காலையிலிருந்தே சுணக்கமெனும் ஆக்டோபஸ் இவனைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்தது.. அது தன் அத்துனை கரங்களையும் வளைத்து இவனை சாய்வு நாற்காலியில் சாய்த்துவிட்டு சுற்றிக்கொண்டிருந்தது..
இன்று சிவராத்திரி மற்றுமல்ல இந்தியா பாக்கிஸ்த்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் கூட.. காக்கையின் கூட்டில் தந்திரமாய் வளர்ந்து கூட்டையே கூகையின் கூடாக மாற்ற நினைத்து அதனால் துரத்தப்பட்ட கூகையையுடனான போட்டி நாள் இது.. இனி சாய்ந்திருத்தல் என்பது சவத்தின் இயல்பென உள் மனம் சொல்லத் தொடங்கியது..
சாய்ந்திருத்தல் அரங்கனின் வரம்.. ஓயாது இரவெல்லாம் விபூதி பூசி அலைவது சிவனின் விதி..இன்றோ சிவனின் எழுச்சி இரவான சிவராத்திரி.. காஞ்சியின் அத்துனை கோவில்களிலும் பக்தியின் எழுச்சி தூண்டப்பட்ட நாத்திக இருளகற்றும் புனிதப் பணியின் புண்ணியத் திருவிழா.. அதனால் பல்லாயிரக்கணக்கான மானுடக் கூட்டம் வீதிகளிலும் கோவில்களிலும் பக்தி மேலிட நெற்றியெல்லாம் விபூதி பூசிக்கொண்டு கூடிக்கொண்டே இருக்கிறது..
சில நாட்களாக வெஸ்ட் இண்டீஸின் இந்த உலகக் கோப்பையின் எழுச்சிப் போட்டிகள் இவனை சாய்வு நாற்காலியிலிருந்து மீளெழவியலாமல் செய்துகொண்டிருந்தது.. இன்றும் வெஸ்ட் இண்டீஸ் போட்டி இருப்பதால் கையைக்கூட தலையின் பின்புறம் வைக்காமல் முற்றுமாய் சாய்ந்து கொண்டான் இவன்.. சாய்தல் இனிது.. சாய்ந்து காணும் வெஸ்ட் இண்டீஸின் வெற்றி சுகம்..
கண்கள் தானாக மூடிக்கொள்ள சட் டென மஹாலெக்ஷ்மியின் அன்னையும் பிருகு முனிவனின் மனைவியுமான கியாதியின் தலையைத் துண்டிக்க விருட்டென எழுந்த அரங்கனின் எழுச்சி நினைவில் வந்தது..அன்றுபிருகுமுனி அடாத சாபமிட்டான். அச்சாபம் பீடிக்க அரங்கன் காஞ்சியின் வீதிகளில் அலைந்தான். அரங்கனின் திருவடி பட்ட.... அரங்கன் பூசித்த அரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரனின் கோவில் சட் டென இதய ஆழியின் அத்துனை நீரையும் உறிஞ்சி எடுத்தது.. அங்கே சுற்றிக் கொண்டிருந்த சுணக்க ஆக்டோபஸ்ஸின் கரங்கள் வலுவிழந்து ஒரு நொடி இவனை விடுவித்தது..
துள்ளி எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளிர் திரையை இருளாக்கினான். ஒளியைத் தடுத்தல் இயலும்..இருளைத் தடுத்தல் கடினம்..காக்கைகள் கூட்டமாய்ச் சுற்றும்...கூகைகள் இருளில் தனித்தே அலையும்.. இது சிவனின் இருளகற்றும் இரவு.. சிவராத்திரி.. கூகைகள் கூட்டைவிட்டு வெளியே வர யோசிக்கும் ஒரே ஒரு இரவு இது.. பாக்கிஸ்த்தான் மைதானத்திற்கே வர தயங்கப்போகும் இரவும் கூட..
இன்றைய கச்சி ஏகம்பனின் சிவ இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் பக்தி கலாச்சாரத்தை அதன் மீளெழுச்சியை உயிர்பிக்க அரங்கேறப் போகிறது. பாக்கிஸ்த்தானும் அதன் பயங்கரவாதமும் தோற்றோடப்போகிறது.
இன்று இந்தக் கலாச்சார நிகழ்வுகளில் இவனின் பெயர்த்தியையும் பங்களிக்க அரங்கன் வாய்ப்பளித்திருக்கிறான். பெயர்த்தியோ அதற்கான வேடமிடும் கூடத்தில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..
சற்று முன் அதாவது ஐந்து மணியளவில் பெயர்த்தியை அழைத்துவர பணிக்கப்படுகிறான் இந்த போட்டி சுகம் காண சாய்ந்திருப்பவன்.. சாயங்காலங்களில் எந்தப் போட்டிக்காகவும் சாய்ந்திருத்தல் கூடாதென நம் கலாச்சார மரபுகள் போதிப்பதால் மட்டுமல்ல ஆக்டோபஸ் கரங்கள் வலுவிழந்ததாலும் கூட விருட்டென எழுகிறான் இவன்.. எழுந்துதான் ஆகவேண்டும் இவனுக்கு. வேறெந்த வாய்ப்பும் இல்லை இப்போது.
உடன் கோபமுற்ற இவன் ஆன்மீகமா தேசபக்தியா எனும் இரு கேள்விகளை இவன் முன் வைக்கப்பட்ட சர்க்கரையில்லா பாலில்லா தேனீர் கோப்பையிடம் வைக்கிறான்.. வேடமிடம் கூடம் ஹரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரனின் கோவிலருகில் இருக்கிறதென அறியத் தருகிறார்கள். பெயர்த்தியை அழைத்து வந்துவிட்டு தேனீர் அருந்தலாம் எனும் கட்டளையையும் வீசுகிறார்கள்.. பிஞ்சில் காக்கையினதும் கூகையினதுமான அடையாள வேற்றுமையை எவர் அறிவார்கள்..
அரங்கன் கியாதியின் தலையைத் துண்டிக்க ஆதிசேடச் சாய்விலிருந்து எழுந்த நிகழ்வு இவனையும் எழ வைக்கிறது... விருட்டென எழுகிறான்..சாய்ந்திருப்பதின் சுகம் அறியாதவர்களின் அறியாமையை அரங்கன் மன்னிக்கட்டும் என மனம் சொன்னது..
இப்போது மணி ஆறறையைத் தாண்டி விட்டது... பெயர்த்தியின் நடன அலங்காரம் நிறைவு பெற அழைத்து வந்தாகிவிட்டது.. வீட்டிலுள்ள அனைவரும் சிவராத்திரியின் சிவபக்தியுடன் இந்த ஆன்மீக மண்ணின் கலாச்சார மீளெழுதலைக் காணச் சென்றாகிவிட்டது..
இச்சவத்திற்காக அப்போது வைக்கப்பட்ட தேனீர்த் தண்ணீரிலிருந்து நீராவி கூட எழுந்தடங்கி காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இப்போதின் சாய்வு நாற்காலி இவனின் சாய்வை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள...இதோ தொலைக்காட்சிப் பெட்டியை உசுப்புகிறான்..
இனி இந்திய வீரர்கள் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டிலும் ஒவ்வொரு ரன்னிலும் நம் தேசீயக் கொடி தேசபக்தியை இந்த மண்ணின் ஆன்மீக எழுச்சியை இந்த இரவில் வலுவுடன் உயர்த்தி பறக்கச் செய்யட்டும்..
அரங்கனுக்கு ஹரிசாப பயம் தீர்ந்துவிட்டது..
தேனீர் ஆறி பச்சைத் தண்ணீராகிவிட்டது..
ரவி சாஸ்த்திரி மைக்குடன் மைதானத்தில் வந்தாகிவிட்டது..
நம் கலாச்சார எதிரிகளின் சாய்வின் நேரமும் தொடங்கிவிட்டது..
தேசபக்தி இனி உறங்கப் போவதில்லை..
இவனுக்கான தேனீரும் இனி ஆறப்போவதில்லை..
ஜெய் ஹிந்த்.. ஹர ஹர மஹாதேவா..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment