஒருநாள் வாழ்வு எனும் புத்தகத்தை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை.. என்பது இவர்களின் எழுத்திலிருந்தே புரிந்து கொள்வது சுலபம். அந்தப் புத்தகம் இப்போது அமேசானில் கூட மின்னணு நகல் வடிவில் கிடைக்கிறது...
நகல் எனும் வார்த்தை மேலைத்தேய இலக்கியங்களில் பகடிக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை..
இவான்சொனிஸோவிச் எனும் ஏழை தொழிலாளி எப்படி கம்யூனிச கொடுங்கோண்மையால் ஒவ்வொரு நாளையும் கழித்தார் என உலகிற்கு உரத்துச் சொல்கிறது அந்த உலக மஹா இலக்கியம். நம் திஜாரா வின் அம்மா வந்தாளைவிடவும் இன்னமும் நீண்ட நாட்கள் உலக இலக்கிய அரங்கில் அதன் ஆயுளை நீட்டித்துக்கொண்டுதான் இருக்கப்போகிறது. அது உலக கிளாசிக் தர வரிசையில் முதன்மையாக வைக்கப்படவேண்டிய அபூர்வ ஆக்கம். அந்தப் புத்தகத்தை எழுதிய அலெக்சாண்டர் சோலினியன் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டது ருஷ்ய இடது சாரி இலக்கியங்களால் இன்றும் புகழுப்படும் ருஷ்ய ஸ்டாலின் ஆட்சியில் தான்.
இன்றைய தமிழக ஸ்டாலின் ஆட்சியிலும் அரசாங்க ஊழியர்களும் ஏன் சுகாதாரத்துறையின் சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளிகளும் பெண்களும் சின்னஞ்சிறுமியர் உட்பட பெரும்பான்மை மக்களில் பலரும் அடக்குமுறைக்கு ஆளாவதை எழுத்தில் கொண்டு வருபவர்களை கூசாமல் வலதுசாரி எனச் சொல்லும் பொய் எழுத்துக்கள் தமிழ் இடதுசாரி இலக்கியமாகிப்போனது காலத்தின் துடைத்தெறிய வேண்டிய கறை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் சமகால இலக்கிய வாசகர்களிடம் இல்லை..
அலெக்சாண்டர் சோலினியன் 1970 ல் நோபல் பரிசு பெற்றவர். கூடுதல் தகவல்..
இந்திய இடதுசாரி இலக்கியம் தமிழ் பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் திராவிட கலாச்சாரமெனும் சொல்லாடல் புரட்டுப் புகுத்தலைச் செய்துகொண்டிருக்கிறது. தங்களுக்கு இணையானவர் இல்லையெனும் ஆணவமும் அதிகார துணையிருக்கும் துணிவும் இதன் காரணிகள். ஆகையினால் இவர்களை யார் இலக்கியம் பற்றிய கேள்வி எழுப்பப்போகிறார்கள்..?
தமிழ் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவர்களை இந்துத்துவா எனவும் வலதுசாரி எனவும் சங்கி எனவும் பகடி செய்வது இடதுசாரி இலக்கிய பின்நவீன போக்கின் புதுமையென பொய்சொல்லி இளைய தமிழ் இலக்கிய வாசகர்களை தவறாக வழி நடத்தும் இவர்கள் எந்த இலக்கியப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதே புதிராக இருக்கிறது..
சிறுபான்மை வாக்கு வங்கிக்காக மீண்டும் மன்னராட்சி முறையை புகுத்தும் திருட்டு திராவிட அரசியல் வெகுமக்களின் வாழ்வை வளமாக்கியிருக்கிறதா என இவர்களை யாரும் கேட்டுவிடக்கூடாதென்பதால் அட்டைக் கேடயம் ஏந்தி வாள் சுழற்றுகிறார்கள்..
பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையைப் பேசும் இலக்கியங்கள் எந்த வகைமையில் வந்தால் என்ன..மக்களின் வாழ்க்கையை அவர்களின் ஏழ்மையை அவர்களின் வியர்வையை டாஸ்மாக் மூலம் பிடுங்கித் தின்பனை, உன் தாத்தாவால் நாங்கள் தீண்டாமை அனுபவித்தோம் எனச் சொல்லி ஐந்தாம் தலைமுறை முற்படுத்தப்பட்ட ஏழைகளை இடஒதுக்கீடென ஏமாற்றுவதை.. அந்த அதிகார அக்கிரம சுரண்டல் சந்தையை இன்றைய அத்தகைய நிலைமையை எழுதுபவன் வெகுமக்கள் வாழ்க்கையைப் பற்றித்தானே எழுதுகிறான்.. இது எழுத்தில்லையா..இது இலக்கியம் இல்லையா.. கூச்சமின்றி ஆண்பெண் உறவை ஆடையின்றி எழுத்தில் கொண்டுவருவதுதான் தமிழிலக்கிய பின் நவீனமெனச் சொல்லும் உங்கள் பிதற்றலை உலகம் பார்த்துக்கொண்டு மெலிதாக கேலிப்புன்னகையை வீசிவிட்டுக் கடந்து செல்வது உங்களுக்குத்தெரியுமா..
முதலில் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தைப் பற்றிப் படியுங்கள்.. இந்திய தமிழ் கலாச்சார தொன்மை வாழ்வுமுறையை அதன் மேன்மைக் கலாச்சாரத்தை போற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.. போஸ்டர் ஒட்டியபடியே எழுபத்தைந்து வருடங்களாக உழைக்கும் கட்சியின் கடைமட்டத்தொண்டன் ஒரு நாள் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியும் எனும் நிஜ ஜனநாயகத்தை உங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் நடத்தும் உங்களின் விசுவாசத்திற்குகந்த கட்சிக்கட்டமைப்பிற்குள் புகுத்த இயலுமா எனப் பாருங்கள்..
பிறகு இந்த எளியவனின் எழுத்து வலதுசாரியா இடது சாரியா என விவாதத்தை நடத்தலாம்..
ராகவேந்திரர் படத்தில் ஆஸ்தான பண்டிதராக நடிக்கும் நடிகர்...பெயர் மறந்துவிட்டது... ரஜினியின் வாதங்களில் ஆழம் இல்லை என்பார்..
இதை வாசித்தவுடன் நீங்களும் அப்படித்தான் சொல்லப்போகிறீர்கள்..
தேவைப்பட்டால் இன்னும் ஆழமாக இலக்கியப் பேராழியின் அடியாழம் வரை உங்களை அழைத்துச் செல்லத் தயார்... மூச்சு முட்டி உங்கள் பொய் எழுத்துடல் மிதந்தால் இந்த எளியவன் பொறுப்பல்ல..
நன்றியும் அன்பும்..
No comments:
Post a Comment