Tuesday, December 2, 2025




 முன்பிருந்த என் ஊரில்

ஒவ்வொரு விடியலிலும்
நான் அருந்திய தேனீர் கடையில்
எனக்கான தேனீர்
ஆறிக்கொண்டிருக்கலாம்.
இப்போது பூட்டிக் கிடக்கும்
என் வீட்டின் ஊஞ்சலைச் சுற்றி
கூடு கட்ட குளவி ஒன்று
சுற்றிக்கொண்டிருக்கலாம்...
ஐம்பதாண்டுகளுக்கு முன்
நான் சுற்றிச் சுற்றி வந்த
என் காதலிக்கு
இன்று ஒன்றிரண்டு
பற்கள் காணாமல் போயிருக்கலாம்..
தினமும்
என் வீட்டு வாசலில்
வீசப்பட்ட செய்தித் தாள்கள்
இன்னமும்
பிரிக்கப்படாமலே கிடக்கையில்
அதனுள் பூஞ்சைகள்
பூத்துக் கிடக்கலாம்.
அன்று
நான் குளித்த தெளிந்த ஆறில்
தற்காலத்தின் நுரைகள்
கரையாமல் கலங்கிய நீரில்
மிதந்தோடிக் கொண்டிருக்கலாம்..
என்ன செய்ய..?
என் அன்றாடத்தின்
முகத்தில் ஓங்கிக் குத்திய
விதியின் முஷ்டித் தாக்குதலில்
குருடாகிப் போனதால்
உங்களிடம் இதையெல்லாம்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்..
சதா துலாவும் கைகளால்
என் எதிரே
நீங்கள் வைத்திருக்கும்
எதிர்காலத் தேனீர்க் குவளையை
நான் தட்டிச் சாய்த்துவிட நேரலாம்..
கேட்கக் கூச்சமாகத்தான் இருக்கிறது..
யாராவது கொஞ்சம்
என் கைகளில்
அதை எடுத்துத் தருகிறீர்களா...?
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...