பால் கணக்கை

காரைச் சுவற்றில்
கரியுபகரணத்தால்
சரியாகப் பதிவு செய்யும்
அந்த நாள்
அப்பாவழி பாட்டி சொன்னார்கள்...
அன்றாட விடியல் நேர
நடை பயின்றால்
நன்மை நம்மை
நாடி வருமென...
அன்றிலிருந்து விடியும் முன்பே
குந்தி கோலம் போடும்
கூந்தலில் துண்டு சுற்றிய யுவதிகள்....
பொமரேணியன் இழுக்க
தேங்கித் தேங்கி எத்தித் தத்தி நடக்கும்
அரைக் கால்சட்டை தாத்தாக்கள்..
செய்தித் தாள்கள் தூவப்படாத
இஞ்சித் தேனீர்கடைகள்....
நாற்கரச் சாலை
புழுதி போர்த்திய ஆலமரத்தடியில்
பிளாஸ்டராப்பாரிஸ்
பொம்மை செய்த களைப்பு நீங்க
போர்வை மூடி முயங்கி முணகும்
வட மானில கலைஞர் தம்பதிகள்...
அவர்கள் படைத்த
அற்புத கடவுள் மற்றும்
விலங்கு பொம்மைகள்..
எல்லாம் கடந்த பின்பும்
நடந்து கொண்டே இருப்பவன்
இன்னமும்
ஓய்வாய் அமர
சொந்தமாய் ஓரடி நிலமில்லை..
பாட்டி சொன்ன
நன்மை என்பதன்
நற்பொருள்தான் என்ன?
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog