எழுதவியலா நீண்ட இடைவெளிகளில் அள்ளிக் குவித்திருக்கும் சோர்வு அளவுகள் அற்றது. எதையாவது எழுதியாக வேண்டுமென்ற உந்துதல் காலைத் தேனீர் சுவைக்கையில் தொடங்கி இரவு பிய்ந்த பாயின் முதுகு குத்துதலில் முடிந்துவிடுகிறதா எனில் இல்லை..தூக்கத்திலும் கூட அது தூங்காமல் அருகிலேயே அமர்ந்து திடீரென ஒரு அறையை ஐம்பது நிமிட இடைவெளியில் கொடுத்துக்கொண்டே இருக்கிறது..
இன்று மகளிர் தினமென்பதால் போராடி வென்ற ஒரு மகளிரைப் பற்றி எழுதி முக நூலில் பதிவிட்டு விடுவதென காலைத் தேனீர் ஒரு சொட்டை தரையில் சொட்டி அதன் மீது சத்தியம் செய்தாகிவிட்டது. ஆனால் யாரைப் பற்றி எழுதுவதெனும் யோசனை குமிழ் காயாமல் உடையாமல் மனமெங்கும் சுற்றிக்கொண்டே இருந்தது. எவ்வளவு ஊதி ஊதி பார்த்தும் யோசனைக் குமிழ் உடையாமல் உருண்டு உருண்டு திரிஷாவிடமே வந்து நின்றது..
ருஷ்ய புரட்சியின் க்ளாரா ஜெட்கின் தொடங்கி பிரேம லதா வரை மகளிர் தின கொண்டாட்டங்களுக்குக் காரணமான வெற்றி பெற்ற பெண்கள் வரிசையை மனதில் நிற்க வைத்தாகிவிட்டது..
முதலில் இனவெறியை எதிர்த்து போராடிய ரோசா பார்க்ஸ்.. அடுத்து இஸ்ரேலின் கோல்டா மேயர் இவர்கள் மனதில் வருகிறார்கள்..இவர்கள் என்பதுகளில் மிக அதிகமாக புகழ்பெற்றவர்கள்.. இவர்களை வரிசையில் நிறுத்தினால் அந்த உடையா வண்னக் குமிழ் மஞ்சுளா மற்றும் ஸ்ரீதேவியின் மேல் பறக்கத் தொடங்குகிறது..
பெனாசிர் புட்டோ மற்றும் மலாலா திடீரென முக்காடை இழுத்து முகத்தை மூடியபடி வந்து நிற்க.. அமலா வலையோசை கலகலவென என குமிழைத் துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்..
ஒரு வழியாய் அதிவேக காற்றைப் பாய்ச்ச சரியானவர்களான தமிழக முத்துலெட்சுமி ரெட்டி முதல் ஜெயலலிதா வரை நிற்க வைக்கப் பிரயத்தனப்பட்ட நேரத்தில் குமிழ் சட் டென வானில் உயர்கிறது..
மெல்ல ஆடி அசைந்து திரிஷாவின் நெற்றியில் பட்டு உடைந்துவிட்டதால் தேனீர் மீதான சத்தியத்தைக் காப்பாற்ற இந்தப் பதிவை ஊதவேண்டியதாகிவிட்டது...
ராகவபிரியன்
க்ளாரா ஜெட்கின்னும் லாரா லக்ஷம்பெர்க்கும்...1910 முதல் மகளிர் தின மாநாட்டில்..
No comments:
Post a Comment