நாற்கர சாலையின்


உடலெங்கும் வாகனங்களின்

இயங்கு இரத்தம் வழிந்த
தடயங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன..
அதிலிருந்து தீராத முடை நாற்றம்
வீசும் தனித்த பகுதியின்
தேனீர்க் கடையில்
சந்திக்கிறார்கள்
மேய்ப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும்
அடர்முடி கவியும்
எதற்கும் அஞ்சாத
முடியிழந்த பேராசிரியரும்..
தேனீர்க் கோப்பைக்குள்ளான
பிரபஞ்சத்தில் மிதக்கும் நுரைகளில்
உண்மையைத் தேடியலைந்தன
பேராசிரியரின் கண்கள்..
அக்கொடும் சூழலியப் போதில்
அடர்முடிப் பைத்தியக் கவி
கோப்பைக்குள் ஆள்காட்டி
விரல் நுழைத்து
ஒவ்வொரு சொட்டாய்
நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தான்..
திடீரென கத்தத் தொடங்கினான்...
இந்த சாலை உண்மை..
மரணம் உண்மை..
குறிகள் உண்மை...
ஆனால் வாழ்வு பொய்
கவிதை பொய்
அசல் பொய் ஆனால் நகல் உண்மை..
முடை நாற்றத்தை வாரியிறைத்தபடி
அக்காலத்தின் துளியொன்றின் கடலில்
சட் டென ஒரு லாரி கடந்து செல்கிறது...
அதன் சக்கரத்தினடியில்
சிக்குண்ட காவியங்கள்
பிய்த்தெறியப் பட...
மந்தையிலிருந்து பிரிந்த
இனத் தலைமையை எதிர்த்து
குடும்ப மன்னராட்சி
தத்துவத்தைப் போதிக்கும்
மகத்தான மார்க்ஸிய காவியப் பக்கத்தின்
கிழிந்த தாளின் துகளொன்று
சிந்திய தேனீர்ச் சொட்டுக்களில்
சிக்கிக் கொள்கிறது..
அதைப் பார்த்தபடியே
தேனீர் உறிஞ்சத் தொடங்கினார்
பேராசிரியர்...
வெட்டப்படுவதற்கு முன்னான
தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி..
அப்போதில் அப்பைத்தியக் கவி
நீங்கள் வரலாற்றைப் போதிக்கிறீர்கள்..
நானோ...விபத்துக்களை கவிதையாக்குகிறேன்..
ஆண் பெண் அனைத்தும் காதல் விபத்தின்
எச்சங்களில் மலர்ந்த சாமந்திகள்..
அதுவறியாத நீங்கள்
போதிச் சத்துவனை
போதிக்கத் தவறிவிட்டீர்கள்..
என்னாலோ
இங்கே சொட்டிய
தேனீர் சொட்டுக்களில் கூட
காக்கரட்டான் முல்லைகளை
மலர வைக்கவியலும்...
முட்டாளே புரிந்துகொள்...
எனக் கத்தினான்...
கோடிக்கனக்கான சக்கரங்கள்
சாலையைக் கடந்து கொண்டிருக்கின்றன..
ஆதவனும் நிலவனும்
டேக் டைவர்ஸன் எனுமிடத்தில்
வழிமாறி பயணிக்கத் தெரியாமல்
திகைத்துக்கொண்டிருந்தனர்..
இப்பிரபஞ்சத்தில்
இன்னமும்
அந்தத் தேனீர் கார்னர்..
அங்கேயேதான் இருக்கிறது..
நாற்கர சாலையோ
நீண்டு கொண்டே போகிறது..
யாரோ ஒரு முதிய
மன்னர் பரம்பரையின் மகன்
மந்தைகளை சாலையைக் கடக்கவைக்க
பே..பே...என கத்தியபடி
கோளொன்றைச் சுழற்றிக்கொண்டு
இங்குமங்கும் ஓடிக்கொண்டே
ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறான்...
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog