என் மரணத்தின் நாளில்

தூறிய சாரல் மழையில்
நனைந்த என் புத்தகங்களை
சிதையில் அடுக்குகிறீர்கள்..
செய்யுங்கள்..
அதற்கு முன் சிலவற்றைச்
சொல்லிவிடுகிறேன்..
என் மரணத்தின் பின்னான
பூத உடலின் முன்
எவரும் என் கவிதைகளை
வாசிக்கக் கூடாது..
என் உடல்மீது
காவீர் நீர் ஊற்ற
நீங்கள் லாக்கரில் இருந்து
எடுத்து வந்த
என் தங்கக் குடத்தை
என்னுடன் சேர்த்துக்
கொளுத்திவிடவேண்டும்..
என் அஸ்தியை
கரைக்கப்போகும்
கடற்கரை வரையான
உங்கள் பயணத்திற்கு
என் மகிழுந்துவை
பயன்படுத்தக்கூடாது..
எனக்கு இதுவரை
கொடுக்கப்படாத
ராயல்டியை கேட்டுவாங்கி
அதில் என்
நீத்தார் நினைவு நாளைக்
கொண்டாடக்கூடாது..
என் முக நூல் கணக்கில்
எவரும்
அஞ்சலிக் கவிதைகளை
பதிவிடக்கூடாது..
என் சிதையில் வைக்க
நீங்கள் வாங்கி வரப்போகும்
சந்தனக் கட்டை
ஒரு முறை
அசல் தானா என
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்..
நகல் சந்தனக் கட்டைகளை
சிதையில் சேர்த்து
எனக்காக கண்ணீர் சிந்தினால்
என் கட்டை வேகாது..
புரிந்து கொள்ளுங்கள்..
ராகவபிரியன்



Comments

Popular posts from this blog