Friday, January 9, 2026

 



சென்னை புத்தகச் சந்தையின் இருப்பைப் பற்றிய கூக்குரல்கள் இன்றைய இளம் தலைமுறைகளின் காதுகளில் விழுகிறதாவெனத் தெரியவில்லை.. இலக்கியம் கலாச்சாரம் பண்பாடு அன்பு பரிதாபம் கோபம் அக்கறை போன்றவைகள் பூசப்பட்ட எழுத்துக்களின் முதல் வரியைக்கூட சமகால இளம் தலைமுறையினர் எவரும் படிப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கோடிக்கணக்கான மானுட கண்கள் வாசிக்கும் ஒரே ஒரு புத்தகம் முகநூல் மட்டும் தான் என்பது உலகளாவிய உண்மை. அப்படியான முகநூலில் எந்தவிதமான எழுத்து அதிக வாசகர்களிடம் ஈர்ப்பைத் தருகிறதென ஆராய்ந்ததின் விளைவை இங்கே தருகிறேன். அரசியல் மற்றும் சினிமா பற்றிய சிற்றின்ப எழுத்துகள் அதிக வீச்சுடன் நிறைய வாசகர்களை சென்றடைகிறதென்பதைத்தான் மறுக்கவியலவில்லை. அதுவும் குறிப்பாக தமிழ் இளம் தலைமுறை வாசகர்கள் அதிகம் வாசிப்பது சினிமா மற்றும் நடிப்பிலிருந்து பாய்ச்சல் அரசியல் நிகழ்த்தும் நவீன சமூக விழிப்புணர்வு பற்றிய எழுத்துக்களே..
போகட்டும்...
ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் எனும் ஆங்கில சினிமா அதாவது ப்ளாக்பஸ்டர் சினிமாக்களின் நாயகி உலக இளைஞர்கள் அத்துனை நபர்களுக்கும் தெரிந்திருப்பது எப்படி என்பது தான் அதிதீவிர ஆராய்ச்சிய்க்குப் பின்னும் புரியவில்லை. ஆங்கிலமே புரியாத தமிழ் இளைஞர்கள் கூட மார்வெல் திரைப்படத்தின் ஆகப்புகழ்பெற்ற சொல்லான ப்ளேக் விடோ எனும் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்..என்பதுதான் வியப்பின் உச்சம்.
சரி அந்த கதாநாயகியின் அழகும் திறமையும் என்ன என்பதை ஆராய்ந்து திறனாய்வு செய்ய மார்வெல் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர் தன் உடலின் மறைத்தே இருக்க வேண்டிய பாகத்தை வெளிக்காட்டி வெளிக்காட்ட வேண்டியவைகளை நன்றாக மறைத்திருக்கிறார். இந்த சூட்சுமம் தான் பின்நவீன எழுத்தின் கருப்பொருள் எனும் புரிதல் கிடைத்தது. ஆக பின்நவீன இலக்கியம் ஏன் மேலைத் தேயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதெனும் மர்ம முடிச்சு மெல்ல அவிழ்ந்தது.. ஒரு பூவின் மடலவிழும் ஓசையும் கேட்க நேர்ந்தது. மேலைத்தேய இரைச்சல் இசையின் ஊடே தான் அதுவும் நிகழ்ந்தது.
ஸ்கார்லெட் ஜோஹன்ஸனின் புகழுடன் இன்றைய தமிழ் கதாநாயகி ஒருவரை ஒப்பிடவேண்டுமெனில் உடன் நயன்தாராதான் நினைவில் வந்தார். சரி அவரின் புகழ்பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் பிறந்ததை மறுக்கவியலவில்லை. இலக்கிய ஒப்பு நோக்கு என்பது வளர்ச்சிக்கான ஏணிப்படி அல்லவா..அதனால் தான். அந்தப் படத்தின் சில காட்சிகளில் அவரின் நிஜ முகத்தைக்கூட சரியாக பார்க்கவியலாத ஒருவித தெய்வீகப் பூச்சை அவரின் உருவத்தின் மீதும் அந்த கதாபாத்திரத்தின் மீதும் என்ணெய் மஞ்சள் விபூதி அபிஷேகங்களுடன் பூசியிருக்கிறார்கள்.
அற்புதமான ஒப்பு நோக்கின் உச்ச வேறுபாடு உடன் புரியத் தொடங்கியது. தொன்று தொட்ட பண்டைய தமிழிலக்கியத்தின் தெய்வீகத் தன்மையின் சாகடிக்கவியலாத நிஜம் புரிந்தது.. நம் கதாநாயகிகளின் தெய்வீகத் தன்மையை மூடியிருக்கும் கேன்வாஸின் அடர்வும் புரிந்தது. இன்றைய தமிழ் இளைய தலைமுறை வாசகர்களைக் கவரவேண்டுமெனில் அல்லது புத்தகச் சந்தைகளுக்கு ஈர்த்தாக வேண்டுமெனில்.. நயன் தாரா படங்களையும் ஸ்கார்லெட் ஜோஹன்ஸனின் படங்களையும் ஒவ்வொரு மாலையிலும் திறந்தவெளித் திரையரங்குகளில் திரையிட்டே ஆகவேண்டும். அப்போதுதான் தமிழின் பின் நவீன காலத்தொடக்கம் நிகழ அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது துணிபு..
ஏன் இந்த வேண்டாத ஆராய்ச்சி என நீங்கள் கேட்கலாம். எழுத்திலிருந்து சினிமாவிற்கு முதலில் தாவ வேண்டும். பிறகு சினிமாவிலிருந்து அரசியலுக்கான பாய்ச்சல் நிகழ்தத்தான். வேறொன்றுமில்லை. வெனிசுலாவில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை பின்பு எப்படித்தான் நிரப்புவது. சொல்லுங்கள்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...