இன்றைய தமிழிலக்கிய பிராமணீய அவலங்கள் புதைக்கப்பட்டவை. புதையுண்ட எதன்மீதும் நியாயமான பார்வைகள் செலுத்தப்படுவதில்லை. இறந்த தலைச்சன் பிள்ளைக் குழந்தையின் பிணத்தின் மீதான மாந்த்ரீக பார்வையும் தமிழிலக்கிய இயங்கியல் பார்வையும் புதையுண்ட பிராமணீயத்தை தோண்டியெடுத்து மை தயாரிக்கவியலுமா எனப் பார்த்துக்கொண்டிருக்கிறது..
பிராமணர்கள் மீதான கி,மு ஒன்றாம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை ஊனக் கண்களின் குருட்டுப் பார்வை. அதை மார்க்ஸீய காலத்து தமிழிலக்கிய எழுத்துக்கள் அகழ்ந்தாராய்ந்து மீண்டும் இலக்கிய பிரிவினை மை பூசிய பொய்மெய்யியலை புகுத்தியது எழுத்திலயக்கிய கயமைத்தனமன்றி வேறென்ன?
வரலாற்றுப் பார்வையும் பொருளியல் பார்வையும் இருகண்களின் விழித்திரைகளிலும் பதிவாகும் ஒற்றை பிம்பமாகத் தானே இருக்கவியலும்.. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குடும்ப அமைப்பியலில் அடுக்குகளை உருவாக்கியது. அவ்வடுக்குகளின் மரணமற்ற ஜீவிதத் தன்மையின் நீட்சியே இன்றைய சாதீய கட்டமைப்பின் நிஜ உள்ளடக்கம். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வேதியல் மாற்றமே சாதீய பிரிவுகளின் சமூகப் படி நிலைகள்...இன்றைய இடஒதுக்கீட்டு பொருளாதர ஏற்றத்தால் சாதீய படி நிலைகள் கலைத்து மீண்டும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் அடுக்கப்படத்தானே வேண்டும். புதைக்கப்பட்ட எந்தசாதி பிள்ளைகளிலும் உடன்பிறந்த குழந்தைகளின் அத்துனை மண்டையோடுகளையும் மாந்திரீகர்கள் தோண்டியெடுப்பதில்லை. தலைச்சன் பிள்ளையின் தலையிலிருந்துதானே மாயங்கள் செய்யும் மை தயாரிக்கவியலும்..என்பதை மாந்த்ரீகன் மறந்தாவிடுவான்..
தமிழிலக்கிய மார்க்ஸீய பொய்யான அமைப்பியல் பார்வை முதலாளித்துவம் மட்டுமே அவலத்தின் காரணியெனில் அது தலைச்சன் பிள்ளை மைவேலையென உரத்துச் சொல்லவியலும் தானே.. வரலாற்றின் திரிபுக் கத்தியால் மரணித்த பிராமணீய தலைச்சன் பிள்ளை மண்டையோட்டைத்தான தோண்டியெடுத்து மை தயாரிக்கச் சொல்கிறது இன்றைய தமிழிலக்கிய இயங்கியல் தத்துவம். பண்டைய புரட்டுச் சொல்லான சாதீயத்தை தோண்டி எடுத்த பெளராணிக கூட்டம் பிராமணர்கள் அல்ல..என்பதை தற்கால சமூகம் அறிந்தே இருக்கிறது. .சமூக அறிவியலும் அறிவியல் சமூகமும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளிகளை உடையதென்பதை எடுத்துச் சொல்லும் அவசியமே இன்றைய தொழில் நுட்ப உச்ச வாழ்வியல் சமூகத்திற்கு இல்லை.
உங்கள் இலக்கியப் பொய்களின் தெருவோரக் கடைகளில் சூழ்ந்திருப்போர் வாசகர்கள் அல்ல. அவர்கள் வாடிக்கையாளர்கள்..எந்தப் புத்தகமெடுத்தாலும் ஒரே விலைதான் என நீங்கள் கூவிக்கொண்டே இருங்கள்..
பொருளாதாரத்தின் பின் தங்கிய சமூகத்திற்கான காரணிகளை ஆராய்ந்தால் அது அரசியல் அமைப்பின் இயங்கியல் போதாமை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென புரியும். எவ்வளவு ஆழமாகத் தோண்டினாலும் தமிழிலக்கியத் தோண்டுவோனின் துழாவும் கைகள் ஆதி பிராமண தலைச்சன் பிள்ளை மண்டையோட்டைத்தான் காலம் காலமாய் தேடுகிறான் என்பது தற்கால தமிழிலக்கிய வரலாற்று நிஜம். இது இன்றைய தமிழிலக்கிய சாதீய அணுகுமுறையின் தரமற்ற அமைப்பியல் சிக்கல்களெனில் அது தீர்வுகளற்றதென்பதே உலக இலக்கியத்தின் பார்வையாக இருக்கிறது..
புரோகித மற்றும் ஜஜ்மான் உறவுகள் மீண்டெழுப்பட்டதன் நிஜ காரணிகள் இன்றைய அரசியலமைப்பின் அதிகாரத்திற்கான பசியின் எச்சங்கள் மட்டுமே.. இன்னமும் பெரியாரிசம் பேசும் எழுத்தாள ஜஜ்மான்களின் குடும்பச் சடங்குகளுக்காக இரு சக்கரவாகனத்தில் அனுதினமும் தமிழக வீதிகளில் அங்கவஸ்திரம் காற்றில் பறக்க வெற்றுடலுடன் வெய்யிலில் அலையும் புரோகிதர்களின் மேல் எந்த அதிகாரப் பார்வை விழுகிறது..? அவர்களின் பொருளாதாரச் சூழலை ஆட்சியதிகாரப் பார்வை தவிர்த்துவிட்டு பாம்பு கீரி வித்தைகாட்டியின் முச்சந்தி விரிப்பில் பையிலிருக்கும் பணக் கற்றைகளை ரத்தம் கக்கி மரணிக்காமல் இருக்க வீசிவிடுவருவது தான் கேலிக்கூத்தின் உச்சம். ஆனால் அவர்கள் புரோகிதத்திற்கான பாண்டித்யத்தை தொடர்ந்து கேலிக்கு உள்ளாக்குவது மட்டுமல்ல அவர்களுக்கான நியாயமான வித்தைகான கற்றல் கூலியைக் கூட மனமுவந்து கொடுப்பதில்லை என்பதை தமிழிலக்கியத்தில் பதிவு செய்துதானே ஆகவேண்டும்..
புதைக்கப்பட்ட கலை இலக்கிய தலைச்சன் பிள்ளை பிணத்தைத் தோண்டியெடுக்க முகமூடியுடன் நள்ளிரவில் அலைந்து கொண்டிருக்கும் எழுத்து மந்திரவாதிகளின் குழிதோண்டும் மண்வெட்டிச் சப்தமும் வரலாற்றின் ஆராய்ச்சி மணி சப்தமும் ஒன்றல்ல... சிபிச்சோழனின் அரண்மனை வாசலின் ஆராய்ச்சி மணி தலைச்சன் பிள்ளை மண்டையோட்டு மையால் ஒருபோதும் ஒலியிழந்து புதைந்து போவதில்லை...
தமிழிலக்கிய இயங்கியல் பார்வை வரலாறு மற்றும் தேச எல்லைகளுக்கு அப்பாலும் பிராமணீயமெனும் பொய்யை தேடித் துலாவுவதற்கான குவியாடிக் கண்ணாடியை அணிந்திருப்பதை காலத்தின் தவிர்க்கவியலா தீர்க்கம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது..
தலைச்சன் பிள்ளையின் மண்டையோட்டைத் தோண்டும் பொழுதிலாவது கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் தோண்டுங்கள்.. அப்போது தான் பிராமண தலைச்சன் பிள்ளை மண்டையோட்டுடன் வரலாற்றுப் பாதையில் நடக்கும் போது பாதை தவறிவிடாமல் பயணிக்க கொஞ்சமாவது சமதர்ம சமூகப் பார்வை மிச்சமிருக்கும்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment