Monday, April 8, 2019

கோவில்களில் அதுவும் பெருமாள் கோவில்களில் பூஜைகள் செய்வோர் தங்களது தனிப்பட்ட நியமங்களையும் கோவில் பூஜைகளில் செய்ய வேண்டிய ஆகமவிதிப்படியான பூஜைகளையும் செய்யத் தவறினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது புராணங்களிலும் நமது முன்னோர்கள் பதிவு செய்து சென்ற ஆன்மீக வரலாற்று நூல்களிலும் காணக்கிடைக்கின்றன...
பொது ஆண்டிற்கு முன் அதாவது பொ ஆ மு சுமார் 6000 வருடங்கள் முன்பே கோவில் பூஜைக்கான ஆகம விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன..சமீபத்திய அதாவது போஆமு சுமார் 500 வருடங்களுக்கு முன்னான ஆகம விதிகளடங்கிய சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகள் இன்னமும் தஞ்சையின் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளன..
பொழுதுபோக்காகவோ பரம்பரை உரிமையாகவோ ஆகமவிதிகளை சரியாகக் கற்காமல் முறையான பயிற்சியை அதற்கான வேதபாடசாலைகளில் எடுத்துக்கொள்ளாமல் அரங்க விக்ரஹத்தைத் தொட்டு பூஜைகளை செய்தால் அரங்கனின் கோபம் சில நூற்றாண்டுகள் தொடரும் என வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..பொ.ஆ.பி சுமார் ஆயிரம் வருடங்கள் நமது கோவில்களில் பூஜைகள் சரிவர செய்யாததால் வேற்று மத தாக்குதல்களையும் கோவில்கள் சூரையாடப்பட்டதையும் வரலாறுகள் பதிவுசெய்திருக்கின்றன...
நீ யார் எங்களைக் கேள்வி கேட்பது என்ற மனோபாவம் இப்போது நிறைய அர்ச்சகர்களிடமும் பட்டாச்சார்யர்களிடமும் இருப்பதைக் கண்டு என்னுள் சில அதிர்வுகள் நில அதிர்வுகளாய் நிரந்தர பாதிப்பை உருவாக்குகின்றன..2000 மாவது ஆண்டு ஒரு சைவ மடத்துறவி திருப்பதி ஏழு மலையான் விக்ரஹத்தை தொட்டு பூஜைகள் செய்ததையும் அதன் பின் அவர் சந்தித்த அவமானங்களையும் நாடறியும்..
அரங்கன் நிஜம் என்பதை அரங்கனுக்கான முறையான பூஜைகள் செய்வோர் உணர்வு பூர்வமாய் அனுபவித்திருப்பர்..ராமன் லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் காட்டிற்கு வந்து சேர்ந்த முதல் நாள் இரவு..காட்டின் கொடுமையான சூழலில் அதன் கொடுமைகளை விவரிக்க முடியா துன்பங்களை...அரச போகங்களை அனுபவித்துப்பழகிய லக்ஷ்மணன்...அனுபவிக்க தன் முடிவில் திடமாய் உறுதியாய் இருக்கிறானா என சோதிக்கிறார் பரம்பொருள்..
ஒரு ஸ்லோகத்தில் வால்மீகி தசரதரை காமத்தால் குருடனாகி தர்மத்திலிருந்து தவறிவிட்டார் என்றே கூறுகிறார்..மேலும் லக்ஷ்மணனைச் சோதிக்க ராமன் கூறும் ஸ்லோகங்களில் ஸ்ரீரங்க விமானத்திற்கான அரண்மனை பூஜைகளில் தொய்வு நேர்ந்ததையும் அதன் விளைவால் தான் அதர்மம் அரசனுருவிலேயே வந்து அரண்மனையையும் நாட்டையும் தாங்கவொன்னாத் துயரில் ஆழ்த்தியதையும் குறிப்பிடுகிறார்...அதனால் லஷ்மணா நீ உடனே திரும்பி அயோத்திக்குப் போய்விடு என்ற போது லக்ஷ்மணன் தான் இல்லாவிட்டால் பரம்பொருளால் தூங்க முடியாதென உறுதியாகச் சொல்லி ஸ்ரீராமனை சம்மதிக்க வைத்து பதினாங்காண்டுகள் உறங்காமல் சேவை செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது....
அந்த ஸ்லோகம்...
ததஸ்து தஸ்மித் விஜநே வநேததா
மஹாபவலள ராகவ வம்ஸ வர்ததெள
ததெள பயம் ஸ்ம்ப்ரம மப்யுபேயது:
யதைவ ஸிம்ஹெள கிரிஸானு கோசரெள...
தரசதர் காமத்தால் ஆட்பட்டு அரங்கனுக்கான பூஜைகளில் அலட்சியம் செய்ததால் அயோத்தியிலிருந்த ஸ்ரீரங்க விமானமே விபீஷணனால் தூக்கி வரப்பட்டு இங்கே நம் வாழ்வின் வசந்தங்களுக்காக அரங்கனால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது..நாம் எவ்வளவு பாக்கிய சாலிகள்..திருவரங்கத்தில் மொகலாய படையெடுப்பால் எவ்வளவு உயிர்சேதம் பொருட்சேதம் பக்தி சேதம் முதலியவைகள் நடந்தன..[.கோவிலில் போட்டியும் பொறாமையும் திருவிழாக்களிலும் ஆராட்டுகளிலும் அலட்சியம் போன்ற தகாத செயல்களால் ...]ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகரும் வரலாறும் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் அரங்க பூஜைகளில் அலட்சியம் செய்தால் அதற்கான பாதிப்புகளை அனைவரும் அனுபவிக்க நேரிடும் என்பதுதான்...
இதற்கும் மேல் விதியென்று ஒன்றிருக்கிறது...அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்..அரங்கா..எங்களின் தவறுகளைப் பொறுத்தருள வேண்டும்...உன் பூஜைகள் நியமமாக நடந்திட நீயே அருள் புரிய வேண்டும்...
வேணும் தாஸன்..ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...