Tuesday, January 6, 2026

 1980 களில் சினிமா என்பது மட்டுமே இளைஞர்களின் கனவாக இருந்தது. பெரும்பாலும் ஏழைமாணவர்களே அரசு கலைக்கல்லூரிகளில் படித்தார்கள். மாணவிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கல்லூரி படிப்பு படித்த காலமது. பெரும்பாலான வகுப்பறைகள் காலை நேர காட்சிகள் அறிமுகமான அக்காலத்தில் காலியாகவே கிடந்தன என்பதை இப்போது நம்புதல் கடினம்.

எட்டுமணிக்கெல்லாம் நண்பர்கள் திருவாரூரின் பேரூர்ந்து நிலையத்தில் கூடிவிடுவோம். அதற்கு முன்பே சீனியர் மாணவர்களின் குழாமும் அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும். எங்கள் கலைக்கல்லூரியின் ஒற்றை இலக்கப் பெண்கள் குழாம் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரிடத்தில் கூடுவார்கள்.. கல்லூரியின் பஞ்சவர்ணக் கிளிகள் அமரும் கனவு ஏரியின் நடுவில் இருக்கும் ஒற்றை மரம் அப்பேரூர்ந்து நிறுத்தம். அவ்விடம் நோக்கி மெல்ல எங்கள் கல்லூரி மாணவ மிதவைக் குழாம் எல்லா திசைகளில் இருந்தும் நகரும். அந்நகர்வதென்பது கனவு மெய்மையியல் தூரிகை வரைந்த எங்களின் பொறாமை மிகு சர்ரியலிச வாழ்வின் அழிக்கவியலா ஓவிய நாட்கள்.
எங்கள் நண்பர்களில் ஒரே ஒரு பணக்கார நண்பன் மட்டும் இருந்தான். அவன் அடிக்கடி சென்னை சென்று ஏதாவதொரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு வந்து கதை சொல்வான்.
ஒரு நாள் காலையிலேயே கதையைத் தொடங்கினான்.
எங்கள் நண்பர்களில் இன்னொரு சினிமா இயக்குனர் ஆகும் கனவுடன் மிதக்கும் நண்பனிடம் கதை சொல்லத் தொடங்கினான். அதுவரை பஞ்சவர்ணக்கிளிகளில் எதுவும் இன்னும் மரம் நோக்கிப் பறந்து வரத்தொடங்கவில்லை.
அது ஒரு லத்தீன் அமெரிக்கப்படமென அவன் சொன்னபோது எங்கள் அனைவரின் வாயும் மெல்ல கதவுத் தாழ்பாளைத் தளர்த்தியது. அமெரிக்காவின் நடுவில் லத்தீன் அமெரிக்க இருக்குமென்றான் அவன். சென்னை ப்ளாசாவில் அந்தப்படம் பார்த்துவந்ததாகவும் சொன்னபோது எங்களனைவரின் வாய்க்கதவமும் நன்றாகவே திறந்துவிட்டது.
பாரதிராஜாவிற்கு முந்தைய காலகட்ட கனவு தேவதை தேவிகாவைப் பார்த்து பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என சிவாஜி பாடுவது போல லத்தீன் அமெரிக்க கனவு தேவதை எந்த உடையில் இருந்தாள் எனக்கேட்டான் எங்கள் பீம்சிங்.
உடனே ப்ளாசாவரை சென்று சினிமா அதுவும் ஆங்கில சினிமா பார்த்துவரும் நண்பன்.. ஈஸ் திஸ் த பாடி சீன் இன் த லாங் கெளவுன் என பாடிவேறு காட்டினான். இதைக் கொஞ்சம் சர்ச்சுகளில் பாடும் கார்ட்ஸ் இசையுடன் பாடிப்பாருங்கள் தெய்வீகமாக இருக்கும்.. அப்படியான நினைவின் வாய்வாசல் திறந்திருந்த போது தான் பருத்த ஈ ஒன்று எல்லோர் வாயிலும் புகுந்து வெளிவந்தது.
அந்த ஆங்கில கனவு தேவதையின் பெயர் எக்ஸ்டெர்மினேடிங் ஏஞ்சல் என்றும் சொன்னான். அப்போதெல்லாம் திருவாரூரில் கொலுசு தெரியும்படி கூட பாவாடை அணிந்து வரும் மாணவிகளைப் பார்ப்பது அரிது. மேலதிகமாக கணுக்கால் தெரிந்தால் போதும் கனவு மெய்படும் எங்களுக்கு..
அந்த நேரம் பார்த்து எங்கள் கல்லூரியின் தேவிகா வழக்கமாக அமரும் கிளையில் தன் வர்ணங்களை வாரி இறைத்தபடி வந்து நின்றுகொண்டாள். நல்லவேளை எங்களின் இதய மரக்கிளை முறிந்து விழவில்லை..
நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு நண்பன் பாட எங்கள் பீம்சிங்கிற்கு கோபம் வந்துவிட்டது. நாங்கள் உடனே புரிந்துகொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று கோரஸாக பாட தேவிகாவை நம்பியார் சுட்டு வீழ்த்திவிட்டார்.
பிறகான ஒரு நாள் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த பசித்த மதியத்தில் தேவிகாவை எதேட்சையாய் பார்க்க நேர்ந்தது. அதுவும் ப்ளாசாவின் அருகில்.. அப்போது ப்ளாசாவில் தி எக்ஸ்டெர்மினேடிங் ஏஞ்சல் என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது..
அது சினிமா படத்தின் டைட்டில் பெயர். லத்தீன் அமெரிக்கக் கதாநாயகியின் பெயர் இல்லை என்பது புரிந்தது. அந்த தேவ வேளையில் தேவிகா இறங்கி என்னை நோக்கி வந்தாள்.. அட இது எங்கள் கல்லூரி தேவிகா என புரிய நீண்ட நேரம் பிடித்தது எனக்கு.. உடன் எங்காவது பீம்சிங் தென்படுகிறானா எனப் பார்த்தேன். அவள் மட்டும் தான் வந்திருந்தாள்.. அதுவும் சுடிதாரில்.. எக்ஸ்டெர்மினேடிங் எழுத்துகளில் எக்ஸெக்ஸெல் எனும் எழுத்துக்கள் சுடிதாரில் எழுதியிருந்தது.
எப்படி இருக்கீங்க என்றாள்...
மனமெல்லாம்.... கேட்டது நீதானா சொல்... சொல்... எனும் பாட்டு ஒலிக்கத் தொடங்கியது.. கூடவே ஈஸ் திஸ் த எஞ்சல் சீன் இன் பாவாடை தாவணியில் என்ற பீம்சிங்கின் குரலும் கேட்டது..
என்ன பதில் சொல்வதென்றெனக்கு இன்று வரை தெரியவில்லை..
ராகவபிரியன்




No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...