தேங்காய்ப்பூ பட்ஜெட் துண்டு.. சிறுகதை
யாழினி மாமி விடியற்காலையில் எழுந்து சுப்ரபாதத்தை ஒலிக்க விட்டாள்.. சுப்பையரின் விடியற்காலை கனவில் எப்போதும் நயன் தாராதான் வருவாள்.. ஆனால் இப்போது விக்னேஷ் சிவனுடன் நயந்தாராவிற்கு திருமணம் ஆகிவிட்டதால் பூஜா ஹெக்டே வருவதற்காக தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்... பட் சட் டென நிர்மலா சீத்தாரமன் கையில் அசோகச் சிங்க முத்திரையுடன் கூடிய சிகப்பு பைலுடன் இவர் வீட்டு டிவியின் எதிரில் அமர்வதை கனவில் அதிர்ச்சியுடன் பார்த்து அருகில் தடவிப் பார்த்தார்..யாழினிக்குப் பதில் அவரின் பர்ஸ் கையில் பட்டது..
விருட்டென எழுந்து உட்கார்ந்தார். கயிற்றுக் கட்டிலில் ஏதோ ஒரு பிரி அறுந்த சப்தம் கேட்டது.. கண்களை கசக்கிக் கொண்டு உள்ளங்கையைப் பார்த்தார்..
கண்களைத் திறந்தார்.. பூஜா ஹெக்டேவோ இல்லை சமந்தாவோ சாயலில் மனைவி ஈரத்தலையில் தேங்காய்ப்பூ துண்டு சுற்றியபடி கையில் காப்பியோடு எழுப்பினால் எப்படியிருக்குமென நினைத்தார்.
ம்ம்... அதற்கெல்லாம் போன ஜென்மத்தில் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென நினைத்த அடுத்த நொடியே பர்ஸை எடுத்து திறந்து பார்த்தார்.
நேற்று முப்பத்து ஒன்றாம் தேதியானதால் எந்த ஏடிஎம்மிலும் கேஷ் எடுக்க முடியவில்லை.. கல்லூரியில் பங்கஷன்ஸ் ஆப் மணி பற்றி படித்திருந்ததால் கேஷ் சர்குலேஷன் நசுக்கப்படத்தான் வேண்டுமென ஒரு முறை யாழினியிடம் சொல்லிவிட்டு கரண்டி அடி வாங்கியது நினைவிற்கு வந்தது..
நான்கு ஏடிஎம் எறி இறங்கி க்யூவில் நின்று நாளெல்லாம் அலைந்து எடுத்து வந்திருந்த ஐந்து ஐனூறு ரூபாய் தாள்கள் தான் இந்த விடியலிலேயே காணாமல் போயிருந்தது..
கமலா குச சூசக குங்கமதோ என சுப்ரபாதத்திற்குப் பின்னான ப்ரபத்தியை எம் எஸ்..பாடத் தொடங்கினார். மனம் பூஜா குச சூசக குங்குமதோ என தானாகவே பாடத்தொடங்கியது..
பூஜா ஹெக்டேயோ இல்லை நயந்தாராவோ கனவில் வந்திருந்தால் கூட இந்த 2500 ரூபாய் விலை பரவாயில்லை.. ஆனால் வந்தது நிர்மலா அதுவும் சிகப்பு பைலுடன்.. சில நேரம் கனவுகள் உண்மையாகித் தொலைக்கிறது...என நினைத்த அந்த நொடியில் தான் கட்டில் கயிறு அறுந்துத் தொலைத்து..
இந்த அபசகுண.. இருண்டு இன்னும் விடியாத போதில் தான் யாழினி...
ஏன்னா.. சுப்ரபாதம் போட்டா நீங்க ஏன் திடுக்குனு எழுந்துக்கறேள்.. பாருங்கோ கட்டில் கயிறு அறுந்து தொங்கறது.. கட்டில்ல சாய்ஞ்சுண்டு பட்ஜெட் கேக்கலாம்னு டிவிய ஆன் பண்ணினா..இப்படி பண்றேளே.. வர வர ஒங்க அராஜகம் எல்லை மீறி போறது ஆமாம்..
அது கெடக்கறதுடி.. பர்ஸ்லேர்ன்து பணம் எடுத்தயா...
இருங்கோ நிர்மலா பட்ஜெட் வாசிச்சப்பறம் நம்மாத்து பட்ஜெட் துண்டு விழாம இருக்கானு பார்க்கனும்..
ஏண்டி என்னோட பர்ஸ்லேர்ந்து பணம் எடுத்தயான்னு கேட்டா யூனியன் பட்ஜெட் பத்தி பேசற...
நீங்க மட்டு கமலா குச சூசகங்கறத்துக்குப் பதிலா பூஜாகுச சூசகன்னு என்னமோ சூசகமா நேக்கு உணர்த்தறேளே... நேக்கு புரியாதா என்ன...
சொல்லிவிட்டு காலை ஆறுமணிக்கெல்லாம் டிவியின் முன் அமர்ந்துவிட்டாள்..
ம்...எப்போது நிர்மலா பட்ஜெட் முடித்து யாழினி எழுந்து வந்து காப்பி போடப்போகிறாளோ...
நொந்தபடியே எழுந்து அடுப்பில் பாத்திரத்தை வைத்தவர் ப்ரிட்ஜ்ஜைத்திறந்து பால் பாக்கெட்டைத் தேடினார்...
அண்ணா.. பட்ஜெட் முடிஞ்சா தான் இன்னிக்கு நம்ம ஆத்து பட்ஜெட் ஒத்துவரதான்னு பார்க்கனும். அப்பறமாதான் காப்பி சாப்பாடெல்லாம்.. புரியறதோ... எனச் சொல்லியபடியே அறுந்து கிடந்த கயிற்றின் நடுவில் விழுந்த இடைவெளியில் ஒரு துண்டை விரித்து ஏறி அதில் படுத்துக்கொண்டாள்..
குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழப்போவதை யாழினி போல் உணர்த்தக்கூடியவர் இந்த உலகிலேயே இல்லை என்பதை நினைத்து பெருமிதத்துடன் குளியலறை நோக்கி நடக்கத் தொடங்கினார் சுப்பையர்...
ஆங்கிலேயன் தினித்த காப்பி பழக்கத்தை இந்த வீட்டிலிருந்து துரத்த யாழினியாலும் நாட்டிலிருந்தே துரத்த நிர்மலாவாலும் தான் முடியும் என்று நினைத்தபடியே ஷவரைத் திறந்தார்...
துண்டு எடுத்துவர மறந்து விட்டது புரிந்தது..
அந்தத் துண்டின் மேல் தான் யாழினி இப்போது படுத்துக்கொண்டிருந்தாள்..
பட்ஜெட்டிலும் கட்டிலில் இருந்தும் துண்டு விழுந்தால் தான் தலை துவட்ட முடியும் எனும் நிஜம் புரிய...
கமலா குச சூசக குங்குமதோ...என உரத்து பாடத் தொடங்கினார்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment