ஈஸ்வர அய்யர் மஞ்சள் கலர் ஜிப்பாவை அணிந்து கொண்டார். அது கொஞ்சம் பளபளப்பாக காணப்பட்டது. உடனே கழற்றி நன்றாக சுருட்டி ஒரு முறுக்கு முறுக்கினார். கசங்கலாக மாற்றி மீண்டும் அணிந்து கொண்டார். கண்ணாடியில் தாடியை நீவிவிடும் ஸ்டைலில் மூத்த எழுத்தாளரின் மெல்லிய கை நடுக்கத்தை பழக்கப்படுத்திக்கொண்டார்..
ஆடியின் உள்ளே ஆடியபடி தன் பிம்பத்தின் பின்னால் யாழினி அயர்ன் பாக்ஸை ப்ளெக்கில் சொருகி சூடுபடுத்துவதைப் பார்த்தார்.
என்னடி பண்ற...
ஏன்ணா புத்தகச் சந்தைக்குப் போகப்போறேள் ங்கறத்துக்காகத்தானே நன்னா அயர்ன் பண்ணி ஒங்க அதிர்ஷ்ட ஜிப்பாவை பளபளன்னு வச்சிருந்தேன். ஏன் இப்புடி கசக்கி கண்றாவியா போட்டுண்டிருக்கேள்..கழட்டுங்கோ... ஒரு செகண்ட்ல மறுபடியும் அயர்ன் பண்ணித்தந்துடறேன்..
ஒன்னும் வேண்டாண்டி... நான் என்ன பொஸ்தகம் வாங்கவா போறேன். என்னோட பொஸ்தகமெல்லாம் யாராவது வாங்கறாளான்னு பார்க்கத்தாண்டி போறேன். அபிஷ்ட்டு.. பொறப்படறப்ப எதுத்தாப்ல வராம...அபசகுணம் மாதிரி அயர்ண் பண்றாளாம்..
இல்லண்ணா ஒங்கள பார்த்தா எதாவது புது எழுத்தாள பொண்ணோ ஆண்டியோ ஒங்களண்ட ஆட்டோகிராப் கேப்பா.. அப்புடியே ஒரு போட்டோ எடுத்துக்கறேன்பா..ஒங்களுக்கும் ஒங்க பொஸ்தகம் விக்கற ஸ்டால் முன்னாடி செல்பி எடுத்துக்கணும்னு தோணும். அதான் ஜிப்பாவ நன்னா அயர்ண் பண்ணி போட்டுண்டு போட்டோ எடுத்து பேஸ் புக்ல போட்டா நன்னா இருக்க வேண்டாமா. அதனால தான் சொல்றேன்.. கழட்டுங்கோ.. ராகு காலம் முடிய இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.. மூத்த முற்போக்கு பிரபல எழுத்தாளரா லட்சணமா இல்லாம..கசக்கி போட்டுண்டு போறேளே.. கண்றாவி...கண்றாவி...
ஈஸ்வர அய்யரின் தலையில் தட்டியபடியே யாழினி மாமி ஜிப்பாவைக் கழட்ட எத்தனித்தாள்..
ஏண்டி வளர்ந்து வர்ற இளம் ஆம்பள எழுத்தாள கொழந்தைங்க என்னண்ட ஆட்டோகிராப் வாங்கமாட்டாளா..நோக்கு பொறாமைடி..பொறாமை.. அதனாலதான் ஆண்டியோட போட்டோ எடுத்துக்கனும்னு சொல்லாம சொல்றயா... பாரு பாரு... நீ பொறாமை படறமாறி ஒரு சின்னப் பொண்ணோட போட்டோ எடுத்துப் போடல... எம்பேரு ஈஸ்வரய்யர் இல்லடி..சொல்லிட்டேன்..
வெகுண்டெழுந்த எழுத்தாளரின் வார்த்தைகளின் கங்குலின் வெப்பத்தில் யாழினி கொஞ்சம் பயந்து தான் போனாள்..
சூடு தணிய எச்சில் தெறிக்கும் வார்த்தைகளில்..ஏன்ணா..கோவிச்சுக்கறேள்..அழகா இருக்கறவாளோட போட்டோ எடுத்துக்க நீங்களும் அழகா இருக்க வேண்டாமா..அதான் சொன்னேன்..
யாழினியின் எச்சில் ஈரத்தில் கொதிக்கும் சூழலிய சூடு குறையும் விந்தையை தன் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார். அடுத்த நாவலில் இச்சூழலை எதிலாவது சொருகிவிடவேண்டுமென நினைத்து நடுங்கிய கைகளால் தாடியை நீவிக்கொண்டார்..
அதெல்லாம் ஒன்னும் வேண்டாண்டி... நன்னா டீக்கா டிரெஸ் போட்டுண்டு போனா.. இவனுக்கு இப்போ பணக்கஷ்டமெல்லாம் இல்ல போல்ருக்குன்னு நெனைச்சுண்டு என்னோட நலநிதி வசூல நிறுத்திடுவா..ஏற்கனவே ராயல்டிங்கற ஒன்னையே எல்லோரும் மறந்துட்டா.. அதான் ஜிப்பாவ கசக்கி சுருக்கம் தெரியறாமாதிரி போட்டுண்டுடிருக்கேன். இப்போ போனா போறதுன்னு பாவப்பட்டு நிதி வசூல் பண்ணி குடுப்பா... ஒரு எழுத்தாளனுக்கு நலநிதி வசூல் எவ்ளோன்னு தெரிஞ்சாத் தானே அவனோட அங்கீகாரத்தோட உயரமே புரியும்.. நோக்கு எங்க இதெல்லாம் தெரியப்போறது...நகந்துக்கோடி.. வாயக்கொப்புளி...எச்சல் தெறிக்கறது.. டைம் வேற ஆயிடுத்து...ராகுகாலம் முடிஞ்ச ஒடன நீ வாசல்லேர்ந்து உள்ள வா..கொடுக்கப்போற பொற்கிழி கனத்துலயே ஒன்னோட சகுனத்தோட கனம் தெரிஞ்சுடும்டி..
ஜோல்னா பையை எடுத்து மீண்டும் கசக்கி ஒன்றிரண்டு வெற்றுக் காகிதங்களை அதனுள் செருகி தோளில் மாட்டிக்கொண்டார்..
அய்யரின் செய்கைச் சிறகுகள் மடித்த விருட்டென்று மூக்கின் மேல் வந்தமர்ந்த கோப காகத்தைச் சூ வென விரட்டிய யாழினி...
அதுக்கில்லேன்னா... நீங்க பொஸ்தகம் வெளியிடறேளோ இல்லையோ டெய்லி ஒங்க போட்டோவ பேஸ்புக்ல போட்டுடுவேளே... அதனால தான் சொன்னேன்..
சொல்லிக்கொண்டே..யாழினி... ப்ளெக்கை வேகமாக கழற்றுவதான பாவனையில் புறம் கையால் ஈஸ்வரய்யரின் முகத்தில் ஒரு பின்குத்து விட்டாள்..
அது இலக்கிய உள்குத்து வலியை விட மேலதிக வலியைத் தந்தது அய்யருக்கு.. ஓ வென கத்தியே விட்டார் அய்யர்..
புஸ்தகம் போடவில்லையென்றாலும் பரவாயில்லை போட்டோ போடவில்லையென்றால் அன்று தூக்கம் வராதெனும் உண்மை வேறு ஈஸ்வர அய்யரின் பொட்டில் அறைந்தது..
வாடி... வந்து அயர்ண் பண்ணித் தொலை.. நீ சொல்றத கேக்களேன்னா இன்னிக்கி நைட் சப்பாத்திய வேகாத பச்சை மாவா போட்டு என்னோட கழுத்த அறுப்ப..வா வந்து அயர்ண் பண்ணு..இன்னிக்கி பொஸ்தக சந்தையில நான் பேசனும்னு வேற சொல்லிருக்கா... பாத்து ப்ளெக்க சொருகு...மறுபடியும் மூஞ்சில குத்திப்பிடாத... ரொம்ப வலிக்கறது..
உதறும் கைகளா ஜிப்பாவைக் கழற்றத் தொடங்கினார் ஈஸ்வரய்யர்...
வேகாத சப்பாத்தி சர்ரியலிய வகைமைன்னு சொல்லுவேளே... யாழினி ஒரு மந்தகாச புன்னகையுடன் ஜிப்பாவை வாங்கி அயர்ண் பாக்ஸால் தேய்க்க ஆரம்பித்தாள் யாழினி..
முண்டா பனியனுடன் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் இப்படியும் அப்படியுமாகப் பார்த்தார் அய்யர். உடனே ஒரு செல்பி எடுத்து பேஸ்புக்கில் அந்தப் போட்டோவை பதிவேற்றினார்..
சட்டையற்ற சர்ரியலிச எழுத்துச் சக்ரவர்த்தியின் மனைவியுடனான சண்டையின் காரணிகளை கோர்த்திருக்கும் கயிற்றில் மின்சாரம் பாய்வதில்லை...எனும் வரியை தட்டச்சினார்.. ஒரு மணி நேரமாக கைபேசியில் அந்தப் பதிவைப் பார்த்தபடியே இருந்தார். ஒரு விருப்பக்குறி கூட வரவில்லை..
ராகுகாலத்திற்குப் பின்னான நல்ல நேரத்தைத் தவறவிட்டால் உடன் எமகண்டம் வந்துவிடும் என்பதை யாழினி சூடான ஜிப்பாவை அய்யரின் கையில் கொடுத்தபடியே ஞாபகப்படுத்தினாள்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment