முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இங்கே முதலில் பதிவிட்டுவிடுகிறேன்.. பல் துலக்குகிறோமோ இல்லையோ எக்ஸ்ட்ரா லார்ஜ் என அச்சிடப்பட்ட பற்பசையைத்தானே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் இப்பதிவு எக்ஸ்ட்ராவாக எதையும் கொண்டிருக்கவில்லை.. மரணமற்ற நிலை என்பதைத் தவிர. மரணமற்ற வாழ்வு எக்ஸ்ட்ரா தானே.. எட்செட்ரா இல்லையே.. போகட்டும்..
கீழே உள்ள பத்தி.. வேதங்களுக்கான ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யத்திலிருக்கும் ஒரு சில வரிகளைக் கொண்டது.அதில் ஆச்சாரியர் இப்படிச் சொல்கிறார்..
"இது போலவே மானுட வாழ்வும் அதன் தொடக்கத்தை உணராதது. வேதங்களைப் போல தொடக்கங்கள் அற்றதெனவும் அதைக் கூறலாம்.. மானுடம் மரணமற்ற வாழ்வையும் கொண்டுள்ளதெனின் அதுதான் நிஜம். ஆனால் எல்லா மானுடங்களும் மரணத்தை வெல்லவியலுமா எனில் இல்லையென்றே கூறுதல் தகும். அப்படியான மரணத்தை வென்று மரணமற்று வாழும் புகழ் வாழ்வு இன்னொரு பிறப்பற்றிருக்கிறது. எனினும் மீள்பிறப்புள்ள வேறொரு மானுடம் இந்த மரணமற்ற நிலையுடைய மானுடத்தை அனுபவித்துணர்தல் கடினம்..
இதைத் தான் வள்ளுவம் தோன்றிற் புகழொடு தோன்றுக எனப் பேசியிருக்க வேண்டும்..
அழியாப்புகழ் மானுடத்தின் மறுபிறப்பின்மையை காட்டுகிறதென ஆச்சாரியார் சொல்வதில் உள்ள உண்மைத் தன்மை பொட்டில் அறைகிறது.. அட்டகாசமான அந்த அழியாப் புகழ் ஆச்சாரியரின் மரணம் வென்று இன்றும் பேசும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தை அப்படியே தருகிறேன்..
"ததா ப்ரக்ருதோப்யனாதிதா ஸ்ருதிபி:ப்ரதிபாதிதா
அஜாமேகாம் லோஹிதஸூக்லக்ருஷ்ணாம் வஹ்நீம்
ப்ராஜாம் ஜனயந்தீம் ஸரூபாம் அஜோ ஜ்யேகோ
ஜூஷமாணே நுஸேதே ஜஹாத்யேனாம் புக்தபோகாம்
ஜோந்ய:"
இந்தப் பதிவின் அவசியம் என்ன என நீங்கள் முணுமுணுப்பது காஞ்சிவரை கேட்கிறது.. சொல்கிறேன்..
காஞ்சி மாநகரம் இவனுக்கு புதிது.. இம்மாநகர திசைகள் கூட இன்னமும் இவனுக்குப் புரிபடவில்லை. இம்மா நகர பாதைகளில் இவனின் பாத அணியின் சப்தம் இவனுக்கே புதிதாகக் கேட்கும். காஞ்சித் தெருக்களின் பள்ளங்கள் அனைத்தையும் இவன் இன்னமும் தாண்டியிருக்கவில்லை. இங்கே இவனின் தற்காலிக தங்குமிடத்தின் ஒரு சிலரைத் தவிர மற்றனைவரின் முகமும் இவனுக்குப் பரிச்சயமற்ற புத்தம் புதிது..
இப்படியான சூழலில் ஒரு சிறிய தேவை வேண்டி இணையத்திலிருந்து ஒரு கைபேசி எண்ணைத் தேடி எடுக்கிறான். அவரின் பெயர் கிஷோர் என திரையில் ஓடுகிறது.. மீனற்ற குளத்தில் தூண்டில் வீசுபவனின் முகபாவத்தோடு எதிர்முனை கிஷோரின் குரலுக்காக இவன் காத்திருக்கிறான்.
இவனின் தேவைக்கான சேவையைத் தரும் அறிமுகமற்ற கிஷோர் கருணையுடன் இவனின் தேவையைக் கேட்டறிகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அவிவிடத்திற்கான வழியையும் அவரே விளக்கி உடனே வந்து சந்திக்குமாறு சொல்கிறார். பாலைப் புயலில் தடம் தொலைத்த நாடோடியைப் போல இவன் அவரைத் தேடி இருசக்கர வாகனத்தில் அவர் சுட்டிய இடம் அடைகிறான்.
முன்பின் பார்த்திராத அவர் இவனை தூரத்திலிருந்தே கையசைத்து அருகில் வரச் சொல்கிறார். எதிர்பாராமல் சட் டென கடந்து செல்லும் தொடர்வண்டியை நோக்கிய குழந்தையின் கையசைப்பைக் கண்ட தொடர்வண்டியின் மகிழ்வு இவனிடம் தாவிக்கொள்கிறது. குழந்தையின் கையசைப்பு வண்டியறியாது. ஆனால் அவரின் கையசைப்பு இவனுக்குத் தான் என்பது புரியவே இவனுக்கு நெடு நேரம் பிடித்தது..
அவரின் அருகில் சென்று..
"தம்பி [அவர் ஒரு சென் இசட் இளைஞர். ] என்னை உங்களுக்கு எப்படி அடையாளம் காண முடிந்தது.."
"சார் நீங்கள் ஒரு வ்ரைட்டர். உங்கள் எழுத்துக்களை படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர்...சரிதானே"
அது மட்டுமல்ல இவனின் பிரமிப்பு அடங்குவதற்குள் இவனது ராசி நட்சத்திரம் நடப்பு திசை பிறப்பில் செல்லு போக மீந்த தசா வருடங்கள் [ இவைகளை மட்டும் தான் சொல்லவில்லை] சொல்லி வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். இனி எவரும் இவனை உச்சியிலிருந்து தள்ளிவிட வேண்டியதில்லை. புகழின் உச்சியை இவனின் கண்களுக்குக் காட்டிவிட்டார்அத முகமறியா வாசகர். இனி தலை கனத்து இவன் தன்னைத் தானே தள்ளிக்கொண்டு கீழே விழுந்து மரணமுற்றாலும் ஆச்சரியப்படத் தேவையே இல்லை..
மரணமற்ற வாழ்வின் தொடக்கத்தை இவன் கண்களுக்கு அரங்கன் காட்டிவிட்டான். ஆச்சாரியன் சொல்லிச் சென்ற இன்னொரு பிறப்பற்ற நிலையைப் இவன் புரிந்து கொண்ட தருணம் அது.. சரி தானே நட்புகளே..
அதனால் தான் ஆச்சாரியன் மற்றொரு மானுடம் மரணமற்ற இன்னொரு மானுட நிலையைப் புரிந்துகொள்வதில்லை என்று சொல்கிறார் போலும்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்..
No comments:
Post a Comment